நவீன கல்விமுறை இந்தியாவுக்கு ஏன் அவசியம் என்பதை வலியுறுத்தி கவர்னர் ஜெனரலுக்கு ராம்மோகன் ராய் எழுதிய கடிதம் இது.பொதுவான சில விஷயங்களைப்பற்றிய தங்களுடைய கருத்துகளை அரசின்முன் வைக்க இந்திய பிரஜைகள் தயங்குகிறார்கள். ஆனால், ஒரு சில விஷயங்களில் மௌனமாக இருப்பதும் குற்றமாகும். இந்தியாவை இன்று ஆள்பவர்கள் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு இந்தியர்களின் மொழி, இலக்கியம், பழக்கவழக்கங்கள், எண்ணங்கள் மிகவும் புதியவை, புதிரானவை. இந்தப் பகுதி மக்கள் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வார்களோ அதை அந்நிய ஆட்சியாளர்களால் எளிதில் தெரிந்துகொள்ளமுடியாது. அவர்களுக்கு இங்குள்ள நிலைமையைப்பற்றிச் சரியாக எடுத்துச் சொல்லவில்லை என்றால் நாம் பெரும் தவறு செய்தவர்களாவோம். எங்களது கடமையில் தவறிவிட்டோம் என ஆட்சியாளர்களும் எங்களைக் குற்றம் சொல்வார்கள். ஏனெனில் நாம் நம் நாட்டைப்பற்றிய சரியான விவரங்களை ஆட்சியாளர்களுக்கு அறிவித்தால்தான் நமக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை அவர்களால் எடுக்கமுடியும். நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் நமக்குத் தெரிந்த உள்ளூர் நிலவரங்களைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டும்.கல்கத்தாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒரு புதிய பள்ளிக்கூடம் இந்தியர்களின் இப்போதையக் கல்வி முறையை மேம்படுத்த நினைக்கும் பிரிட்டிஷ் அரசின் வரவேற்கத்தக்க விருப்பத்தையே சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டபோது, இந்தியாவைப்பற்றிய பாடங்களைக் கற்பிக்க ஒரு பெரிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கவேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அறிகிறோம்.இந்திய மாணவர்களுக்கு கணிதம், தத்துவம், வேதியியல், உடற்கூறியல் மற்றும் அதைப்போன்ற மற்ற உபயோகமுள்ள பாடங்களைக் கற்பிக்கும் பொருட்டு ஐரோப்பிய ஆசிரியர்களை நியமிப்பதற்காகத் தொகை செலவழிக்கப்படுமென மனதார நம்பினோம். இந்தக் கல்வித் துறைகள் ஐரோப்பிய நாடுகளில் முழுமைக்கு மிக அருகில் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அந்நாடுகளின் குடிமக்களை உலகின் பிற பகுதிகளில் இருப்பவர்களைவிட மேலே கொண்டுசென்றுள்ளன. இந்தியாவின் வளரும் தலைமுறைக்கும் இதுபோன்ற கல்வி தரப்பட்டு, அறிவொளி பரப்பப்படும் என்று மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்தோம். நாங்கள் அரசுக்கு இது தொடர்பாக ஏற்கெனவே நன்றி சொல்லிவிட்டிருக்கிறோம். மேற்குலகிலேயே அதிக விழிப்பு உணர்வும் மிகுந்த தாராள மனமும் கொண்ட தேசத்துக்கு, நவீன ஐரோப்பாவின் அறிவியல், கலை தொடர்பான அறிவை ஆசியாவிலும் ஊன்றச் செய்யும்படியான உத்வேகத்தை அளித்த சர்வவல்லமை பொருந்திய இறைவனுக்கு நன்றி செலுத்தினோம்.ஆனால், இந்தியர்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததையே கற்பிக்கும் பொருட்டு இந்து பண்டிட்டுகளின் பொறுப்பில் ஒரு சமஸ்கிருதப் பள்ளிக்கூடத்தை அரசு தொடங்கப்போவதாக இப்போது அறிகிறோம். இந்தப் பள்ளிக்கூடங்கள் (பேக்கன் பிரவுபின் காலத்துக்கு முன்பாக ஐரோப்பாவில் இருந்தவற்றைப்போன்றவை) இளம் வயதினரின் மனங்களில் சமஸ்கிருத இலக்கணம் தத்துவம் தொடர்பான பெரும் சுமையைத்தான் ஏற்றப்போகின்றன. அவற்றால், அவர்களுக்கோ சமூகத்துக்கோ யாதொரு பயனுமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்த விஷயங்களையும் அவற்றைப்பற்றிப் பின்னர் வந்துள்ள கவைக்குதவாத வெற்று நுட்பங்களையும் விளக்கங்களையும்தான் மாணவர்கள் கற்கப்போகிறார்கள்.சமஸ்கிருதம் ஒரு கடினமான மொழி. அதை நன்கு கற்றுக்கொள்ள வாழ்நாள் முழுவதும் செலவழிக்கவேண்டும். மக்களிடையே அறிவைப் பரப்புவதற்குத் தடையாக நிற்கிறது அது. அதனைக் கஷ்டப்பட்டுப் படிப்பதால் கிடைக்கும் பலனும் மிக மிகக் குறைவு. ஆனால் இந்த மொழியை அதில் புதைந்துள்ள விலைமதிப்பு மிகுந்த விஷயங்களுக்காகவாவது மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டுமென்று நினைத்தால், அதற்குப் புதிய சமஸ்கிருதப் பள்ளிகளை ஸ்தாபிப்பதைவிட வேறு எளிய வழிகள் உள்ளன. ஏனெனில், இந்தியாவின் எல்லா பாகங்களிலும் தற்போது ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய பள்ளிகள் கற்பிக்கப்போகும் சமஸ்கிருதத்தையும், மற்ற இலக்கியங்களையும் கற்பிக்க ஏராளமான பேராசிரியர்கள் இருக்கின்றனர். ஆகவே இந்த மொழியை அறிந்துள்ள அந்தப் பேராசிரியர்களுக்குப் பண உதவி செய்தால் அவர்கள் இந்தப் பணியைக் கூடுதல் உற்சாகத்துடன் செய்வார்கள்.