கவனிக்கப்படவேண்டிய கல்வி ஆண்டுத்திட்டம்

Added : ஏப் 28, 2015
Advertisement
கவனிக்கப்படவேண்டிய கல்வி ஆண்டுத்திட்டம்

கல்வி ஆண்டுத் திட்டத்திற்கான கால அட்டவணை சரியான முறையில் கடைப்பிடிக்கப்படாததால், சொல்லி மாள முடியாத அளவிற்கு கல்லூரிகளில் கடைசிஆண்டு படிக்கும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.கல்லூரிகளுக்குத் தேர்வு மே வரை நடப்பதால் நிறைய நிர்வாகக் குளறுபடிகளும் நடைபெறுகின்றன. பல்கலைக்கழக அளவிலும் வளர்ச்சிப் பாதைக்கு தடையாக தெரிகிறது. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது தர மேம்பாடு என்னும் நிலையில், வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு முக்கியமாகப் பார்க்கவேண்டியது நமது கல்விக்கொள்கையும் அதன் வெளிப்பாடும்தான். பல்கலைக்கழகங்கள் தங்களின் கல்வி ஆண்டுத் திட்டப் பணிகளில் தெளிவாக இருக்க வேண்டும். எந்த மாதத்தில் கல்லூரி திறக்க வேண்டும், கல்வியாண்டு நிறைவு பெற வேண்டும் என்பதில் வரையறை தேவை. குறிப்பாக, ஜூலையில் கல்லூரிகள் திறந்தால் மார்ச் மாதத்தில் எல்லாம் முடிந்துவிடவேண்டும். இது பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொருந்துவதாக இருக்கவேண்டும். குறிப்பிட்ட தேதியில் கல்லூரிகள் திறப்பதும், மேமாதம் வரை அந்த வருடத்திற்கான கால அட்டவணையை வைத்துக் கொள்வதுமாக ஒவ்வொரு கல்லூரியும் மாறுபட்டு உள்ளது. இது மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் ஏன் பல்கலைக்கழகத்திற்குமே பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக 'டான்செட்' தகுதித் தேர்வுக்கான தேதி மே 20ம் தேதி. ஆனால் கடைசி ஆண்டு படிக்கும் மாணவனுக்கு சில கல்லுரிகளில் ஆண்டிறுதித் தேர்வுகளே மே மாதத்தின் இறுதி வரை நடக்கின்றன. இதில் மாணவர்கள் எப்படி அந்தத் தகுதித் தேர்வுக்குத்தயார் செய்ய முடியும்? கடந்த ஆண்டு இந்தத் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடந்துள்ளது. இந்தக் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம் நாம் இவ்வருடத்திற்கான கால அட்டவணையைச் சரியாக வரையறை செய்யாததுதான். நம்முடைய மாணவர்கள் உயர்ந்த கல்லூரிகளில் சேர்வதற்கு உதவுவதாக தான் கால அட்டவணை அமைய வேண்டும்.


மாணவர்களுக்கான பயன்கள்:

தமிழகத்தில் இளங்கலைப் படிப்பு முடிக்கும் மாணவர்கள் மேற்படிப்பினை முறையான வகையில் திட்டமிட்டு IIT,IIM, IISc, BITS, CAT, MAT, TANCET போன்ற தகுதித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி தகுதித் தேர்வுகளில் தமிழகத்திலிருந்து அதிகம் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும், என்ற நிலைப்பாட்டுடன் நமது கால அட்டவணை எல்லாக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மார்ச் மாதத்தில் கல்லூரி முடியும் என்று தெளிவாகத் தெரிந்தால் மாணவர்கள் திட்டமிட முடியும். சிலர் வெளி நாடுகளில் சென்று உயர் படிப்புப் படிக்க முயற்சி செய்யலாம். அல்லது இங்கே சில துறை சார்ந்த படிப்புகளுக்கான தகுதித் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஏப்ரல், மே ஆகிய மாத கால இடைவெளியினைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.


கல்லூரிகளுக்கான பலன்கள்:

இந்த இரண்டு மாதங்களில் தங்களின் அடுத்த வருடத்திற்கான தேவைகளுக்குத் தயார்படுத்திக்கொள்ள முடியும். புதிய மாணவர்கள் சேர்ப்பது என்பது பெரியவேலை. அதற்கான செயல்முறைகளைச் செய்வதற்காக இந்த மாதங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கும், புதிதாய் சேரவுள்ள மாணவர்களுக்கும் கல்லூரிகளில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம். மாணவர்களுக்குத் சிறப்புத் தேர்வுகளுக்குத் தேவையான கோச்சிங் வகுப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்தலாம். இது அக்கல்லூரி மாணவர்களுக்கு செய்யும் சேவையாக இருக்கும். கல்லூரிகளில் கோடையில் ஏற்படும் தண்ணீர் கஷ்டம், மின்சாரப் பற்றாக்குறை, போக்குவரத்து மற்றும் நிர்வாகச் செலவுகளும் இந்த 2 மாதங்களில் குறையும். ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி அடுத்து வரப்போகும் மாணவர்களுக்கு எந்தப் புதிய அணுகுமுறை தேவைப்படும் என்பதைச் சொல்லலாம். அடுத்த வருடத்தின் கல்விக் கொள்கைகளை எடுத்துச் சொல்லித் தேவையான அளவிற்கு ஆசிரியர்களையும் தயார்படுத்தி வைக்கலாம்.


பல்கலைக் கழகங்களுக்கான பலன்கள்:

இன்றைய உலகத் தர வரிசையில் நமது பல்கலைக்கழகங்களின் இடம் மிகவும் குறைவே. இதைக் கவனித்து இதற்குத் தேவையான, தகுதியான விஷயங்களில் ஒரு குழு அமைத்து இந்த இரு மாதங்களில் செயல்படலாம். அடுத்த நிலைக்கு பல்கலைக்கழகங்கள் போகவேண்டும், உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும்? உலக அளவில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். வெளிநாடு மாணவர்கள் இங்கு வந்து நமது பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த இரு மாதங்கள் உதவும். இது ஒரு கூட்டு முயற்சிதான். பல்கலைக்கழகங்கள் தெளிவாகச் செயல்பட்டு ஒரு ஒருங்கிணைந்த கால திட்டத்தை வரையறுத்தால் சம்பந்தப்பட்ட அனைவரும் நல்ல பலன்கள் அடைவார்கள். இதுநம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தர மேம்பாட்டிற்கான முதல் படிக்கட்டாக அமையும்.


- முனைவர் எஸ்.ராஜசேகர் இயக்குனர், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் 90958 99955 rajasekar@rlims.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X