மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ராம்மோகன் ராய்

Added : மே 16, 2015 | |
Advertisement
சமீபகாலத்தில் வெளியிடப்பட்ட ராம்மோகன் ராயின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின் துணைத்தலைப்பு 'நவீன இந்தியாவின் தந்தை' என்றிருந்தது. இந்த மிகைப்படுத்தலை நாம் மன்னித்துவிடலாம். இந்திய பாரம்பரிய சமூகக் கட்டமைப்புகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் நவீனத்துவத்தின் மூலமாக உருவான சவால்களைத் தீவிரமாக எதிர்கொண்ட முதல் நபர் ராம்மோகன் ராய்தான் என்பதில் எந்த
 மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ராம்மோகன் ராய்

சமீபகாலத்தில் வெளியிடப்பட்ட ராம்மோகன் ராயின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின் துணைத்தலைப்பு 'நவீன இந்தியாவின் தந்தை' என்றிருந்தது. இந்த மிகைப்படுத்தலை நாம் மன்னித்துவிடலாம். இந்திய பாரம்பரிய சமூகக் கட்டமைப்புகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் நவீனத்துவத்தின் மூலமாக உருவான சவால்களைத் தீவிரமாக எதிர்கொண்ட முதல் நபர் ராம்மோகன் ராய்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சாதி, மதம், உறவுகள் என எந்தவொரு சங்கிலியாலும் பிணைக்கப்படாத சிந்தனைப்போக்கையும் செயல்பாடுகளையும்கொண்ட முதல் இந்தியர்களில் இவரும் ஒருவர்.ராதா நகர் என்ற கிராமத்தில் 1772ல் ஒரு வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவர் ராம்மோகன் ராய். ஓரளவுக்கு நல்ல நிலையிலிருந்த நிலவுடமையாளர்களான இவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக மொகலாயர்கள் ஆட்சியில் வருவாய்த்துறையில் பணிபுரிந்து வந்தனர். இளம் வயதிலேயே ராம்மோகனுக்கு இரு மனைவிகள் இருந்தனர். அக்காலத்தில் மேல் சாதிக்காரர்களிடையே பால்ய விவாகமும் இருதார மணமும் இயல்பான சம்பவங்கள்தான். சிறுவயதில் ராம்மோகன் வங்காளி மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றார். பின்னர் அரபி மொழி பயில்வதற்காக பாட்னாவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருடைய ஆசிரியர்கள் யூக்ளிட், அரிஸ்டாட்டில் ஆகியோரைப்பற்றி மொழிபெயர்ப்பு நூல்கள் வாயிலாகக் கற்றுக் கொடுத்தனர். இப்படியாக ஒவ்வொரு இடமாகச் சென்று நடமாடும் பல்கலைக்கழகங்களில் படித்தவர் கடைசியாக பனாரஸ் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் சம்ஸ்கிருதத்தையும் கற்றார்.ராம்மோகன் ராய் இப்படியாக ஊர் ஊராகச் சென்று படித்திருக்கிறார் என்பதைப் பின்னர் வந்த ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். ஆனால், அவர்களும் ராய் ஒரு சிறந்த பன்மொழிப் புலவர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். ஒருவேளை அவர் இந்த மொழிகளை வேறு எங்கும் செல்லாமல் வங்காள மாநிலத்திலேயே கற்றிருக்கலாம். அவர் எங்கு படித்தாலும் சரி, பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதன் பலனாக ராய் சம்பிரதாய இந்து மதக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தன்னைச் சுற்றிலும் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தபின் அவருடைய இந்த எதிர்ப்புணர்வு அதிகமானது. அவருடைய மூத்த சகோதரன் இறந்தபோது அவருடைய மனைவி அதே சிதையில் வலுக்கட்டாயமாக உடன்கட்டையேற வைக்கப்பட்டார். ராய் இதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.