பாட்னா: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, பீகாரில் அமைய உள்ள, உலகிலேயே மிகப் பெரிய இந்து கோவிலைக் கட்ட, 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், தங்கள் சொந்த நிலங்களை வழங்கி உள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த, 'மகாவீர் மந்திர் டிரஸ்ட்' என்ற அமைப்பு, பீகாரின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில், 500 கோடி ரூபாய் செலவில், உலகிலேயே மிகப் பெரிய கோவிலை கட்ட உள்ளது. இதற்காக, 200 ஏக்கர் பரப்பில், 2,500 அடி நீளம், 1,300 அடி அகலம், 400 அடி உயரத்தில் அமைய உள்ள, இந்த பிரம்மாண்ட கோவிலில், ஒரே நேரத்தில், 20 ஆயிரம் பேர் அமர்ந்து தரிசனம் செய்ய முடியும். கோவிலின் மூலஸ்தானத்தில், ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய கடவுள் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கோவிலைக் கட்ட ஏராள மான இந்துக்கள் நிலங்களை வழங்கியுள்ளனர். 'விராட் ராமாயண் மந்திர்' என்ற இந்த கோவில் அமைய உள்ள இடத்தில், முஸ்லிம்களுக்கும் சொந்தமான இடங்கள் இருந்தன. அங்கு கோவில் வரவுள்ளது என்பதை அறிந்ததும், தாங்களாகவே முன்வந்து, 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், தங்களின், 20க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை, டிரஸ்ட் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதுபோல, பீகாரில் இரண்டு இடங்களில், கோவில்கள் கட்ட, முஸ்லிம்கள் தாங்களாக முன்வந்து நிலங்களை வழங்கி உள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப் பெரிய கோவிலாக, கம்போடியாவின் அங்கோர்வாட் கோவில் உள்ளது. அதை விட, இந்த ராமாயண் கோவில் மிகப் பெரியது எனக் கூறப்பட்டுள்ளது.
கோவிலுக்கு இந்துக்கள் நிலம் வழங்குவது பெரிய விஷயமல்ல. ஆனால், முஸ்லிம்கள் தாங்களாகவே நிலங்களை வழங்க முன்வந்தனர். மேலும், சந்தை விலைக்கு இல்லாமல், அரசு விலைக்கு நிலங்களை வழங்கியது, அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆச்சார்ய கிஷோர் குணால்,
செயலர்,
மகாவீர் மந்திர் டிரஸ்ட்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE