மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்| Dinamalar

மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்

Added : மே 21, 2015 | கருத்துகள் (2)
மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகின்றன. தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் ஒருபுறம் காத்திருக்க, தங்களது பிள்ளைகள் எடுக்க போகும் மதிப்பெண் தங்களை சமூகத்தில் சிறந்த பெற்றோராக அடையாளம் காட்டும் என்ற ஆவலுடனும், தங்களது எதிர்காலத்தை அவர்களின் மதிப்பெண்களே தீர்மானிக்கும் என்றும் சில பெற்றோர் நினைக்கின்றனர்.குருவி தலையில் தேங்காயை வைப்பது போல பெற்றோர் தங்களது கனவுகளையும், எண்ணங்களையும், குழந்தைகள் மீது திணித்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களின் மனநிலையை அறியும் மாணவர்கள் தேர்வின் முடிவிற்காக மிகவும் பதற்றத்துடனும் நடுக்கத்துடனும் காத்திருக்கிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் பெறாத மாணவர்கள், தற்கொலை மூலம் உயிரை விடும் கொடுமையும் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. 2020ல் இளைஞர் சக்தி இந்தியாவை வல்லரசு ஆக்கும் என்ற கோஷம் ஒரு புறம் முழங்க, மறுபுறம் தோல்வியை தாங்க இயலாது உயிரை துறக்கும் மாணவர் கூட்டம். இது ஏன்? சமூக பிரதிநிதிகளாகிய நாம் நம் கல்வி மற்றும் சமூக அமைப்பு முறையை சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களா அல்லது தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்களா? என்பதே கல்வியாளர் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. கல்வி அமைப்பின் மீது எழும் விமர்சனங்களையும் களைய வேண்டிய சூழலில் இருக்கிறோம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு, குடும்பச் சூழல் திணிப்பு, ஒப்பீட்டுத்தன்மை, சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார சூழல், தாழ்வுமனப்பான்மை போன்ற காரணிகளே பெரும்பாலும் தற்கொலைக்கு காரணமாய் அமைகின்றன.

எமிலி டர்ஹிம் என்ற சமூகவியல் ஆய்வாளர், '' தற்கொலை என்பது தனிநபரால் மேற்கொள்ளப்பட்டாலும் அது சமூகத்தின் பிரதிபலிப்பே ஆகும்'' என தெரிவிக்கிறார். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, ஜனவரி 2009 முதல் ஆகஸ்ட் 2014 வரை 2449 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. கல்விச்சூழல் மற்றும் பல்வேறு வகையான தனிப்பட்ட காரணங்களும் மேற்கூறிய தற்கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து 2014 வரை தமிழகத்தில் 5,823 சிறியவர்கள் (ஆண்) காணாமல் போனதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் மீது பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை திணிப்பது, தேர்வுகளில் மதிப்பெண் குறைந்தால் திட்டுதல், கொடுமைப்படுத்துதல், உடல் உறுப்பு குறைபாடு உள்ளோரை உறவினர்களே வெறுப்பது போன்றவை சிறுவர்கள் காணாமல் போவதற்கு காரணிகள். ''மனிதர்களிடம் சுய நம்பிக்கை, சுய கட்டுப்பாடு ஆகியவற்றை உருவாக்கி, அவர்களை மூடநம்பிக்கைகள் மற்றும் அறியாமையில் இருந்து விடுபட செய்து உண்மையாக சிந்திக்கச் செய்து பயனுள்ளவர்களாக ஆக்குவதே கல்வி'' என கிட்டிங்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால். இன்று நம் அடிப்படை கல்விமுறை எப்படி உள்ளது என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அமலில் உள்ளது. அறிவுக்குறை உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களின் தரம் உயர்த்துதல் ஆசிரியர்களின் கடமை. ஆனால் இப்பணியை கட்டாயத் தேர்ச்சி என்ற சட்டப்பிரிவு நீர்த்துப்போகச் செய்துள்ளது.

அண்மையில் பார்லி., நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், 'அனைவரும் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி பெறும் சட்டப்பிரிவை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். இச்சட்டப் பிரிவு, அடிப்படை கல்வித் திறனை மேம்படுத்தாது; மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் ஆகியவற்றை வெகுவாக குறைத்து உள்ளது' என குறிப்பிட்டுள்ளனர். சமூக ஏற்றத்தாழ்வு, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி காரணமாக மேல்நிலைக்கல்விக்கு வரும் போது மாணவர்கள் தடுமாறுகின்றனர். குழந்தைகளின் அறிவாற்றல் அளவினை மதிப்பீடு செய்யாது, அவர்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோர், தங்களது எண்ணங்களை நிறைவேற்றும் இயந்திரமாக மாணவர்களை சந்தைப்படுத்தியதால் தான் இந்த குழப்பம். புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சின் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய தனிப்பட்ட விளையாட்டுத் திறமை, குணநலன்களால் உலகம் புகழும் கிரிக்கெட் வீரராக புகழப்பெற்றார். உலகப் புகழ் பெற்ற புவிஈர்ப்பு விசை தத்துவத்தை கண்டறிந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மாணவனாக இருந்த பொழுது சரியாக பேச இயலாமையால் படிப்பில் பின் தங்கி இருந்தார். ஆனால் பிற்காலத்தில் சிறந்த அறிவியல் விஞ்ஞானியாக உருவெடுத்து நோபல் பரிசு வென்றார்.

அறிவியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லான டங்ஸ்டன் மின்விளக்கு (பல்பு) தாமஸ் ஆல்வாய் எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. எடிசன் மாணவர் பருவத்தில் படிக்க லாயக்கில்லை என்று ஆசிரியர்களாலும், எந்த வேலையையும் சரியாக செய்ய இயலாதவர் என்று நிறுவனங்களாலும் ஒதுக்கப்பட்டவர். உலகப்புகழ் பெற்ற பலரது மாணவப் பருவம் சிறப்பானதாக அமையவில்லை என்பதே மேற்கூறிய சான்றுகளில் இருந்து தெரிய வருகிறது. ஆகவே ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது. அவற்றை முறையாக கண்டறிந்து வெளிக்கொணர்வதே பெற்றோர், ஆசிரியர்களின் கடமை.


தீர்வு என்ன?

மதிப்பெண் மட்டும் வேலைவாய்ப்பை தீர்மானிக்காது என்று மாணவர்களை புரிய வைக்க வேண்டும். தொழிற்கல்வி, சுயதொழில் முனைவோர் படிப்பு ஆகியவற்றை மாணவர்களிடையே ஊக்குவித்து சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக திறன் சக்தி கொண்ட மாணவர்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும். அறிவு வளர்ச்சியில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தாமல், அவர்களின் பிற திறன்களை கண்டறிந்து முன் மாதிரி மாணவர்களாக உருவாக்கி தாழ்வு மனப்பான்மையை களைய வேண்டும். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டிற்கு நான்கு முறையாவது பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். இவ்வகையான கலந்தாய்வு கூட்டம் தற்கொலை போன்ற எதிர்மறையான சிந்தனைகளை மாற்றியமைக்க துணை புரியும். வாழ்க்கையை வாழ்வதற்கு தயார் செய்யும் முறையான அறிவூட்டலே கல்வி. தனிமனிதனின் ஆளுமையை வளர்த்தல், சமூகத்துடன் ஒருங்கிணைத்தல், தனித்திறமைகளை வளர்த்தல் ஆகியவை கல்வியின் நோக்கமாக இருக்கட்டும். காவு வாங்கும் கல்வி முறையை தூர எறிந்து, 'சமுதாயத்தில் வேரூன்றி வாழ மக்களை தயார் செய்வதே கல்வி' என்ற நிலையை ஏற்படுத்துவோம்!

- முனைவர்.ப.சேதுராஜகுமார், உதவிப் பேராசிரியர், சமூகவியல் துறை, மதுரைக் கல்லூரி. 98428 80634.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X