வெற்றி அறுவடை செய்வது எப்படி?| Dinamalar

வெற்றி அறுவடை செய்வது எப்படி?

Added : ஏப் 27, 2015 | கருத்துகள் (3)
வெற்றி அறுவடை செய்வது எப்படி?

''பிள்ளைகள் படிக்க வேண்டாம்,பிரம்படிப் படவும் வேண்டாம்,சல்லையால் (துன்பம்) சுவடி (புத்தகம்) துாக்கிச்சங்கடப் படவும் வேண்டாம்பிள்ளை என்றிருந்தால் போதும் பெற்றவள் களிக்க (மகிழ்ச்சி) என்றான்''
-இருபத்தேழு குழந்தைகள் பெற்ற குசேலர் கூறுவதாக அமைந்த ஒரு பாடல் இது. அன்று குழந்தைகள் துன்பப்பட்டு படிக்கத் தேவையில்லை என்று சொன்னதற்குக் காரணம், நிலமென்னும் நல்லாள் வளமையை வாரி, வாரி வழங்கினாள்.
படிப்பை ஒரு பொருட்டாக மக்கள் நினைக்கவில்லை. வாழ்க்கை தராத பட்டறிவை விட, படிப்பறிவு நமக்கு என்ன தரப்போகிறது என்று இருந்தனர். 'குளம் வத்தி மீன் பிடிச்சாப் போதும், கூடப்பிறந்த பிறப்புன்னு இருந்தாப் போதும்' என்று வாழ்க்கைக்கு பணம் மிக அவசியமில்லை. நல்ல குணத்தோடு உடன் பிறந்தார் ஒன்றாக இருந்தால் போதுமென்று வாழ்ந்த காலங்கள் அவை. கல்வி கற்கவும் ஆளில்லை, களவு செய்யவும் ஆளில்லை. மக்கள் உண்மைத் தன்மையோடு ஒழுக்கமாக வாழ்ந்தனர்.
அடுத்த கால கட்டத்தில் :மக்களின் மனநிலையில் கொஞ்சம் மாற்றம் வந்தது. உழைப்பது அவர்களுக்குக் கொஞ்சம் கடினமாகத் தெரிந்தது. உற்பத்தி குறைய ஆரம்பித்தது. அப்போது நாகரிகம் என்ற நிலையில் குழந்தைகளைப் படிக்க வைத்தனர்.
''அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,ஆலயம் பதினாயிரம் நாட்டல்அன்னயாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்''எனக் கல்வியின் மகத்துவத்தைக் கண்டறிந்தனர்.
ஆசிரியருக்கு மரியாதை முருங்கையை ஒடிச்சு வளர்க்கனும், பிள்ளையை அடிச்சு வளர்க்கனும் என எண்ணினர் பெற்றோர். கல்வி கற்கப் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடித்துப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைப் பார்த்தால், பெற்றோர்களே தோளில் கிடக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கும்பிட்டுக் கொண்டே 'என் புள்ள எப்படி சார் படிக்கிறான்(ள்). நல்லாப் படிக்கலைன்னா அடிச்சாவது படிக்க வச்சிருங்க சார்' என்று அன்போடும் மரியாதையோடும் சொன்ன காலங்கள் ஆசிரியர்களுக்குச் சொர்க்கமாகத் தெரிந்தது.
ஆசிரியரைப் பார்த்தால் எழுந்து மரியாதை செலுத்துமளவிற்கு சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு மதிப்பு இருந்தது. அதனால் தான் அக்காலத்தில் வாக்குக் கற்றவர்கள் வாத்தியாராகத் தெரிந்தனர்.''தோல்ன்னு இருந்தா தப்புக் (பறையடித்தல்) கொட்ட ஒதவனும், ஆள்ன்னு இருந்தா அறிவோடு இருக்கனும்'' என்று கல்வியின் அவசியத்தைப் புரிந்து கொண்டனர். ஒரு கிராமத்தில் ஆசிரியர் குடியிருக்கிறார் என்றால் அந்த ஊர் மக்கள் அனைவரும்மரியாதை கொடுப்பர். ஆசிரியர் வீட்டுப் புள்ளைகள் என குழந்தைகளுக்கும் மரியாதை தருவர். கல்வியைக் கற்றுத் தரும் கடவுளாக ஆசிரியரை மக்கள் நினைத்த காலம் அது.
இன்று குழந்தைகள் நிலை :பாரதி குழந்தைகளைத் தெய்வத்திற்குச் சமமாகக் கூறினார். ஆனால் இன்று? வார்த்தா தீர்த்தம், சட்டியில ஊத்துனாத் தண்ணி, பள்ளியில படிச்சாத்தான் ஒழுக்கமான புள்ளை' என நினைத்துப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் தவறு செய்யும் பிள்ளைகளைத் தட்டிக் கேட்க முடியாமல் கைகட்டி, வாய் பொத்தி ஆசிரியர் இருக்கவேண்டிய அவலநிலை. பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்றால் அவர்களைப் படிக்க வைப்பது எப்படி? தேர்வில் பிட் அடித்தால், தவறு செய்வதைத் தட்டிக் கேட்டால் 'ஒங்க பெயரை எழுதி வச்சிட்டுச் செத்துப் போவேன் சார்' என்கிறார்கள். இந்த மனநிலையில் மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும்.