படிப்பு முடிந்தபின் ராம்மோகன் ராய் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வங்காளத்தின் பல இடங்களில் பணிபுரிந்தார். பின்னர் 1815ம் ஆண்டில் (வாட்டர்லூ யுத்தம் நடந்தவருடம்) அவர் கல்கத்தாவில் நிரந்தரமாகக் குடியேறினார். இதற்குள்ளேயே அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டிருந்தார். பாரசீக மொழியில் எழுதப்பட்டு, அரபு மொழியில் முன்னுரையுடன் கூடிய இவருடைய முதற்புத்தகம் உருவ வழிபாட்டைக் கடுமையாக விமர்சித்தது.கல்கத்தாவில் குடியேறியபின் ராய் சமூக, இலக்கியப் பணிகளில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்திக்கொண்டார். உபநிஷத்துகளை சம்ஸ்கிருதத்திலிருந்து வங்காளத்துக்கு மொழிபெயர்த்தார். சதி வழக்கத்தை எதிர்த்து ஆங்கிலத்தில் ஒரு சிறு கட்டுரையை எழுதி வெளியிட்டார். இந்துப் பெண்களின் உரிமைகள் குறித்து பழைமைவாதிகளுடன் விவாதம் நடத்தினார். தங்களுடைய மதம்தான் உயர்ந்தது என்ற கிறிஸ்துவ மதபோதகர்களின் வாதத்தை மறுத்தார். 1815ம் ஆண்டில் அவர் 'ஆத்மிய ஸபா' (நண்பர்களின் சங்கம்) என்ற அமைப்பைத் தொடங்கினார். எல்லா மதங்களிலும் இருந்த பொதுவான கருத்துகளை இந்தச் சங்கம் கண்டுபிடிக்க முயன்றது.'ஒருவனே தேவன்; அவன் எங்குமுள்ளான்; அவன்தான் பூஜிக்கத் தகுந்தவன்; அவன் ஒன்றே; அவனை வெவ்வேறாகப் பார்க்கமுடியாது' என்ற கருத்தை ராய் நம்பினார். இந்த உண்மையைத்தான் வேதங்களும், பைபிளும், குரானும் போதிக்கின்றன என்றார். மதங்களிடையே புரிந்துணர்வை வளர்க்கும் பொருட்டு அவர் யேசு கிறிஸ்துவின் போதனைகளைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினார். முகம்மது நபியைப்பற்றி ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கினார்.பழைமையிலூறிய இந்துக்கள் ராயையும் அவருடைய ஆதரவாளர்களையும் வெகுவாகத் திட்டினர். அவர்கள் பாவம் செய்த நாத்திகர்கள் என்றும், புதுமை மோகம் அவர்கள் கண்களை மூடிவிட்டது என்றும் கேலி செய்தனர். அதேசமயம் இந்தியாவிலிருந்த ஐரோப்பியக் கிறிஸ்துவர்களும் அவருடைய கருத்துகளை எதிர்த்தனர். ராய் மத மாற்றத்தை எதிர்த்தார். யேசு கிறிஸ்துவை அவர் வெகுவாகப் பாராட்டினாலும் அவரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை என விமர்சித்தனர்.0 ராம்மோகன் ராயின் எழுத்துகளில் இருந்து சில பகுதிகள் :உடல் ரீதியாக, பெண்கள் ஆண்களைவிடப் பலம் குறைந்தவர்கள். இதைக் காரணம் காட்டி ஆண்கள் பெண்களுக்கு இயல்பாகக் கிடைக்கவேண்டிய பல விஷயங்களை மறுக்கிறார்கள். இதன்பிறகு, பெண்களுக்கு இவற்றைப் பெறுவது முடியாத செயல் என்று கூறுகிறார்கள். இதை நாம் கவனமாகப் பரிசோதித்தால் நீங்கள் சொல்வது சரியல்ல; இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது தெரியவரும். அவர்களால் விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாதென்று சொல்கிறீர்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு எப்போது அளித்தீர்கள்? அப்படி அளிக்காதபோது அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் திறன் இல்லையென்று எப்படிக் குற்றம்சாட்ட முடியும்? ஒரு மனிதனுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்து, அவர்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்த பின்னரும் அவர்களால் அதனைப் புரிந்துகொள்ளவோ, மனதில் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால் அப்போது அவர்களைக் குற்றம் சொல்லலாம். ஆனால் பெண்களுக்குக் கல்வியே புகட்டாமல், வேறு வித்தைகளையும் கற்றுக் கொடுக்காமல் அவர்கள் ஆண்களைவிட ஒரு படி குறைந்தவர்கள் என்று சொல்வது நீதியல்ல.