போராட்டமும் புரட்சியும்

Added : மே 16, 2015 | |
Advertisement
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருந்திருக்கவில்லை. 1770களுக்கும் 1850களுக்குமிடையே, அதாவது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இந்திய ஸம்ஸ்தான மன்னர்களும், அவர்களுடைய ராணுவங்களும் வெளிப்படுத்திய இந்த எதிர்ப்பை பிரிட்டிஷ் அரசு தமது ராணுவத்தின் உதவியுடன்தான் முறியடிக்க வேண்டியிருந்தது. இவற்றைத் தவிர, இந்திய மதத் தலைவர்களும்,
 போராட்டமும் புரட்சியும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருந்திருக்கவில்லை. 1770களுக்கும் 1850களுக்குமிடையே, அதாவது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இந்திய ஸம்ஸ்தான மன்னர்களும், அவர்களுடைய ராணுவங்களும் வெளிப்படுத்திய இந்த எதிர்ப்பை பிரிட்டிஷ் அரசு தமது ராணுவத்தின் உதவியுடன்தான் முறியடிக்க வேண்டியிருந்தது. இவற்றைத் தவிர, இந்திய மதத் தலைவர்களும், விவசாயிகளும், ஆதிவாசிகளும் நிலம் மற்றும் இயற்கை வளம் தொடர்பாகவும் மதப் பழக்கவழக்கங்கள் தொடர்பாகவும் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் சிறிய அளவில் ஏராளமான கலகங்கள் நடத்தியதவண்ணமிருந்தனர்.ஆனால் இந்த எதிர்ப்புக்கெல்லாம் நாடு தழுவிய போராட்டங்களாக இல்லாமல் ஒரு சில பிரதேசங்களில் மட்டுமே காணப்பட்டதால், இவற்றால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எந்தவித அபாயமும் நேரவில்லை. ஆனால் பிரிட்டிஷ் அரசையே குலுக்கிய ஒரு புரட்சி 1857ம் ஆண்டு முற்பகுதியில் தொடங்கியது. இதனை ஒருசாரார் (பெரும்பாலும் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள்) 'சிப்பாய் கலகம்' என்றும், வேறொரு சாரர் (இந்திய எழுத்தாளர்கள்) 'இந்தியாவின் முதல் சுதந்தரப் போர்' என்றும், வர்ணிக்கின்றனர். ஆனால் இந்தப் புரட்சி முதலாவது வருணனையைவிட வெகுவாக மேலானது. எனினும் இரண்டாவதைவிடக் கொஞ்சம் குறைவானதுதான். கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிப்பாய்களின் அதிருப்தியில் தொடங்கியது இந்தப் புரட்சி. அதில் காலனி ஆட்சியின் விவசாயக் கொள்கையில் அதிருப்தியடைந்த விவசாயிகளும் சேர்ந்துகொண்டனர். கிறிஸ்துவப் பாதிரிகளின் அகம்பாவமும் அரசாங்கமே இந்தியர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சிக்கிறது என்ற பயமும் இந்த அதிருப்திக்குத் தூபமிட்டன. கம்பெனி ஆட்சியினால் அதிகாரமும் பதவியும் பறிக்கப்பட்ட ஸம்ஸ்தான மன்னர்களும் நிலப்பிரபுக்களும் இந்தப் புரட்சி நெருப்பை மேலும் விசிறிவிட்டனர்.ஆனால், இந்தப் புரட்சியில் பங்கெடுத்தவர்களுக்குத் தாங்களனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோ சுதந்தரம் என்ற நவீனச் சிந்தனையோ இல்லாமலிருந்தது. அந்தப் புரட்சி வெற்றி பெற்றிருந்தாலும்கூட, அதன் விளைவாக ஒரு புதிய இந்திய அரசு உருவாகியிருக்காது. பதிலாக, பிரிட்டிஷாரின் வருகைக்கு முன் இந்தியாவிலிருந்த ஆட்சிமுறையே திரும்பிவந்திருக்கலாம். அதாவது டில்லியில் எந்தவிதப் பெரிய அதிகாரமும் இல்லாத ஒரு மொகலாய மன்னரும் பிராந்தியங்களில் அவர்களுடைய நவாபுகளும் தளபதிகளும் ஆட்சி புரிய ஆரம்பித்திருக்கலாம். புரட்சியாளர்கள் வெற்றி பெற்றிருந்தால், சண்டைகள் கொஞ்சம் குறைந்துபோயிருக்கலாம். பொருளாதாரம் பரிதாபமான நிலையிலேயே இருந்திருக்கும். அவ்வளவுதான், நாட்டில் அமைதியோ வளர்ச்சியோ ஏற்பட்டிருக்காது.