சிற்பிகள் அமைத்த அடித்தளம்

Added : மே 16, 2015 | |
Advertisement
நவீன இந்தியா என்றதும் நம் மனத்தில் சட்டென்று தோன்றும் விஷயம் என்னவென்றால், அதன் வரலாற்றைப் படைத்தவர்களே அதிக நம்பகத்தன்மை கொண்டவகையில் அதை எழுதியவர்களாகவும் இருக்கிறார்கள். நம் தேசத்தின் தலையாய அரசியல் தலைவர்களே அதன் முக்கிய அரசியல் சிந்தனையாளர்களாகவும் இருந்தனர். அதிலும் மோகன்தாஸ் காந்தி, ஜவாஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர் ஆகிய மும்மூர்த்திகளின் விஷயத்தில்
சிற்பிகள் அமைத்த அடித்தளம்

நவீன இந்தியா என்றதும் நம் மனத்தில் சட்டென்று தோன்றும் விஷயம் என்னவென்றால், அதன் வரலாற்றைப் படைத்தவர்களே அதிக நம்பகத்தன்மை கொண்டவகையில் அதை எழுதியவர்களாகவும் இருக்கிறார்கள். நம் தேசத்தின் தலையாய அரசியல் தலைவர்களே அதன் முக்கிய அரசியல் சிந்தனையாளர்களாகவும் இருந்தனர். அதிலும் மோகன்தாஸ் காந்தி, ஜவாஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர் ஆகிய மும்மூர்த்திகளின் விஷயத்தில் இந்தக் கூற்று மிக மிகச் சரியானது.தேசியவாதத்தின் பிதாமகரான காந்தி அவர்களில் முதலாமவர். 1920களுக்கும் 1940களுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக தேசம் முழுவதும் மாபெரும் எழுச்சியை உருவாக்கினார். நவீன இந்தியாவின் சிற்பியான ஜவாஹர்லால் நேரு இரண்டாமவர். இந்திய தேசம் பிறந்த ஆகஸ்ட் 1947 முதல் 1964 மே மாதம் அவர் இறக்கும்வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். மூன்றாமவர், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சாதியினரின் மாபெரும் தலைவர் அம்பேத்கர். சுதந்தர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்றவகையில் அவருடைய மேற்பார்வையில் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. அது 1950ம் ஆண்டு ஜனவரி 26ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இம்மூன்று தலைவர்களும் போராட்டங்களில் ஈடுபடுதல், ஒடுக்குமுறைக்கு ஆளாகுதல், தலைமை தாங்குதல், நிர்வாகப் பொறுப்பேற்றல் எனப் பல நெருக்கடி மிகுந்த பணிகளைச் செய்தனர்; எனினும் தாங்கள் கண்ட மற்றும் வடிவமைத்த உலகைப்பற்றி விரிவாக எழுதியுமிருக்கிறார்கள்.1958 முதல் 1994வரை மத்திய அரசு வெளியிட்ட 'மகாத்மா காந்தியடிகளின் படைப்புகள்' என்ற திரட்டில் 90க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ளன! நேருவின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை 'நேருவின் தேர்ந்தெடுத்த படைப்புகள்' என்ற தலைப்பில் 50 தொகுதிகளை இதுவரை வெளியிட்டுள்ளது. 1980களில் மகாராஷ்டிரா அரசு அம்பேத்கரின் கட்டுரைகளைப் பதினாறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கங்களுக்கு மேலிருக்கும்!மேற்குறிப்பிட்ட நூல்களில் காணப்படுபவை பெரும்பாலும் சாதாரணக் கடிதங்களோ கட்டுரைகளோ பேச்சுக்களோதான். ஆனால் தேசிய உணர்வு, மக்களாட்சி, மதம், பண்பு, சமூகநீதி ஆகிய பல்வேறு விஷயங்களைப்பற்றிய நீளமான கட்டுரைகளும் அதில் அடங்கும். பொதுவாகவே இந்தியர்கள், குறிப்பாக இந்திய எழுத்தாளர்கள், நீட்டி முழக்கி அல்லது சுற்றி வளைத்துத்தான் எழுதுவார்கள். ஆனால், மேற்குறிப்பிட்ட நூல்களைப் பொறுத்தவரையில் அதிக அளவில் எழுதியதென்பது தரத்தை எந்தவகையிலும் நீர்த்துப்போகச் செய்திருக்கவே இல்லை.மேற்சொன்ன மூன்று தலைவர்களைத் தவிர, வேறு பல இந்திய அரசியல் தலைவர்களும் சீர்திருத்தவாதிகளும் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தங்களுடைய குறுகிய வட்டத்துக்குள்ளாக, அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தும் விஷயங்களை எழுதிவந்திருக்கிறார்கள்.இந்திய அரசியல் தலைவர்களில் பலர் சுயமான சிந்தனைப்போக்கு கொண்டவர்கள். இது ஒரு அசாதாரணமான விஷயம்தான். ஆனால், இது அபூர்வமான, நமக்குமட்டுமே உரிய ஒன்றல்ல. ஏனெனில் வேறு பல நாடுகளிலும் அவை உருவாகக் காரணமாக இருந்த செயல்வீரர்களும் போராளிகளும் எழுத்தாளர்களாகவும் வாதத்திறமை கொண்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள்.அமெரிக்கர்களின் முதல் தலைமுறை தேசியவாதிகளான மாடிஸன், ஹாமில்டன், ஜெஃபர்ஸன், ஃபிராங்க்ளின் போன்ற தலைவர்கள் எல்லாருமே போராட்டக்காரர்களாக இருந்ததோடு சிந்தனையாளர்களாகவும் இருந்தனர். இவர்களைப்போலவே கியூபாவில் ஹோஸே மார்த்தி, செனகலின் லியோனார்டு செங்கோர், கானாவின் க்வாமே என்க்ரூமா ஆகியோரும் தத்தம் நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்ததோடு மேதைமை நிறைந்த படைப்புகளை எழுதவும் செய்தனர். புதிதாகப் பிறக்கும்போதும் நெருக்கடியில் மூழ்கும்போதும் செயல்திறனும் சிந்தனைத்திறனும் ஒருங்கே பெற்ற தலைவர்களை உருவாக்கும் குணம் கொண்டவையாக தேசங்கள் இருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளில் பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸை நாஜி ஜெர்மனி அழித்துவிடும் என்ற அபாயம் ஏற்பட்டது. அப்போது அந்த நாடுகளின் தேசப்பற்று மிகுந்த தலைவர்கள் ஜெர்மனிக்கெதிரான போராட்டத்துக்குத் தலைமை வகித்ததோடு, அந்தப் போராட்டத்தைப்பற்றி மக்களின் மனதில் பதியும்படியாக எழுதவும் செய்தனர். இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் அதன் பின்னரும் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய புத்தகங்கள் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசைத் தேடித் தந்தன. அதேபோல ஃப்ரான்ஸின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சார்ல்ஸ் தெகால் 1940களுக்கும் 1950களுக்குமிடையில் தமது கட்டுரைகள் மூலம் ஃபிரெஞ்ச் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஃப்ரான்ஸ் என்றால் என்ன... ஃப்ரெஞ்சுக்காரராக இருப்பதென்றால் என்ன என்பது தொடர்பாகப் புதிய அர்த்தங்களை அவருடைய படைப்புகள் உருவாக்கிக்காட்டின.அரசியல் தலைவராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் நபர்கள் உருவாக இன்னொரு காரணம்: ஆட்சி முறையிலே ஏற்படும் புரட்சிகர மாற்றம். இதற்கான சிறந்த உதாரணம் ரஷ்யாவிலும் சீனாவிலும் நிகழ்ந்த புரட்சிகளின் தலைவர்களான லெனினும் மாசேதுங்கும்தான். இவர்களிருவரும் செயல் வீரர்கள் மட்டுமல்ல; அரசியல், பொருளாதார விஷயங்களைப்பற்றி மக்கள் மனத்தில் பதியும்படி எழுதவும் செய்தார்கள். அவற்றை அந்நாட்டு மக்கள் படிக்கவேண்டும் என்ற நிலையும் இருந்தது. மற்ற நாடுகளிலும் இவர்களுடைய கட்டுரைகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன.மற்ற நாடுகளில் நிலைமை எப்படியிருந்தாலும், இந்தியா விசேஷமான தேசம் என்பதுதான் எனது அபிப்பிராயம். இந்த விசேஷ அம்சம் மூன்று வகைப்படும். முதலாவது, செயல்வீரர்சிந்தனையாளர் என்ற இந்த இரட்டைத் திறமை கொண்டவர்களின் பாரம்பரியம் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாகவே இருந்துவந்திருக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டை நிறுவிய தலைவர்களுக்கு மக்களாட்சி, நாடு, தேசம், என்பவற்றைப்பற்றி வசீகரமான கருத்துகளிருந்தன. ஆனால் அவர்களுக்குப் பின்வந்த தலைவர்கள் நாட்டை ஆளவோ நிர்வாகம் செய்யவோ சில நேரங்களில் நிர்வாகச் சீர்கேடு செய்யவோ மட்டுமே செய்துவந்தனர். வேறு சிந்தனையாளர்களும் அறிஞர்களும் வெளியிட்ட கருத்துகளையேதான் தங்களுடைய அபிப்பிராயங்களாக வெளியிட்டனர்.