திருக்குறள் பண்டைய இலக்கியம். ஆனால் எப்போது படித்தாலும் இளமையாய் இருக்கிறது. கி.மு., கி.பி., என்பது எல்லாம் வரலாற்றிலிருந்து வயது சொல்லும் முயற்சியில் குத்தப்படும்
முத்திரைகள் தான்.ஒருவகையில் 23ம் புலிக்கேசிகளின், வாடகைக் புலவர்களின் வாய்க்கு வந்தது கூட வரலாறு தான். உண்மையில் வரலாற்றுக்கு பிந்தைய என்ற வரையறைகளைக் கடந்து இயங்குகிறது மனித வாழ்வியலின் பயணமும் பட்டறிவும்.
பரிணாம வளர்ச்சி
திருக்குறள் ஒரு படைப்பிலக்கியமாகவோ பக்தி இலக்கியமாகவோ கருத்தை திணிக்கும் கசாய இலக்கியமாகவோ இல்லாமல் ஒரு பட்டறிவு இலக்கியமாக இருக்கிறது.
திருக்குறள் ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. ஓர் உயர்ந்த நாகரிகத்தின் ஒட்டுமொத்த தெளிவின் திரள். திருக்குறள் ஒரு படைப்பு முயற்சி அல்ல. பரிணாம வளர்ச்சி. மிக உயர்ந்த மீமிசையே பூமிக்கு குடையாக முடியும். மிக உயர்ந்த உன்னதமே உலகுக்கு கொடையாக முடியும். திருக்குறளை நாம் எதற்காக இன்றும் கொண்டாடுகிறோம். காரணம் திருக்குறள் இன்றும் தேவைப்படுகிறது.தலைகுனியச் செய்யும் தலைப்புச் செய்திகள். தினந்தோறும் வானிலை அறிக்கை போல வாசிக்கப்படுகிற வக்கிரங்கள். சிறைவாசலில் நின்று சிரித்து கையசைக்கும் சில்லரை மற்றும் தேசிய கயவர்கள். குற்றங்களை விடவும் கொடுமையாய் வலிக்கிறது. குற்ற உணர்வு முற்றிலும் அற்றுப்போன அவலநிலை. சுற்றும் உலகம் சுருங்கிவிட்டது. ஆனால் வீடும் வீதியும் விலகிச் செல்கிறது.பலவகையிலும் குழம்பிக் கிடக்கிறது வாழ்க்கை. இருந்தாலும் குழைத்துப் போட ஒரு மருந்து கையில் இருக்கிறது. இப்போதும் இது நாட்டு மருந்து. இந்த நாட்டு மருந்து இரண்டாயிரம் ஆண்டுகாலம் ஆன பின்னாலும் காலாவதி ஆகாத கைமருந்து. இது மருந்தாகித் தப்பா மரம் இல்லை. மானிடம் நிலைக்க இந்த மண்ணில் என்றோ முளைத்து இன்னும் தழைக்கும் அறம்.
ஏன் உலகப் பொதுமுறை திருக்குறள் ஏன் உலக பொதுமறை அல்லது தமிழ்மறை என்று சொல்கிறார்கள். தமிழில் மறைப்பதற்கு எதுவுமில்லை. பொது மறை என்றாலும் கூட எதிர்மறை தான். உண்மையில் பொதுமறை என்பதே பொருத்தமற்றது. பொதுவான எதுவும் மறையாக, அதாவது மறைவாக இருக்கமுடியாது. மறை என்ற சொல்லின் பொருளும் சொற்பொருள் ஆக்கமும் மறைதல், மறைத்தல், ஒளிதல், ஒளித்தல், கமுக்கம், ரகசியம் என்ற அடிப்படைகளில் உருவாகி நிலை பெற்றது. வெளிப்படையான, சமயச்சார்பற்ற திருக்குறளை பொதுமறை என்பதற்கு பதிலாக உலகப்பொதுமறை என்று அழைப்பதே முறையாக இருக்கும். முறை என்பது அடைவு, நியமம். அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நிலைகளையும் முழுதாக உள்வாங்கி முறை செய்யக்கூடிய சொல் மறை அல்ல. எனவே திருக்குறளை உலகப்பொதுமுறை என அழைப்பதே பொருத்தம்.
திசைகாட்டும் கருவி திசைகளின் தேர்வு தெளிவாய் இருந்தால் வழிகள் பிறக்கும்; வாசல்கள் திறக்கும். வழிகாட்டிகள் உடன் வருபவர்கள் அவர்கள் யோசிக்க விடுவதில்லை. ஆனால் திசைகாட்டும் கருவி தீர்க்கமானது. தெற்கு வடக்கை தெரிவிக்கும். தேர்ந்தெடுக்கவேண்டியது நாம் தான். திசை என்பது திக்கு. திருக்குறள் காட்டும் திசை தெளிவானது. தீர்க்கமானது.அறத்தின் திசையாகவும் திருக்குறள் உள்ளது. அறம் நோக்கமாகவும், பயன்பாடாகவும், வழிமுறையாகவும் இருக்கிறது. அறநோக்கம், அறவழி, அறப்பயன் அதுவே அறத்தை பொருளை, இன்பத்தை வழி நடத்துகிறது.அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடைபல்லக்கை மாந்தன் சுமக்க, அதில் இருந்து மாந்தன் செல்வது, அறநெறி ஆகாது என்கிறது குறள்.பொருளுக்கும் அறமே அடிப்படை செயல்வகை என்ற சொல்லாடலை திருவள்ளுவர் மூன்று இடங்களில் கையாளுகிறார். தெரிந்து செயல்வகை, வினை செயல்வகை, பொருள் செயல்வகை.