இரண்டாவது, பெண்களுக்கு மனத் திடம் போதாதென்று சொல்கிறீர்கள். இது எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. காரணம் ஓர் ஆண் மரணத்தைக்கண்டு பயப்படுகிறான். ஆனால் ஒரு பெண்ணோ அவளுடைய இறந்துபோன கணவனுடைய சிதையிலேயே தனது உயிரையும் துறக்கத் தயங்குவதில்லை. இப்படி இருந்தும் அவளுக்கு மனத்திடம் போதாதென்று சொல்கிறீர்கள்.மூன்றாவதாக, நம்பகத்தன்மை என்ற விஷயத்தை எடுத்துக்கொள்வோம். ஆண், பெண் இருபாலருமே நடந்துகொள்ளும்விதத்தை உன்னிப்பாகப் பார்த்தால், யார் தங்களுடைய நண்பர்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்பது தெரியவரும். ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்களை ஏமாற்றிய பெண்களையும் பெண்களை ஏமாற்றிய ஆண்களையும் பட்டியலிட்டுப் பார்த்தால், பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பத்துமடங்கு அதிகமாக இருக்கும்.ஆண்களுக்கு பொதுவாக எழுதப் படிக்கத் தெரியும்; பொது விஷயங்களை நிர்வகிக்கத் தெரியும். ஆகவே, பெண்கள் அவ்வப்போது செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க முடிகிறது. ஆனால் பெண்களுக்கெதிராகத் தாங்கள் செய்யும் எதையுமே குற்றமென்று அவர்கள் கருதுவதில்லை. இருப்பினும் பெண்களிடமுள்ள ஒரு குறையைச் சுட்டிக்காட்டிக் காண்பித்தாகவேண்டும். தங்களைப்போலவே மற்றவர்களும் நல்லவர்கள் எனக் கருதி அவர்களை எளிதில் நம்பிவிடுகின்றனர். அதன் பிறகு கஷ்டப்படுகின்றனர். ஒருசிலர் கணவனுடன் உடன்கட்டையேறுமளவுக்கு இது போய்விடுகிறது.நான்காவதாக, பெண்கள் இச்சைகளுக்கு அடிமை என்று சொல்லப்படுகிறது. இது சரிதானா என்பதை இரு பாலினரின் திருமணப் பழக்கவழக்கங்களிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.ஆண் இரண்டு மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். சில நேரங்களில் பத்துக்கு மேற்பட்டவர்களைக்கூடத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் ஒரு பெண், ஒரு ஆணைத்தான் திருமணம் செய்துகொள்கிறாள். அவன் இறந்தவுடன் தனது இகலோக வாழ்க்கையையும் சுகபோகங்களையும் துறந்துவிட்டு அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். அல்லது மீதியிருக்கும் வாழ்நாளை ஒரு சன்னியாசினியைப்போலச் செலவழிக்கிறாள். அப்படியானால் இச்சைகளுக்கு அடிமையாக இருப்பது யார்?என்னுடைய வருத்தமெல்லாம் இதுதான். பெண்கள் இப்படி மற்றவர்களை அண்டி வாழ்ந்துகொண்டு, அனைத்துக் கஷ்டங்களையும் அனுபவிக்கும்போது அவள் மீது யாரும் இரக்கப்படுவதில்லை. அப்படிச் செய்திருந்தால் அவளை உடன்கட்டையேறக் கட்டாயப்படுத்துவதைத் தடுத்திருக்கலாம்.

=========நவீன இந்தியாவின் சிற்பிகள்தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹாதமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 528 விலை ரூ 400இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/9789351351818.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X