வீட்டுக்கு வந்த சித்ராவை அழைத்துக் கொண்டு, காய்கறி மார்க்கெட்டுக்கு புறப்பட்டாள் மித்ரா.ஸ்கூட்டரை எடுப்பதற்கு முன், "டிரைவிங் லைசன்சை' ஒருமுறை எடுத்துப்பார்த்து, பர்ஸில் வைத்தாள்.அதைப்பார்த்த சித்ரா, ""என்ன? புதுசா லைசன்ஸ் எடுத்து வைக்கிற. போலீஸ் "கெடுபிடி' ஜாஸ்தியாயிருச்சா,'' என, கேட்டாள்.""அதெல்லாம் இல்லக்கா. சோதனைங்கிற பேர்ல, சிலர் பணம் பறிக்கிறாங்க. வேலம்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., ஒருத்தர், இளைஞர் காவல் படையினரோடு வாகன சோதனையை மட்டும், "கடமை'யா செய்றார். ரெண்டு நாளைக்கு முன்னாடி, "பஞ்சர்' ஆன பைக்கை தள்ளிட்டு, ஒரு சிறுவன் போயிருக்கான். அவனை நிறுத்தி, லைசன்ஸ் இருக்கா; ஆர்.சி., இருக்கா என கேள்வி கேட்டு மிரள வைத்துள்ளனர். கடைசியா, 600 ரூபாய் "வசூலித்து' விட்டு, அனுப்பி இருக்கின்றனர். பாதி பணம் கணக்குல வருது; பாதி, "சைடுல' போயிடுது,' என்றாள் மித்ரா.""போலீசாருக்கும், வக்கீலுக்கும் "லடாய்' ஆகிடுச்சாமே,'' என, அடுத்த கேள்வியை வீசினாள் சித்ரா.""ஆமாக்கா, தன்னுடைய கட்சிக்காரரை பார்க்க, ஒரு வக்கீல் ஸ்டேஷனுக்கு போயிருக்கார். அங்கிருந்த எஸ்.ஐ.,க்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. வக்கீல் சங்கத்தினர், போலீஸ் உயரதிகாரியிடம் புகார் செஞ்சதும், எஸ்.ஐ.,யை வேறிடத்துக்கு மாத்திட்டாங்க,'' என, மித்ரா சொல்ல, ""அப்புறம், என்னாச்சு?'' என, படபடத்தாள் சித்ரா.""வேறென்ன? கோபத்தின் உச்சிக்கு சென்ற போலீசார், வழக்கை "ஸ்ட்ராங்'க்கா பதிவு செஞ்சு, சம்பந்தப்பட்ட கட்சிக்காரரை ஜெயிலு<க்கு அனுப்பிட்டாங்க,'' என்றாள் மித்ரா.""அடடே, வழக்கமா, பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறுன்னு, கட்டப்பஞ்சாயத்து பேசி தீர்ப்பாங்களே,'' என, சித்ரா கிண்டல் செய்தாள்.""பொறுமையா இருங்க. இன்னொரு சம்பவமும் நடந்திருக்கு. நீதித்துறை அதிகாரி ஒருத்தர், காரில் கோர்ட்டுக்கு வந்தார். "பார்க்கிங்' செய்யும் இடத்தில், பைக்கில் வந்த ஒருவர், அவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். பக்குவமா பதில் சொல்லியும் கேட்காமல், பைக்கில் வந்தவர் பேசிக்கொண்டே சென்றிருக்கிறார். பைக் சாவியை பறிமுதல் செய்யுமாறு, ஊழியர்களிடம் சொல்லி விட்டு, கோர்ட்டுக்குள் சென்றார் அந்த அதிகாரி. போலீசார் விசாரித்ததில், பெண் போலீஸ்காரரின் கணவர் என தெரிந்தது. விஷயத்தை கேள்விப்பட்டதும், பெண் போலீஸ், அவரது கணவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் என மூவரும், அதிகாரி முன் ஆஜராகி, மன்னிப்பு கேட்டிருக்காங்க. பொது இடத்தில் எப்படி நடந்துக்கணும்னு அவங்களுக்கு புத்திமதி சொல்லி, அனுப்பியிருக்கார், அந்த அதிகாரி'' என, நீண்ட விளக்கம் சொன்னாள் மித்ரா.""நம்மூரில் இ.கம்யூ., மாநிலக்குழு கூட்டம் நடந்துச்சே; அதில், ஏதேனும் விசேஷம் இருக்கா,'' என, அரசியல் மேட்டருக்குள் நுழைந்தாள் சித்ரா.""இல்லாமலா, புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்றதுல, உறுப்பினர்களிடம் கருத்து ஒற்றுமை ஏற்படாமல், இழுபறியாவே இருந்துருக்கு. மாநில துணை செயலாளர் பதவியை கைப்பற்ற, திருப்பூர் முன்னாள் எம்.பி., விரும்பினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்குமானு தெரியலை; ஓட்டெடுப்பு நடத்தினால் சிக்கலாகிடும் என்பதால், நிர்வாகக்குழு தொடர்பா முடிவு செய்யும் பொறுப்பை, அகில இந்திய பொது செயலாளரிடம் ஒப்படைச்சாங்க,'' என, மித்ரா சொல்ல, ""பதவி ஆசை, கம்யூ., கட்சிக்காரங்களையும் பாடாபடுத்துது. என்ன? கதர் சட்டைக்காரங்களை போல், ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சு சட்டையை கிழிக்காமல், கவுரவமா இருக்காங்க,'' என சித்ரா சொல்வதற்கும், மார்க்கெட் வருவதற்கும் சரியாக இருந்தது.அதன்பின், இருவரும் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்குள் நுழைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE