உடல் சூட்டை குறைப்பது எப்படி| Dinamalar

உடல் சூட்டை குறைப்பது எப்படி

Added : மே 13, 2015
உடல் சூட்டை குறைப்பது எப்படி

சித்த மருத்துவத்தில் நிலம், பொழுது இரண்டும் முதற்பொருள் எனப்படுகிறது. வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் உடல் நிலையும், குணமும் மாறுபடுவது போல், காலத்திற்கு ஏற்றவாறு உடல்நிலை, மனம் மாறுபடும்.கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல்நலத்தை இழக்கின்றன. மனிதனின் உடல் கோடையின் போது வறட்சி, அக்கினி, குரூரம், சலரூபம், புளிப்பு, காரம் என 6 குணங்களை அடைகிறது. நம் உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில், உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. 'அக்கி' மிக முக்கியமானதாகும். நீர்ப்பை, நீர்ப்பாதையில் வெப்பம் அதிகரித்து நீர்கடுப்பு, நீர்கட்டு, கல்லடைப்பு, வெள்ளைபடுதல், நீர்வேட்கை போன்ற நோய்கள் வருவதுண்டு, வறட்டு இருமல், ரத்த அழுத்தம், தலைவலி, உடல் கொப்பளங்கள், பரு, ஆசன வாய் எரிச்சல், மூலம் போன்றவை கோடையில் அதிகம் தாக்கும் நோய்கள்.


தடுப்பு முறைகள்:

கொப்பளம், பரு அம்மை இவைகளுக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்து அரைத்து பூசலாம். தோலில் வறட்சியை ஏற்படுத்தும் வாசனை சோப்புகளை தவிர்த்து, பாசிப் பயறு, கடலைமாவு கலந்து பயன்படுத்துதல் நல்லது. வெப்பத்தால் சிலருக்கு உள்ளங்கால் எரிச்சல் ஏற்படும். அதற்கு இரவு படுக்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் பூசி வெதுவெதுப்பான நீரில் 5 முதல் 10 நிமிடம் உள்ளங்காலை மூழ்க வைத்திருந்தால் உடல் சூடு தணியும். அடி வயிற்றில் தொப்புளை சுற்றி ஆமணக்கு எண்ணெய் தடவலாம். தலைக்கு சந்தனாதி தைலம் தடவி வர உடல் வெப்பம் தணியும். நீர் வேட்கை, உடல் எரிதல் இவற்றிற்கு சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசி குளிக்கலாம்.


உணவு முறைகள்:

கோடையில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது நம் உடல் உஷ்ணத்தை தவிர்ப்பது எப்படி என்பதைத்தான். மிக எளிமையான முறை, தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான். தயிர், மோர், பால், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மாதுளை, எலுமிச்சை, வெள்ளரி, திராட்சை, இளநீர் சாப்பிடுவதுடன், தர்பூசணி, நார்த்தை, நெல்லி, பேயன் வாழை தினம் சேர்த்துக் கொள்வது கட்டாயம். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால், வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும். வெட்டி வேர், விளாமிச்சை வேர் கலந்த நீர் குடிக்கலாம். வெந்தயத்தை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவலாம். மேலும் தண்ணீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்நீரை அருந்தலாம். மூலம், வயிறு எரிச்சலுக்கு பசு நெய் நன்று. கீரைகளை சூப் வைத்து குடிக்கலாம். அவற்றை துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.


கீரைகளின் பயன்கள்:

பசலை கீரை வெள்ளைபடுதல், நீர்கடுப்பை போக்கும். சீறுகீரை: காய்ச்சல் பாதம் எரிச்சல், கண் புகைச்சலை போக்கும். பொன்னாங்கன்னி கீரை: உடல்சூடு, மூலம், உஷ்ணம் போக்கும். முருங்கைக்கீரை: உடல்சூடு, வெயிலினால் உண்டாகும் தலைவலி நீக்கி உடலில் பொன் நிறத்தை உண்டாக்கும். புளியாரை கீரை: ரத்தமூலம் போக்கும். வாழைப் பூ: ரத்த மூலம், கால் எரிச்சல் போக்கும். கீரைத்தண்டு: வெப்பம், பித்த எரிச்சல், வெளிமூலம் போக்கும். பிரண்டை தண்டு: மூலம், அல்சர் குணமாக்கும். சோற்றுக் கற்றாழை: உடல் வெப்பம், வெள்ளை படுதல் போக்கும். நெற்பொரி: அதிக தாகத்தை குறைக்கும். சம்பா கோதுமை: ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். கேழ்வரகு, கம்பு போன்றவற்றை முதல் நாள் மாலை சமைத்து நீரிலிட்டு அடுத்த நாள் மோர் சேர்த்து கூழாக சாப்பிட்டால் உடல் வெப்பம் குறையும். மருதாணி, பாதத்தில் தடவ எரிச்சலை போக்கும். மருதாணி பூவை இரவில் தலையணை அடியில் வைத்து படுக்க நிம்மதியான தூக்கம் கிடைப்பதுடன், உடல் வெப்பம் சீராகும். இவற்றுடன் வாழைப்பூ, கீரைத்தண்டு, பிரண்டை, சிறு தானியங்கள் சேர்த்துக் கொள்வதால் உடல் சூட்டை தவிர்ப்பதுடன், கோடை நோய்களில் இருந்து தப்பிக்கலாம். மருதாணி, சோற்றுக் கற்றாழை உடல் வெப்பத்தை போக்கும் மூலிகைகளாகும்.


எண்ணெய் குளியல்:

தினமும் 2 முறை குளிப்பது, எண்ணெய் குளியல், உடல் சூட்டை முற்றிலும் தவிர்க்கும். எண்ணெய்யை உச்சி முதல் உடலில் அனைத்து பாகங்களிலும் சூடு எழுப்பாமல் குளிர தேய்க்க வேண்டும். உடலை பிடித்தும், மெதுவாக தட்டியும் வருவதால், ரத்த ஓட்டம் அதிகமாகும். எண்ணெய்யை தேய்த்து சிறிது நேரம் ஊறவிடுவதால், எண்ணெய் சத்துக்கள் உடலினுள் செல்லும். தவிர கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்ப விதைகள், கடுக்காய் தோல், நெல்லிப்பருப்பு இவைகளை அரைத்து காராம் பசுவின் பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து குளித்தால் எந்நாளும் பிணிகள் வராது, என சித்தர்களின் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இலவம் பஞ்சு படுக்கையில் படுத்தல் நன்று. காரம், புளிப்பு, உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டை சுற்றி மரம் வளர்க்க வேண்டும். மாடி வீடுகளில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம். தினம் வீட்டிற்குள் தரையை தண்ணீரால் துடைக்கவோ அல்லது சிறிதளவு தண்ணீரை மதியம் தெளித்து விட்டாலோ தரை சூடு குறையும். வீட்டினுள் காற்றோட்டம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.

- டாக்டர் ஜி.கலா, சித்த மருத்துவர், திருநகர். 96772 54206.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X