இந்தப் பிரஜைகளின் அறிவை விசாலப்படுத்துவதற்கும் அவர்களுடைய தற்போதைய நிலையை உயர்த்துவதற்காகவும்தான் ஆங்கிலேய அரச தொகை ஒதுக்கியிருக்கிறதென்பதால், இப்போது அரசு வகுத்திருக்கும் திட்டத்தை நிறைவேற்றினால் மேற்சொன்ன நோக்கம் நிறைவேறாதென்பதையும் தாழ்மையாகச் சொல்லிக் கொள்கிறோம். இளம் வயதினர் சமஸ்கிருத இலக்கணத்தைக் கற்பதிலேயே தங்களுடைய பொன்னான நேரத்தைச் செலவழித்தால் அதனால் அவர்களுடைய நிலையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படாது. இதைப்போலவே வேதாந்தத்தைப் படிப்பதாலும் மாணவர்களின் நிலைமை மேம்படப் போவதில்லை. உதாரணமாக ஆத்மா இறைவனின் எந்த அளவுக்கு இணைந்திருக்கிறது. இறைவனுடன் அதன் தொடர்பு என்ன என்பவற்றைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது. அதுபோலவே, நாம் காண்பதொன்றும் உண்மையல்ல. மாயையே. தந்தை, சகோதரர்கள் என யாரும் இல்லை. ஆகவே அவர்களிடம் அன்பு செலுத்தத் தேவையில்லை. அதனால் இந்த உலகை விட்டு எத்தனை சீக்கிரம் போகிறோமோ அத்தனையும் நல்லது. இதுபோன்ற வேதாந்தக் கொள்கைகளைப் படிப்பதால் சமூகத்தில் அவர்களுடைய நிலை உயராது. மேலும் ஆட்டினைக் கொல்லும் ஒருவன் வேதங்களிலிருந்து எந்தச் சில வரிகளை ஓதினால் அவன் பாவமற்றவனாவான் என்பதையோ, வேதங்களின் தன்மை, அதைப் படிப்பதில் என்ன பயன் என்பதையோ தெரிந்துகொள்வதால் அவனுக்கு ஒரு பிரயோசனமும் இருக்காது.அதைப்போலவே இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பொருட்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆத்மாவுக்கும் உடலுக்கும் இடையே என்னவிதமான தொடர்புள்ளது. காதுக்கும் கண்ணுக்கும் இடையே என்ன தொடர்பு என்பதைப்பற்றிப் பேசுவதால் ஒரு பலனுமில்லை. மேற்சொன்ன கற்பிதமான விஷயங்களைப் படிக்கச் சொல்லி ஊக்குவிப்பது எப்படிப்பட்டது என்பதை நன்கு அறிந்துகொள்ளவேண்டுமானால், பேக்கன் பிரபுவுக்கு முன்னால் அறிவியல் இலக்கியம் என்ன நிலையில் இருந்தது, அவருடைய வருகைக்குப் பின் எப்படி மாறியது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால்போதும். பிரிட்டிஷ் மக்களுடைய அறிவு வளரவேண்டாமென அரசு கருதியிருந்தால், பழைய கல்வி முறைக்குப் பதிலாக பேக்கனிய கல்வியை அது அமல்படுத்தியிருக்காது. அதுபோலவே, சமஸ்கிருதக் கல்வியை ஊக்குவிப்பதென்பது இந்த நாட்டு மக்களை அறியாமையில் தொடர்ந்து மூழ்கடிக்கவே செய்யும். அதுதான் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் நோக்கமா? இந்த அறியாமையைப் போக்கி, மக்களை மேம்பாடடையச் செய்வதுதான் பிரிட்டிஷ் அரசின் குறிக்கோள் என்றால், கணிதம், தத்துவம், வேதியியல், உடற்கூறியல் போன்ற பல்வேறு உபயோகமுள்ள விஷயங்களைக் கற்பிக்கவேண்டும். இதற்காக ஐரோப்பாவில் படித்தவர்களை வேலைக்கு அமர்த்தவேண்டும். புதிதாகத் தொடங்கப்படவுள்ள கல்லூரிக்குப் புத்தகங்கள், மேசைகள், நாற்காலிகள், மற்ற உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் கொடுக்கவேண்டும்.மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் அரசும், நாடாளுமன்றமும் இங்கிலாந்திலிருந்து வெகு தூரத்திலிருக்கும் இந்திய நாட்டை மிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்கின்றன. அதன் பிரஜைகளின் நன்மைக்காகப் பாடுபடுகின்றன. இந்த விஷயத்தைத் தங்களுடைய கவனத்துக்குக்கொண்டு வருவதன் மூலம் நான் இந்தப் பிரிட்டிஷ் அரசுக்கும், எனது சக இந்தியப் பிரஜைகளுக்கும் எனது கடமையை நிறைவேற்றியவனாவேன். எனவே, நான் கூடுதல் சுதந்தரம் எடுத்துக்கொண்டு இந்த விஷயங்களைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னதைத் தாங்கள் மன்னித்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு ராம்மோகன் ராய்கல்கத்தா=========நவீன இந்தியாவின் சிற்பிகள்தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹாதமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 528 விலை ரூ 400இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/9789351351818.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE