மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே டோல்பிளாசா ஊழியர்களுக்கும், அ.தி.மு.க., வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., - முன்னாள் எம்.பி., ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டோல்பிளாசா ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் கோகுல் இந்திரா. முன்னாள் எம்.பி., இவர் நேற்று முன்தினம் கடலோர பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் தனது உறவினர் பாஸ்கருடன் செஞ்சியில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து காரில் சென்றார். இரவு 9 மணிக்கு அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு டோல்பிளாசாவை கடந்தனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் காரை நிறுத்தி கட்டணம் செலுத்தும்படி கூறினர். அப்போது காரிலிருந்த பாஸ்கர், ஊழியர்களிடம் நான் இன்ஸ்பெக்டர் எனக் கூறியுள்ளார். ஊழியர்கள் அடையாள அட்டையை கேட்டனர். அவரும் காண்பித்துள்ளார். அப்போது ஊழியர்கள் நீங்கள் அ.தி.மு.க., கொடி கட்டிய வண்டியில் வரலாமா எனக் கேட்டனர். இதை கேட்டு காரிலிருந்த கோகுல் இந்திரா ஆத்திரமடைந்தார். செருப்பை கழற்றி ஊழியர்களை நோக்கி காண்பித்தார். தொடர்ந்து ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஊழியர்கள் கார் கண்ணாடியை உடைத்தனர்.
அப்போது அவ்வழியே அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் ஜெயக்குமார், சண்முகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியச் செயலர் சுப்பிரமணி மற்றும் அ.தி.முக.,வினர் வாகனங்களில் வந்தனர். முன்னாள் எம்.பி., கார் தாக்கப்பட்டதை கண்டனர். உடனடியாக டோல்பிளாசா ஊழியர்களை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். தகவல் அறிந்து மதுராந்தம் போலீஸ் டி.எஸ்.பி., தணிகைவேல் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அசோக்மேத்தா, சிவக்குமார், பொன்னுசாமி மற்றும் போலீசார் சென்றார். அ.தி.மு.க.,வினரை சமாதானப்படுத்தினர். கார் கண்டியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று அ.தி.மு.க.,வினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோகுல் இந்திரா காரை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த மணக்குடியை சேர்ந்த கண்ணன் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதேபோல் டோல்பிளாசா காவலாளி லட்சுமி ஆனந்தன், அ.தி.மு.க.,வினர் டோல்பிளாசாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் செய்தார். புகாரின் பேரில் கோகுல் இந்திரா, எம்.எல்.ஏ., சண்முகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியச் செயலர் சுப்பிரமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். நேற்று டோல்பிளாசா ஊழியர்களான விழுப்புரத்தை சேர்ந்த அசாரூதின் (26), திருப்பத்தூர் அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த பிரபு (25) ஆகியோரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE