'கெட்ட நாற்றத்தோட ஒரு ஆள் இருந்தா, அவன் பக்கம் நீங்க இருப்பீங்களா?' மாட்டேன்.
'கொலை, கொள்ளையில ஈடுபடறவன் பக்கத்துல...?' மாட்டவே மாட்டேன்.
'நிச்சயமா என்னாலேயும் முடியாது சார்! இப்படியெல்லாம் ஒரு ஆண் இருந்தா, நாம அவன்கிட்டே நெருங்கவே தயங்குவோம். ஆனா, ஒரு பொண்ணு இதையெல்லாம் சகிச்சுக்குவா; அவ தான் மனைவி. பெண்ணுக்கு உடல் வலிமை அதிகம் இல்லாம இருக்கலாம்; ஆனா, ஒரு ஆணை விட, மன வலிமை அதிகம். அம்மா இல்லாத வாழ்க்கையில அன்பு, பாசம் இருக்காதுன்னு சொல்வாங்க; ஆனா, மனைவி இல்லாத வாழ்க்கைன்னா, அதுல அர்த்தமே இருக்காது சார்!' - 10ம் வகுப்பு வரையிலும் மட்டுமே படித்திருக்கும், 39 வயது தியாகராஜனின் பக்குவமான பேச்சில், 'ப்ரியா தேநீரகத்தின்' பெயர்க்காரணம் புரிந்தது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பல்பொருள் அங்காடியின் பக்கவாட்டில், 'உடலுக்கு மட்டுமல்ல... உள்ளத்திற்கும் உற்சாகம்' எனும் வகையில் வசீகரிக்கிறது தியாகராஜனின் தேநீரகம். கரும்பு சர்க்கரை கலந்த, 'இஞ்சி தேநீர்' இங்கு பிரபலம் என்றாலும், அதை விஞ்சி நின்று உற்சாகம் தருகின்றன, தேநீரகத்தை நிரப்பியிருக்கும் வசீகர வாசகங்கள்!
'நடந்து போக பாதை இல்லையே' என்று கவலைப்படாதே;
நீ நடந்தால், அதுவே ஒரு பாதை!
'ஹிட்லரோட இந்த நம்பிக்கை வாசகம், எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ நான் செய்ற இந்த தொழிலை, இந்த நம்பிக்கை கொடுத்த துணிச்சல்னு கூட சொல்லலாம்!' சிலிர்ப்புடன் சொல்லும் தியாகராஜன், தன், 5 வயதிலேயே தந்தையை பறி கொடுத்தவர். தாயின் அரவணைப்பில், தாய்மாமனின் பொருளாதார உதவியில் வளர்ந்த இவருக்கு, தன் சோதனைகள் மூலம் காலம் கற்றுத் தந்த அனுபவப் பாடங்கள் ஏராளம்; அதை, கச்சிதமாய் பிரதிபலிக்கின்றன, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு கடை நிரப்பியிருக்கும் வாசகங்கள்!
எந்தவித முயற்சியும் இல்லாமல் வாழ்வில்
அடையக் கூடியது; தோல்வி மட்டுமே!
'இந்த வாசகம் சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. 10ம் வகுப்பு முடிச்சதுக்கப்புறம், எத்தனையோ வேலைகள் பார்த்தேன்; சொந்தமா துணிக்கடை வைக்கிற அளவுக்கும் வளர்ந்தேன்! திடீர்ன்னு, பணம் கொடுத்துட்டிருந்த வாய்ப்புகள் அத்தனையும் கை நழுவ, பெரிய சறுக்கல். ஆனாலும், நான் தன்னம்பிக்கையை இழக்கலை. எனக்குள்ள நம்பிக்கை வர வைச்ச இந்த அனுபவங்கள், எல்லாருக்கும் கிடைக்குமான்னு தெரியலை; அதான், கடை முழுக்க அனுபவ வரிகளா நிரப்பிட்டேன். இதெல்லாம் நான் சொன்னா, யாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஜெயிச்ச இவங்க சொன்னா ஏத்துக்குவாங்கள்ல!'
தியாகராஜன் கைகாட்டிய திசையில், ஆபிரகாம் லிங்கன், பில் கேட்ஸ், சச்சின் டெண்டுல்கள், திருபாய் அம்பானி, ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்கள். அத்தனை படங்களுக்கும் கீழே, மொத்தமாய் ஒரு வைர வரி. இதுநாள் வரை எதையெல்லாம் தவற விட்டாய் என்பதல்ல வாழ்க்கை; இனிமேல், உன்னால் என்னென்ன செய்ய முடியும் என்பதே வாழ்க்கை!
'மாத்தணும் சார்; திருப்பூர்ல, ஒரு முக்கியமான அடையாளமா இந்த தேநீரகத்தை மாத்தணும்! எனக்குன்னு சொந்தமா இடம் இருந்தது; கார் வைச்சிருந்தேன்; எல்லாத்தையும் தொழில் நஷ்டத்துல இழந்துட்டேன்; அது அத்தனையையும், இந்த தொழில் மூலமா மீட்டெடுக்கணும்! இந்த தொழிலுக்காக, வெளியே கொஞ்சம் கடன் வாங்கியிருக்கேன்; அதையெல்லாம், சரியான முறையில அடைக்கணும்! பையனுக்கு, 6 வயசாகுது; பேர் திருமாறன்; அவனை நல்லபடியா படிக்க வைச்சு ஆளாக்கணும்; 'சோதனைகள் வர்றப்போ தேங்கிடக் கூடாது'ன்னு, வாழ்ந்து காட்டி அவனுக்கு புரிய வைக்கணும்... இப்படி, நிறைய செய்யணும்னு ஆசை இருக்கு சார்!' தியாகராஜனின் ஒவ்வொரு வார்த்தையிலும், கனவும், நம்பிக்கையும் நிரம்பித் ததும்புகின்றன. அதை இமை அசையாமல், ரசித்துக் கொண்டிருக்கிறது புகைப்படத்தில் இருக்கும் ஒரு குழந்தை. அதன் கீழே, அட்டகாசமாய் ஒரு வாக்கியம். வாழ்க்கையை கற்றுக் கொள்வதில் குழந்தை போல் இரு; அதற்கு அவமானம் தெரியாது; விழுந்தவுடன் அழுது முடித்து, திரும்பவும் எழுந்து நடக்கும்! 'சார்... இதை வாசிச்சீங்களா?' குழந்தையிடம் இருந்து நம் பார்வையை மீட்டெடுத்தது தியாகராஜனின் குரல். அவரது விரல் காட்டிய திசையில், மகாத்மா காந்தியின் வாசகம். நீ எந்தளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென்று நினைக்கிறாயோ, அந்தளவுக்கு கடுமையான சோதனைகளை கடந்து செல்ல, உன்னை தயார்படுத்திக் கொள்! 'சார்... வாழ்க்கையில என்ன சோதனை வந்தாலும் சரி; அது நம்மளை எங்கே தூக்கிப் போட்டாலும் சரி; நாம முளைக்கணும்' நாம் விடைபெறுகையில், தியாகராஜன் நம்மிடம் தூவிய நம்பிக்கை விதை இது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE