சென்னை: ''நான் படித்து பெரிய நிலைக்கு வரணும்பா. உன் குணத்தை பார்த்து தானே இந்த சமூகம் என்னையும் மதிப்பிடும். திருடுறதை விட்டுரு,'' என, காவல் நிலையத்தில், தந்தையிடம் மகன் கண்ணீர் விட்ட சம்பவத்தை பார்த்து, போலீசாரே மனம் உருகினர்.
ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரவணன், 52; பெயின்டர். குடிப்பழக்கம் உடையவர். வீட்டில் உள்ள பணம், பொருட்களை திருடி குடிப்பது அவரது வழக்கம். அவரது மகன், மணிவண்ணன், 19. கடந்த ஆண்டு, பிளஸ் ? வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் படிக்க, நடனக் குழுவில் சேர்ந்து, 12 ஆயிரம் ரூபாய் சேர்த்து, வீட்டில் வைத்திருந்தார். அதை, சரவணன் திருடி, குடித்து ஊதாரித்தனமாக சுற்றியதால், கடந்த ஆண்டு, கல்லூரியில் சேரமுடியவில்லை. மணிவண்ணன் சம்பாதித்து வாங்கிய, 7,000 ரூபாய் மதிப்புள்ள சைக்கிளையும், சரவணன், விற்றுள்ளார். இந்த ஆண்டு, கல்லூரியில் சேர, மணிவண்ணன் முயன்று வருகிறார். இந்த நிலையில், சரவணன், அதே பகுதியில் உள்ள ஒரு நபரின், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அலைபேசியை திருடியதாக கூறப்படுகிறது. பறிகொடுத்தவர், ஆதம்பாக்கம், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்த மணிவண்ணன், நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு சென்றார். கல்லூரியில் சேர வைத்திருந்த பணத்தில், அலைபேசி வாங்கி கொடுத்து விடுவதாக, போலீசாரிடம் தெரிவித்தார்.
பின் தந்தையை பார்த்து, மணிவண்ணன் கூறியதாவது: திருந்துப்பா! நானே சம்பாதித்து படித்துக்கொள்கிறேன். உன்னிடம் ஒரு பைசா கூட கேட்கமாட்டேன். உன் குணத்தை பார்த்து தானே, என்னையும் இந்த சமூகம் மதிப்பிடும். நான் படித்து பெரிய நிலைக்கு வரணும்பா. உன் காலை பிடித்து கேட்கிறேன். திருடாதப்பா!. இவ்வாறு, மணிவண்ணன், கண்ணீர் விட்டு கூறினார். அதை பார்த்து, போலீசாரே மனம் உருகினர். சரணவனை எச்சரித்து, மணிவண்ணனை ஆறுதல்படுத்தி, தைரியமூட்டி அனுப்பினர்.