இதற்கு மாறாக, நம் தேசத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த அரசியல் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்கள் அதிகத் தாக்கம் ஏற்படுத்திய அரசியல் தலைவர்களாகவும் திகழ்ந்தனர். அரசியல்ரீதியாக இந்தியா ஒரு தனி நாடாக உருத்திரள்வதற்கு வெகுமுன்பாகவும், சுதந்தரப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும், நாடு சுதந்தரமடைந்த சில பத்தாண்டுகளிலும்கூட இந்தியச் சமூகம், அரசியல்பற்றி விரிவாகவும், அனைவருடைய கவனத்தைக் கவரும் வகையிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் அரசியலில் தங்களை முழுவதாக அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்கள் எழுதியவையே. இரண்டாவதாக, மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அரசியல் சிந்தனையாளர்களின் தாக்கம் பல காலம் நீடித்தது. உதாரணமாக, லெனினின் கருத்துகள் எழுபது ஆண்டுகளுக்கு, அதாவது, சோவியத் யூனியன் உருவான நாளில் ஆரம்பித்து அது சிதறிப் போகும்வரை மட்டுமே நீடித்தன. மாவோவின் தாக்கமோ இன்னும் குறைவான காலமே நீடித்தது. அதாவது, 1949ல் சீனப்புரட்சி வெற்றி பெற்ற நாள் முதல் 1970களில் தெங் ஸியோ பிங் தன்னுடைய தலைவரின் கருத்துகளைக் கைகழுவிய நாள்வரையிலான முப்பது ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது.மேற்கு ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்தி வின்ஸ்டன் சர்ச்சில் உணர்ச்சிபூர்வமாகப் பேசியதையும் எழுதியதையும் 1950களுக்குப் பிறகு யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. 'ஃபிரான்ஸின் பெருமை'பற்றி சார்ல்ஸ் தெ கால் பேசியதெல்லாம் ஐரோப்பிய யூனியன் என்ற கருத்தாக்கம் நிலைபெற்ற பிறகு நீர்த்துப்போய் (அதிர்ஷ்டவசமாக?), கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். இதற்கு நேர்மாறாக, பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிகளிலும் இந்திய சிந்தனையாளர்கள் பேசியது இன்றைய இந்தியாவுக்கும் பொருந்துவதாக இருப்பதைக் காணமுடியும். இந்தப் புத்தகம் அதைத்தான் விவரித்துக் கூறப்போகிறது.மூன்றாவது விசேஷ அம்சம் என்னவென்றால், இந்திய அரசியல் வரலாற்றில் பலதரப்பட்ட கருத்துகளைக்கொண்ட சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்தனர். மாவோவும் லெனினும் கேள்விகளுக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர்களாக அவர்களுடைய நாடுகளில் மதிக்கப்பட்டதுபோல் காந்தியோ நேருவோ இந்தியாவில் ஒருநாளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதர்களாக மதிக்கப்பட்டிருக்கவில்லை. காந்தியும் நேருவும் சொன்னதைப் பின்பற்றியவர்களுக்கு இணையாகவே அவர்களுடைய கருத்துகளை எதிர்த்தவர்களும் அதிக எண்ணிக்கையிலிருந்தனர். மேலும், இந்திய அரசியல்வாதிகளும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் பல்வேறு விஷயங்களைப்பற்றி விரிவாக விவாதித்துள்ளனர். ஆனால், மற்றெந்த நாட்டிலும் இப்படியான ஒரு அம்சத்தைப் பார்க்கமுடியவில்லை. இந்திய சிந்தனையாளர்களிடையே இப்படியான பன்முகத்தன்மையும் ஆழமும் இருப்பதற்கு, இந்தியச் சமூகம் தன்னளவிலேயே அப்படியான ஒரு பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதுதான் காரணம்.நவீனத்துவத்துடனான இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் (மற்றும் ஒருவகையில் திணிக்கப்பட்ட) சந்திப்பில் ஆரம்பித்து, சுதந்தரப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்களினூடாக, உலகிலேயே மிகப் பெரிய குடியரசின் அறுபது ஆண்டு அனுபவம்வரையில் இந்தப் புத்தகத்தில் நாம் வாசிக்கவிருக்கும் கட்டுரைகளும் பேச்சுகளும் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செலவிருக்கின்றன. அவற்றினூடாக 200 ஆண்டுகால இந்திய வரலாற்றைப் பார்க்கவிருக்கிறோம். உலகின் மிகவும் சுவாரசியமான தேசத்தின் அதி முக்கியமான அந்தத் தருணங்களை அவற்றை வடிவமைத்த மனிதர்களின் வார்த்தைகளிலேயே கேட்க இருக்கிறோம்.
=========நவீன இந்தியாவின் சிற்பிகள்தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹாதமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 528 விலை ரூ 400இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/9789351351818.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X