அறம் பொருள் இன்பம் என்ற முப்பரிணாமக் கோட்பாடுகளுக்கும் ஒன்றை ஒன்று சாந்தனவாய் சாத்திய ஒருங்குடையதாய் உள்ளன. இந்த மூன்றுக்கும் அடிப்படை நிபந்தனையாய் இருப்பது அறமே.
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்வானின்றி அமையாது ஒழுக்குஎன நீர்பொருளாதாரத்தை உலகிற்கே முதலில் அறிமுகப்படுத்தியது திருக்குறள் தான்.வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் குறள் தெளிவுபடுத்துகிறது.வள்ளுவரின் அறம், சமயம் சாராத அறம். இடம், காலம், வலிமை சார்ந்த நடைமுறை அறம். மனித வளத்தில் முதலீடு செய்யும் முதல் அறநூல். திருக்குறள் காட்டும் அடிப்படைத் திசை அறம். அந்த அடிப்படைக்கு அடிப்படையாய் அடையாளம் பெறுவது மனச்சான்று. அச்சம் சார்ந்த அறம் அறமல்ல. பயன், புகழ் நோக்கும் அறம் உண்மையில் அறம் அல்ல. மனநலம் காக்க மருந்தொன்று உண்டு என்றால் அது தினம் ஒரு திருக்குறள் படித்து உணர்வது தான்.- பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.,ஒரிசா மாநில முதன்மை நிதி செயலர், bali909@gmail.com
வாசகர்கள் பார்வை
அன்பு பொழியும் இல்லம்
என் பார்வையில் வந்த 'அன்பே இனிமை அதுவே இல்லம்' கட்டுரை படித்தேன். வாழ்வை இனிதாக்கும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்துள்ளார் கட்டுரையாளர். அன்பு பொழியும் இடம் இல்லமே என்பதை உணர வைத்து விட்டார் வாழ்த்துக்கள்.- அ. முகமது இஸ்மாயில், தேவகோட்டை.
இரண்டாம் இதயம்
'தோல்வி நிலையென நினைக்கலாமா?' கட்டுரை படித்தேன். கட்டுரையாளரின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு கவிதையை போலவே இருந்தது. நமது இரண்டாம் இதயமாக மாறிவிட்ட அலைபேசி குறித்து எழுத்தாளர் எழுதியது இன்றைய
சூழ்நிலைக்கு பொருத்தமாக இருந்தது.- அன்புச் செல்வன், வீரபாண்டி.
நோய்க்கேற்ற மருந்து
அந்தந்த சீசனில் நோய்க்கேற்ற மருந்து தருவதைப் போல, தேவைப்படும் நேரத்தில் சரியான தகவல்களை
வெளியிடுவதில் தினமலர் நாளிதழை மிஞ்ச ஆளில்லை. நேற்று வெளியான என் பார்வை 'மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்' கட்டுரை, எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதமாக இருந்தது. இதை அரசு யோசிக்குமா.- எஸ்.ராஜசேகரன், மதுரை.
ஆகா... என்ன பொருத்தம்!
நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நேரத்தில், தினமலர் என் பார்வையில் 'மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்' கட்டுரை வெளியானது, பொருத்தம். மிகத் தேவையான விஷயங்களை மிகத் தேவையான நேரத்தில் வெளியிடும் தினமலர்
நாளிதழுக்கு என்னைப் போன்ற பெற்றோரின் கோடி நன்றிகள். மதிப்பெண்ணை மட்டுமே நேசிக்கும் பெற்றோருக்கு, மதுரை கல்லூரி உதவி பேராசிரியர் சேதுராஜகுமாரின் கட்டுரை, சரியான சவுக்கடி.- எம். ஆதிகேசவன், சிவகாசி.
நீர்த்துப் போனதா கல்வி
நம் அடிப்படை கல்விமுறை எப்படி உள்ளது என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அமலில் உள்ளது. அறிவுக்குறை உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் தரம் உயர்த்துதல் ஆசிரியர்களின் கடமை. ஆனால் இப்பணியை கட்டாய தேர்ச்சி என்ற சட்டப்பிரிவு நீர்த்துப் போகச் செய்கிறது. ஆசிரியரின் வரிகள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. தமிழகத்தின் கல்விமுறை கண்ணீர் விடும் முறையாக இருப்பதை தோலுரித்து காட்டுகிறது, என் பார்வையில் வெளியான 'மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்' கட்டுரை.
- கே. பத்மா, திருப்பத்தூர்.
தண்டட்டி வாங்கிய கதை
என் பார்வை பகுதியில் வெளியான 'அன்பே இனிமை, அதுவே இல்லம்' கட்டுரையை படித்தேன். பெண்டாட்டியை விற்று தண்டட்டி வாங்கிய கதைபோல,' பொருளாதார பாதிப்பை சரிகட்ட, பெண்களும் வேலைக்கு செல்லும் அவலநிலை தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதனால் குடும்பமும், குழந்தைகளும் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை கட்டுரை அழகாக எடுத்துக் கூறியது.
- ரா.ரெங்கசாமி, வடுகபட்டி.