அன்புக் குழந்தைகளே! உங்கள் எதிர்காலம் இனிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஓர் ஆத்மா என்றால், அது ஆசிரியர்கள் தான். விடலைப் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் காட்டாற்று வெள்ளம் போல, கண்டபடி போக நினைப்பர். அதைக் கட்டுப்படுத்தும் பக்குவம் பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியர்களுக்குத் தான் உண்டு. ஆசிரியர் உங்களை கண்டிக்கிறார் என்றால் உங்கள் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறார் என்று அர்த்தம்.
இளமைக் காலம் என்பது வாழ்க்கையின் வசந்த காலம் மட்டுமல்ல, அது விதைப்புக் காலம், படிப்பென்னும் விதையை விதையுங்கள். பின்பு வெற்றியை அறுவடை செய்யலாம். வெற்றி என்பதும் தானாக வராது, அது உழைப்பென்ற வியர்வைத் துளியின் விளைச்சல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முயற்சி முக்கியம் :குழந்தைகளே! முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைப் பிடிக்கும். முயற்சியோடு எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிகொடுக்கும். லட்சியம் இல்லாத வாழ்க்கைத் துடுப்பு இல்லாதப் படகைப் போன்றது. அது காற்றுக்கு அசையலாம். ஆனால் கரை சேர முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னேறுவதற்குக் கடிகாரம் போல ஓயாமல் ஓடு. மணி முள்ளைப் போல மந்தமாக அல்ல. நொடிமுள்ளை விட வேகமாக ஓடு.
உளிபடாத கல் சிலையாவதில்லை. காலத்தே படிப்பில்லாத வாழ்க்கை நிம்மதி தருவதில்லை. முயற்சி என்னும் சிறகுகளைக் கத்தரித்துவிட்டு பறக்க நினைத்தால் படுபாதாளத்தில் போய் விழுந்து விடுவாய். எதிலும் திட்டமிடல் வேண்டும். அவசரப்படக் கூடாது. இளமைப் பருவத்தில் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகள் முட்களாகத் தான் குத்தும். வருத்தப்படக் கூடாது. முட்கள் இருக்கிறது என்று மென்மையான ரோஜா மலராமலா இருக்கிறது. அந்த முட்களைக் கொண்டே உங்களுக்குள் ஒரு வேலி அமைத்துக் கொள்ளுங்கள். முன்னேற்றம் காண்பாய். சோம்பல் உன்னை எளிமையாக ஏமாற்றிவிடும். சோம்பலுக்கு ஒரு நாளைக் கொடுத்தாய் என்றால் அது அடுத்த நாளையும் அபகரிக்கும்.
விடா முயற்சியுடன் நல்ல செயல்கள் செய்வதைத் தான் விவேகத்தின் லட்சியம் என்பர். ஒவ்வொரு தினத்தின் விடா முயற்சியே வாரம், வாரத்தின் செயலே மாதம், மாதத்தின் உழைப்பே ஆண்டு, என மாறி அது தான் காலமாகக் கணக்கிடப்படுகின்றது. நாம் காலம் கடந்தும் பேசப்பட வேண்டுமென்றால் உழைப்பினை உதறித் தள்ளக் கூடாது.
அருமைக் குழந்தைகளே! உங்கள் எதிர்காலத்தைக் கணிக்கும் வல்லுநர்கள் ஆசிரியர்கள். மாணவப் பருவம் மகத்தானது. அதற்கு இளமைப் பருவமாகிய கல்விப் பருவம் தான் என்றும் கைக் கொடுக்கும். ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொள். மானுடம் உன்னை வணங்கும். எதிர்காலம் உன்னை இரு கரம் கொண்டு வரவேற்கும். சிந்தையில் இதனை இருத்திக் கொள்.
-முனைவர்.கெ.செல்லத்தாய்தலைவர், தமிழ்த் துறைஎஸ்.பி.கே. கல்லூரி, அருப்புக்கோட்டை.94420 61060sellathai03@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X