சாதிக்க வயது என்ன?| Dinamalar

சாதிக்க வயது என்ன?

Updated : மே 14, 2015 | Added : மே 13, 2015 | கருத்துகள் (1)
சாதிக்க வயது என்ன?

கலைஞனுக்கு கலைத்துறையில் சாதிப்பது என்பது லட்சியம்; அதே போல் தொழிலதிபருக்கு தொழிலில்; போட்டிகளை வென்று தான் முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது அவருடைய லட்சியம். அதே போல் போட்டி தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு அரசு வேலை கிடைக்க வேண்டுமென்பது லட்சியம். +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்பது லட்சியம்.

இப்படி ஒவ்வொருவரும் ஏதாவதொரு லட்சியத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பந்தயக் குதிரைகளாக இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஒரு சிலரே இலக்கை வெற்றிகரமாக அடைகிறார்கள். ஆனால் அது வெற்றியா? (அ) சாதனையா? என்று அவர்களால் கணிக்க இயலாமல் போய்விடுகிறது. ஆம் வெற்றியும் சாதனையும் ஒன்றல்ல இரண்டும் வெவ்வேறானது. வெற்றியைத் தீர்மானிப்பது தனிநபர். சாதனையைத் தீர்மானிப்பது சமூகம்.


வெற்றி மற்றும் சாதனை:

ஒரு தனிநபரின் வெற்றி என்பது அவன் சார்ந்துள்ள சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் போது அந்த வெற்றி சாதனையாகிறது. சமூகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு தனிநபரின் வெற்றி கானல் நீர் போன்றது. இந்த உலகில் விரவிக்கிடக்கும் சாதனைகள் அனைத்தும் ஏதாவதொரு தனி மனிதனிடமிருந்து துவங்கியதே. 20ம் நூற்றாண்டில் உலக வரலாற்றின் பக்கங்களில் பல கருப்பு அத்தியாயங்களுக்கு சொந்தக்காரான ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் கொடுமைகளுக்கும் கொடூரத்திற்கும் உரிய இலக்கணமாக பார்க்கப்பட்டவர். ஆனால் இந்த ஹிட்லர் தான் இந்தியா உட்பட பல காலனி நாடுகளின் செல்வத்தில் வயிற்றுப் பிழைப்பு நடத்தி வந்த பிரிட்டனின் பொருளாதாரத்தை சிதைத்தவர். பிரிட்டனின் காலனி ஏகாதிபத்தியத்திற்கு காலனாக அமைந்தவர். பிரிட்டனின் பொருளாதாரத்தை இவர் சிதைக்காமல் இருந்தால் இரண்டாம் உலகப்போருக்குப்பின் இங்கிலாந்தில் ஆட்சி மாற்றமும் இந்தியா உட்பட பல காலனி நாடுகளின் காட்சி மாற்றமும் சாத்தியமில்லை. இங்கிலாந்து நாட்டின் மீது இவர் கொண்ட வெற்றியின் மூலம் உலக நாடுகளின் வரலாற்றில் பல தாக்கங்களை விதைத்தவர் ஹிட்லர். தென்னாப்ரிக்காவில் காலம் காலமாக நிலவி வந்த கருப்பர்களுக்கு எதிரான 'அபார்தீட்' என்ற நிறவெறிக் கொள்கையை எதிர்த்து போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து கருப்பர்களுக்கு உரிமையை பெற்றுத் தந்த மண்டேலா ஒரு சாதனையாளர். உலகம் முழுவதும் துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் வெள்ளையர்களின் துப்பாக்கிகளுக்கு எதிரே அச்சமில்லாத ஆயுதமின்றி இந்திய மக்களை அணிவகுத்து நிற்க வைத்து கோடான கோடி இந்திய இதயங்களை மட்டுமின்றி உலக மக்களின் மனங்களையும் காந்தமாக இழுத்த காந்தி ஒரு சாதனையாளர். சாதனையாளர்கள் திடீரென தோன்றுவதில்லை. காலங்களுக்கு தகுந்தாற்போல் சாதனையாளர்கள் உருவாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் அடையாளம் காண தவறுகிறோம்.


வயது தடையில்லை:

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் சதத்தில் சதம் கடந்து பல வெற்றிகளைக் குவித்தவர். தனது வெற்றிப் பயணத்திற்கு அங்கீகாரமாக 40வது வயதில் பாரத ரத்னா விருது பெற்று சாதனையாளராகியவர். அவரின் இந்த சாதனைப் பயணம் அவர் பள்ளி மாணவராக இருந்த போதே துவங்கி விட்டது. சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை இளம் வயதிலேயே நிரூபித்தவர் இவர். பெண்ணடிமை, தீண்டாமைக்கு தீயிட புறப்பட்ட சுப்பிரமணியன், பாரதியானது 11 வயதில். அவர் இந்தியாவின் மகாகவியாக உயர்ந்த போது வயது 39. இளைஞர்களின் எழுச்சியாம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் "என் இனிய சகோதர சகோதரிகளே” என்று ஆன்மிகத்தால் உலகின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பிய போது வயது 30. இந்தியர்களின் வீரத்தை வியந்த மாசிடோனிய மன்னர் அலெக்ஸாண்டர், பல நாடுகளை வென்ற பின் தான் வெல்வதற்கு புதிய உலகங்களைத் தேடிய போது அவரின் வயது 33. "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்று இறைவனும் உருக மாணிக்க வாசகர், திருவாசகம் வடித்த போது அவரின் வயது 24. அரியணையேறி அரசர் உடையணிந்து வாள் ஏந்த பெண்களுக்கு வாய்ப்பு இல்லாத காலத்திலும் வெள்ளையரை எதிர்த்து போர் களத்தில் சரித்திரமாய் ஜான்சி ராணி லட்சுமிபாய் மாண்டபோது அவரின் வயது 23. புரிந்துகொள்ள முடியாத அதிசயமான இந்த பிரபஞ்சத்தில் நிலவிலிருந்து பூமியை நீல் ஆம்ஸ்ட்ராங் ரசித்த போது அவரின் வயது 28. தூக்குகயிறை முத்தமிட்டு இந்திய இளைஞர்களின் இதயத்தை வென்று பகத்சிங் தியாகச் சுடரான போது வயது 24. நிலவு முதல் நியூட்ரினோ வரை அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் தேவையான டெலஸ்கோப்பை கண்டறிந்த கலிலியோ பெண்குலம் கண்டறிந்த போது அவரின் வயது 19. ரைட் சகோதரர்கள் பறவை போல் முதன்முதலில் வானில் பறந்த போது அவர்களின் வயது 33.


மண்டேலாவுக்கு முன்பே:

தென்னாப்ரிக்க நிறவெறிக்கு எதிராக நம் தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை குரலெழுப்பிய போது வயது 17 தென்னாட்டு திலகர் வ. உ.. சிதம்பரம் பிள்ளையை சிறையில் செக்கிழுக்க வைத்த ஆஷ்துரையை வீர வாஞ்சிநாதன் சாம்பலாக்கிய போது வயது 17. அப்பாவி மக்களை ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரின் உயிர்குடித்து உத்தம் சிங் சாதனையாளராக உயர்ந்த போது அவரின் வயது 21. இப்படி சாதித்து சரித்திரமானவர்கள் ஏராளம். சாதிப்பதற்கு இவ்வுலகில் வாய்ப்புகளும் தாராளம். சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல! எனவே சாதிக்க சரியான வயது... நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.

- முனைவர். சி. செல்லப்பாண்டியன், உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை தேவாங்கர் கலைக் கல்லூரி அருப்புக்கோட்டை. 78108 41550We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X