முதலில் இந்தியனை பலப்படுத்துங்கள்...!| Dinamalar

முதலில் இந்தியனை பலப்படுத்துங்கள்...!

Added : மே 12, 2015 | கருத்துகள் (1)
முதலில் இந்தியனை பலப்படுத்துங்கள்...!

தமிழகத்தில் சிறு தொழில் முனைவோர் சிலரை சந்தித்தேன். அவர்களுடன் பேசியதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மக்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், ஊறுகாயை, தீப்பெட்டியை, பட்டாசை, அகர் பத்தியை, மெழுகுவர்த்தியை, மரச்சாமான்களை தரமான பொருட்களாக, அதிக அளவில் உற்பத்தி செய்து, உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்ய எந்த தொழில்நுட்ப உதவியும், பொருளாதார வழிமுறையும் இல்லாத நிலை இன்று இருக்கிறது.சீனா, மலேசியாவில் இருந்து பல்வேறு வீட்டு உபயோக பொருள்கள், இந்தியாவிற்கு இறக்குமதியாகின்றன. இந்தியாவில் இருக்கும் சிறு, குறுந் தொழிலாளர்கள், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தில் பொருட்களை உற்பத்தி செய்து இங்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஐந்து கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த குடிசைத் தொழில்களுக்கு பாதுகாப்பை அரசு இதுவரை உறுதிப்படுத்தி இருந்தது. ஆனால், இப்போது 20 சிறு மற்றும் குறுந்தொழில்களை பாதுகாப்பான தொழில்கள் என்ற நிலையில் இருந்து அகற்றி, இந்த துறையில் பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்ய அனுமதி, அன்னிய முதலீட்டிற்கு அனுமதி என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சிறு தொழில் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை, பெரும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து, அதில் 50 சதவீதத்திற்கு மேல் ஏற்றுமதிக்கும், 50 சதவீதம் உள்நாட்டு விற்பனைக்கும் வழிவகுத்திருக்கிறது.


சாதக பாதகங்கள் என்ன:

இந்திய பொருள்களை உலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களுக்கு பொது கொள்கையை வகுத்து, அந்த தொழில்கள் உலக தரத்துடன் போட்டி போட்டு வளர தடைக் கற்களாக இருக்கிற கொள்கைகளை தளர்த்தி, அவர்களுக்கு தொழில்நுட்ப உதவி, வங்கி கடன் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்களை, குழுவாக இணைந்து தயாரிக்கும் பெரும் தொழில்களாக மாற்றினால், சிறு மற்றும் குறும் தொழில்கள் உலக சந்தைக்கு போட்டியிட தயாராகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 8 சதவீதம் பங்களித்து, உற்பத்தி துறையில் 45 சதவீதம் பங்களித்து, 48 மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கிறது சிறுதொழில். ஏற்றுமதியில் 40 சதவீதம் என இருக்கும் 35 மில்லியன் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் அழிவதற்கு வழி வகுத்து, இந்த சிறுதொழில் நிறுவனங்களை, அசுர பலம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு வளருங்கள் எனக்கூறுவது முடவனை, பலசாலியோடு மோதவிட்டு முடவனை அழிப்பதற்கு சமம். வெளிநாட்டு கம்பெனிகள் அசுர பலத்தோடு வந்து இறங்கினால், இந்நாட்டு சிறு மற்றும் குறுந் தொழில்கள் நலிந்து விடும்.


பட்டாசு தொழில் அழிகிறது:

முத்ரா வங்கி மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ 10 லட்சம் வரை கடன் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நல்ல திட்டம் பல்லாயிரம் சிறு தொழிலை கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றும். ஆனால் அவர்களை உலகத்தரம் வாய்ந்தவர்களாக உருவாக்குமா? ரூ. 10 லட்சம் கடன் வாங்கி, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி சிறு தொழில் செய்யும் சாதாரண இந்தியன், ரூ. 1000 கோடி முதலீட்டில் ஊறுகாய், பட்டாசு, மெழுகுவர்த்தி தயாரிக்கும் சீன நிறுவனத்துடன் போட்டி போட முடியுமா. சிவகாசி பட்டாசு தொழில் நசுங்குகிறது. பாட்டாசு தொழிலை உலகத்தரத்தோடு போட்டி போட்டு வளர தடையாக இருக்கும் பழங்கால சட்டங்களை மாற்றுங்கள். 'சீனாவுடன் போட்டி போட்டு உருவாக்க எங்களுக்கு சட்ட பாதுகாப்பு தாருங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுங்கள்' என்று சிவகாசி பட்டாசு தொழில் முனைவோர் ஐந்து ஆண்டுகளாக போராடுகின்றனர். அதை விட்டுவிட்டு, பட்டாசு தொழில் இனிமேல் சீனாவுடன் போட்டி போடலாம் என திறந்து விட்டால் சிவகாசி விரைவில் அழியும். வளர்ந்த நாடுகளின் தொழில் மற்றும் அதிகாரவர்க்க ஆசைகள், இந்தியாவில் அரசு உத்தரவுகளாக மாறுகிறது. சிவகாசியின் சத்தமே எட்டவில்லை என்றால், ஊறுகாய் போட்டு, மெழுவர்த்தி உற்பத்தி செய்து பிழைக்கும் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சோப்பு, சீப்பு செய்யும் சிறு தொழில்களின் சத்தம் மட்டும் எப்படி எட்டும்.


மக்களின் நம்பிக்கை:

மோடியை வளர்ச்சியின் நாயகனாக மட்டுமே பார்த்து ஒவ்வொரு சாதாரண இந்தியனின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பி ஒட்டளித்த மக்களின் நம்பிக்கை பொய்க்க விடக் கூடாது. அந்த நம்பிக்கை 'மேக் இன் இந்தியா', 'ஸ்கில் இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா', 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை நடைமுறை படுத்தும் ஆட்சி முறை வழியில் பல்வேறு பலவீனங்களும், பழைய நிர்வாக வழிமுறைகளே கையாளப்படுகின்றன. வளர்ச்சிக்கான கொள்கைகளை, 64 கோடி இந்திய இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு கிடைக்க, இந்திய தொழில் முனைவோர்களையும், உலக நிறுவனங்களுக்கு இணையாக வளரும் விதத்தில் போட்டி போட சரி சமமான வாய்ப்பு கொடுத்து, இந்திய பொருளாதாரம், இந்திய மக்களால் கட்டமைக்கப்படும் விதத்தில் உருவாக்க பிரதமர் மோடி முன் வர வேண்டும்.

* 20 சிறு, குறுந்தொழில்களை பாதுகாக்கப்பட்ட தொழில்கள் என்ற நிலையில் இருந்து அகற்றும் முயற்சியை கைவிட்டு, சிறு தொழில்களை உலகமயமாக்கலில் போட்டி போட்டு நிற்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தோடு, தேவையான மூதலீட்டை பெறவும், குறைந்த வட்டியில் வங்கி கடன் பெறவும், வரி விதிப்பில் மாற்றத்தை கொண்டு வரவும் நடவடிக்கை தேவை.


* பத்து ஆண்டுகளில் சீனா 2000 கி. மீட்டருக்கு நதிகளை இணைத்து விவசாய உற்பத்தியில் முன்னிலை வகுக்க நடவடிக்கைகளை எடுத்து விட்டது. இந்த முறையாவது, நதிகளை இணைக்க அதி திறன் நீர் வழிச்சாலைகளை அமைக்க வேண்டும்.


* பள்ளிக்கல்வி, உயர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் தேவையற்ற பாட திட்டத்தை நீக்கி, உலகமயமாக்கலுடன் போட்டிபோடும் பாடத்திட்டத்தை வைத்து, இந்தியாவை நிர்மானிப்பவர்களாக இளைஞர்களை மாற்ற வேண்டும். இந்தியாவை, இந்தியனை பலப்படுத்துங்கள், கல்வியில், மருத்துவத்தில், விவசாயத்தில், தொழில் மற்றும் சேவைத்துறையில் இருக்கும் ஓட்டைகளை, பலவீனங்களை அடையுங்கள்; பிரச்னைகளை களையுங்கள். முதலில் இந்தியனை பலப்படுத்தி விட்டு, பிறகு உலக பயில்வான்களோடு மோத விடுங்கள். அவன் அனைவரையும் தூள் தூளாக்கும் வல்லமையோடு வலம் வருவான். அப்போது தான் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்.

- வெ. பொன்ராஜ், அறிவியல் ஆலோசகர், எழுத்தாளர். vponraj@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X