இருப்பினும், இந்தப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. இதன் தாக்கம் இந்தியாவின் பல இடங்களில் காணப்பட்டது. கல்கத்தா, தில்லி நகரங்களுக்கு அருகில் அமைந்திருந்த ராணுவ முகாம்களிலிருந்து தொடங்கிய இந்தப் புரட்சி விரைவிலேயே கிராமப்புறங்களுக்கும் பரவியது. எல்லா இடங்களிலும் மக்கள் அதற்கு ஆதரவு அளித்தனர். புரட்சியாளர்களுக்கும், பிரிட்டிஷ் அரசர்களுக்கு விசுவாசமாக இருந்த சிப்பாய்களுக்குமிடையே கடுமையான போர் மூண்டது. இந்தியாவின் வடக்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில பல இடங்களுக்கு இந்தப் புரட்சி பரவியது. விவரிக்க முடியாத அளவுக்கு இருதரப்பினரும் அக்கிராமங்களில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் மரித்தனர். அதற்கும் மேலானவர்கள் பட்டினி, வியாதிகள் மூலமும் உயிரிழந்தனர்.1858ம் ஆண்டின் நடுவில்தான் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தப் புரட்சியை ஒருவாறாக அடக்க முடிந்தது. வயதான காரணத்தால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தளர்ந்துபோயிருந்த மொகலாயச் சக்கரவர்த்தி பஹதூர்ஷா ஸஃபர் புரட்சியாளர்களுக்கு உதவி செய்ததாகத் தெரியவந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி இவரை ரங்கூனுக்கு நாடு கடத்தியது. இந்தியாவை ஆளும் பொறுப்பை மத்திம வயதும் கூடுதல் அதிகாரமும் கொண்ட லண்டன் மகாராணி விக்டோரியா ஏற்றுக்கொண்டார். இந்தியர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்குப் பதிலாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக ஆனார்கள். அரசு நிர்வாகம் பெருமளவில் திருத்தியமைக்கப்பட்டது. ஒரு நிரந்தர சிவில் சர்வீஸ் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட அளவில் அதன் அதிகாரிகள் மாஜிஸ்ட்ரேட்டுகளாகவும் வரி வசூலிப்பவர்களாகவும் செயல்பட்டனர். மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் அவர்கள் நிதி, உள்துறை, கல்வி, பொதுப்பணி ஆகிய துறைகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்தனர். ராணுவமும் திருத்தியமைக்கப்பட்டது. பின்னொரு காலத்தில் ஏதேனும் புரட்சி வெடித்தால் ராணுவத்தை உடனுக்குடன் அனுப்பும் வகையில் நாடு முழுவதும் ரயில் பாதைகள் போடப்பட்டன.இந்த 1857 போராட்டம் வரலாற்றறிஞர்கள் மற்றும் பொது மக்களுடைய கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இது நடந்து 150 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் இதனைப்பற்றிய புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. போராட்டத்தின்போது அடைந்த வெற்றி, தோல்விகளைப்பற்றியும், அதில் பங்கெடுத்த இரு தரப்பு நாயகர்கள் வில்லன்கள்பற்றியும் தொடர்ந்து புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஆனால், அதே 1857ம் ஆண்டிலேயே மேற்சொன்ன போராட்டத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்த வேறொரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்ததை அநேகமாக மறந்துவிட்டோம். அதுதான் இந்தியாவில் முதன் முதலாகப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்ட விஷயம்.முதல் சுதந்தரப் போராட்டம்/கலகம் நடந்த அதே ஆண்டிலேயே கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகங்கள்தான் நவீன இந்தியாவை உருவாக்க உதவின. சமூகவியல் நிபுணர் ஆந்த்ரே பெத்தெய்ல் சுட்டிக்காட்டியிருப்பதுபோல 'பல நூற்றாண்டுகளாகப் பழைமையில் மூழ்கியிருந்த, ஏற்றத்தாழ்வுகள் நிலவியிருந்த ஒரு சமூகத்தில் அறிவுரீதியாகவும் அமைப்புரீதியாகவும் இந்தப் பல்கலைக்கழகங்கள் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தன.” இதுவரை சாதி, மதம், உறவுமுறை ஆகியவை மட்டும் பெரும் பங்கு வகித்த ஒரு சமூகத்தில் ஆண்/பெண் அல்லது மத, இன வேறுபாடில்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும்விதத்தில் அமைந்திருந்தன இந்தப் பல்கலைக்கழகங்கள். மேற்சொன்ன வேறுபாடுகள் சமூகத்திலிருந்து முழுவதாக நீங்கிவிடவில்லையெனினும் அவற்றைப்பற்றி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்த வங்காளம், பம்பாய், மதராஸ் ஆகிய மூன்று முக்கிய இடங்கள் ஒவ்வொன்றும் பரப்பில் ஒரு பெரிய ஐரோப்பிய நாட்டுக்குச் சமமாக இருந்தது. அவற்றில் வாழ்ந்திருந்த மக்கள் பல்வகைப்பட்டவர்களாக இருந்தனர். மேற்சொன்ன மூன்று பல்கலைக்கழகங்கள் இந்த மாகாணங்களின் தலைநகரங்களில் நிறுவப்பட்டன. இதன்பின்னர் அன்றைய உ.பி.யில் அலகாபாத்திலும், பஞ்சாப் மாகாணத்தின் அன்றைய தலைநகரான லாகூரிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. சிற்றூர்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அவை அந்தந்தப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டன. தங்களுடைய பாடதிட்டங்களை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே நிச்சயித்துக் கொண்டன. இவையே மாணவர்களுக்குப் பட்டங்களையும் அளித்தன.இந்தப் பல்கலைக்கழகங்களில் அனைத்துப் பிரிவு மக்களும் சேர்ந்து படிக்கலாமென்றிருந்தாலும் முதல் சில ஆண்டுகளுக்கு பெரும்பாலும் பிராமணர்கள்தான் இங்கு உற்சாகத்துடன் சேர்ந்து படித்தனர். எழுத்தர்களாகவும், அறிவுஜீவிகளாகவும், பிரிட்டிஷாருக்கு முன்பிருந்த ஆட்சியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் பணிபுரிந்த இந்து சமூகத்தின் உயர் சாதியான பிராமணர்கள் இப்போது தங்களுடைய புதிய எஜமானர்களுக்குக் கீழேயும் அதே பணிகளைச் செய்ய முன்வந்தனர். இந்தியாவில் மேற்குப் பகுதியில் அன்று நிறுவிய நிலைமையை ஆய்வு செய்த சமூகவரலாற்றில் நிபுணர் ரவீந்தர் குமார் சொல்கிறார். 'மொத்த மக்கள்தொகையில் பிராமணர்கள் ஐந்து சதவிகிதம்தான் இருந்தனர் என்றாலும் 1860களின் காலயளவில் பல்கலைக்கழக மாணவர்களில் எண்பது சதவிகிதம் பேர் பிராமணர்களாக இருந்தனர். அவர்கள் நவீனக் கல்விக்குத் திசைமாறியதில் இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதலாவது, அறிவுத் தேடலில் அவர்களுடைய இயல்பான ஆர்வம்; இரண்டாவது பிரிட்டிஷ் ஆட்சியின் குமாஸ்தாக்கள், ஆசிரியர்கள், வரி வருவாய் வசூலிப்பவர்கள், நீதியரசர்கள் ஆகிய பதவிகள் கிடைப்பதற்கு இந்தப் படிப்பு உதவும். கல்வி நிலையங்களில் அதிகம் பேர் சேர்ந்து படித்ததைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக அரசு வேலைகளிலும் பிராமணர்களே பெருமளவில் இடம்பிடித்தனர். உதாரணமாக, 188687ல் அன்றைய பம்பாய் அரசின் கீழ் பணிபுரிந்த 384 அதிகாரிகளில் 328 பேர் இந்துக்களாக இருந்தனர். இவர்களில் 211 பேர் பிராமணர்கள். இவர்களிலும்கூட, ஒரு பெரும் எண்ணிக்கை பம்பாய் மாகாணத்தின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த 'சித்பவன் பிராமணர்'களாக இருந்தனர். இந்தப் பிராமணர்களில் சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்பதே போதுமென்றிருந்தபோது, மற்றவர்கள் வேறுவிதமாகச் சிந்தித்தனர். இவர்கள் பல்கலைக்கழகங்களில் எட்மண்ட் பர்க், ஜான்ஸ் ஸ்டுவேர்ட் மில், ஜெர்மி பெந்தம் போன்ற வேறு பல ஐரோப்பிய சிந்தனையாளர்களைப்பற்றிப் படித்ததன் விளைவாக இந்தியாவை ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக இந்தியர்களே ஆளவேண்டும்; இந்தியாவுக்கான சட்டங்களை இந்தியர்கள் இயற்றவேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களிடம் எழுந்தன.=========நவீன இந்தியாவின் சிற்பிகள்தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹாதமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 528 விலை ரூ 400இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/9789351351818.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X