திருநெல்வேலி : நெல்லையில் தெருத்தெருவாக பூ விற்கும் தொழிலாளியின் மகள் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். திருநெல்வேலி, என்.ஜி.ஓ.,காலனி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி முத்துவேணி, சமூகஅறிவியலில் 99 மதிப்பெண் மற்றும் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்று 499 மதிப்பெண்களுடன் மாநில முதலிடம் பெற்றார். புனித ஜோசப் பெண்கள் பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளியாகும். அதிக அளவில் கிராமங்களை சேர்ந்த மாணவிகள் பயில்கின்றனர்.
முத்துவேணி கூறுகையில்,எனது தந்தை முத்துக்கிருஷ்ணன் தெருத்தெருவாக பூ விற்பனை செய்கிறார். தாயார் பார்வதி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். வறுமையான சூழலிலும் எனது அக்காள் இசக்கியம்மாள், அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார். வீட்டில் டிவி இருந்தது. இருப்பினும் படிப்பிற்காக கடந்த ஒரு ஆண்டாக கேபிள் இணைப்பை நிறுத்திவிட்டோம். தொடர்ந்து இதே பள்ளியில் பிளஸ்1 பயிலப் போகிறேன் என்றார்.
நெல்லை ரோஸ்மேரி பள்ளியில் பயிலும் ஆர்த்தி ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணுடன் 499 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம் பெற்றார். இவரது தந்தை செண்பகராமன், தாயார் ரேணுகா ஆகிய இருவரும் டாக்டர்கள். பெற்றோரைப்போலவே டாக்டராக விருப்பம் என்றார்.
நெல்லை மாவட்டத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை நான்குபேரும், மூன்றாம் இடத்தை 28 பேரும் பிடித்துள்ளனர்.