""நம்மூர் பசங்க, மாநில அளவில் சாதிச்சு காட்டிட்டாங்க பார்த்தீங்களா,'' என்றபடி, உற்சாகத்துடன் வந்தாள் சித்ரா.""ஆமாக்கா, திருப்பூர் மாவட்டம் உருவான பிறகு, பிளஸ் 2 தேர்வுல மாநில அளவில் முதலிடம் பெற்று, மாணவி பவித்ரா சாதனை படைச்சது, எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஒரு விழாவுல, நம்ம கலெக்டர் பேசும்போது, மாநில அளவுல திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை கெடைச்சிருக்கு; இறைவன் ஆசீர்வாதம்னு நெகிழ்ந்து போனாரு,'' என்றாள் மித்ரா.""ஆமா, அப்படியும் பேசிக்கிறாங்க. ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், புதுசா லட்சுமி ஹயக்கிரீவர் சன்னதி கட்டியிருக்காங்க. அங்க, தேர்வுக்கு முன்னாடி, மூணு வாரம் சிறப்பு வழிபாடு நடத்துனாங்க. அதனால, மாநில அளவுல மார்க் கெடைச்சிருக்குனு பக்தர்கள் பரவசம் ஆகிட்டாங்க. பத்தாம் வகுப்பு "ரிசல்ட்'டை எதிர்பார்க்கறவங்க, ஏலக்காய் மாலையுடன் ஹயக்கிரீவர் சன்னதியில் வழிபாடு செய்றாங்க,'' என்றாள் சித்ரா.""நம்மூரு "சிட்டி மம்மி' தலைதெறிக்க ஓடி வந்தாங்களாமே. அந்த விஷயம் ஒங்களுக்குத் தெரியுமா,'' என, கேட்டாள் மித்ரா.""என்னப்பா சொல்றே. எதுக்கு அவுங்க ஓடணும்; அவுங்கள பார்த்துதானே மத்தவுங்க ஓடணும்,'' என்றாள் சித்ரா.""பொறுப்புல இருக்கும்போதே, வீட்டு விசேஷங்களை நடத்தி, "கல்லா' கட்டணும்னு முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு. சகோதரி இல்லத்திருமண விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக, செட்டிபாளையம் போயிருக்காங்க. தி.மு.க., பிரதிநிதி குடும்பத்தை லாரி டிரைவர் அடிச்சுக் கொலை செய்ததா போலீஸ் தரப்புல சொல்றாங்களே. அந்த ஏரியாவுக்குதான் போயிருக்காங்க. அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்தவங்க, ஓடிப்போயி பார்த்திருக்காங்க. "சிட்டி மம்மி'யும் பதற்றத்தோட போயிருக்காங்க. ரத்தம் சிந்தியிருப்பதை பார்த்ததும், பயந்து, தலைதெறிச்சு ஓடி வந்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.""இந்த கொலை வழக்குல, எனக்கு ஏகப்பட்ட சந்தேகம் இருக்கு. வேலைக்கு சேர்ந்து, 15 நாள்தான் ஆச்சுன்னு சொல்றாங்க; "அட்வான்ஸ்' வாங்கியதில் பிரச்னைன்னு சொல்றாங்க. சொல்ற காரணம் ஒவ்வொன்னும் சப்பையா இருக்கே,'' என, சித்ரா கேட்க, ""ஆமாக்கா, கொலை செய்யப்பட்ட தி.மு.க., பிரதிநிதி, "ரியல் எஸ்டேட்' தொழில் செய்துட்டு இருந்திருக்கார். கொடுக்கல்-வாங்கல் பிரச்னை இருந்திருக்கலாம்; நிலம் வாங்குறதில் பிரச்னை எழுந்திருக்கலாம். சரியான கோணத்துல போலீஸ் விசாரிக்கலைன்னு நெனைக்கிறேன். ஆனா, டிரைவர்தான் காரணம்னு சொல்லி, வழக்கை மூடிட்டாங்க,'' என, அலுத்துக் கொண்டாள் மித்ரா.""சில அரசாங்க அலுவலகங்கள், இரவு நேரமும் "பிஸி'யா செயல்படுது,'' என, பேச்சை மாற்றினாள் சித்ரா.""ஆர்.டி.ஓ., ஆபீசுல வழக்கமா நடக்குறதுதானே?,'' என, "அசால்ட்'டாக சொன்னாள் மித்ரா.""அங்க இல்லப்பா, பத்திரப்பதிவு ஆபீசுல, "நைட்' நேரத்திலும் பத்திரப்பதிவு ஜோரா நடக்குது. முக்கியமான வி.ஐ.பி.,களா இருந்தா, "நைட்' நேரத்துல, கமுக்கமாக பதிவு செஞ்சு அனுப்புறாங்க,'' என்றாள் சித்ரா.""பணம் காய்க்கும் மரமா இருந்தா, நம்மூர் அதிகாரிகள், "மிட் நைட்'டா இருந்தாலும், வேலை பார்ப்பாங்க. இதெல்லாம், நம்மூர்ல சகஜம் என்றவாறு, ""கொஞ்ச நாளைக்கு முன்னாடி ம.தி.மு.க., கூட்டம் நடந்துச்சே. மாநில நிர்வாகிக வந்திருந்தாங்க. <உள்ளூர் பிரமுகர்களை கூப்பிட்டு, ஏகத்துக்கும் வறுத்தெடுத்திருக்காங்க. இப்படியே, அமைதியா இருந்தா, கட்சி காணாம போயிடும். உள்ளூர் பிரச்னைகளை கையிலெடுத்து, போராட்டம் நடத்துங்க. தேர்தல் வரப்போகுது; மக்கள் நம்மை நெனைச்சு பார்க்க வேண்டாமா என அறிவுரை வழங்கியிருக்காங்க. ரோஷப்பட்ட அக்கட்சி நிர்வாகி, அதே மேடையில் மைக் கெடைச்சதும், மாநகராட்சி நிர்வாகத்தை உண்டு, இல்லைன்னு பண்ணிட்டார்,'' என்றாள் மித்ரா.""இந்தக்கட்சிக்காரங்க எப்பவுமே அப்படித்தான். மேடையில் நல்லா "சவுண்ட்' கொடுத்து பேசுவாங்க. ஆனா, தேர்தல் நேரத்துல கோட்டை விட்டுடுவாங்க,'' என்று சொல்லியவாறு, மார்க்கெட்டுக்கு கௌம்பினாள் சித்ரா.