கமிஷன் வரணும் முன்னே... கான்ட்ராக்ட் வரும் பின்னே!| Dinamalar

கமிஷன் வரணும் முன்னே... கான்ட்ராக்ட் வரும் பின்னே!

Added : மே 24, 2015
Share
மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. தொப்பலாய் நனைந்து விட்டு, சுந்தராபுரத்தில் ஒரு வணிக வளாகத்துக்குள் ஒதுங்கியபடி, நின்று கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.''என்ன மித்து! அக்னி நட்சத்திரத்துல இப்பிடிக் கொட்டுது? நாட்டுல ஏதாவது நல்லது நடந்திருச்சா...ஒண்ணுமே புரியலை!'' என்றாள் சித்ரா.''அதான்க்கா ஆச்சரியமா இருக்கு... இப்போ மழை விட்டாலும், டூவீலர்ல, உக்கடம்
கமிஷன் வரணும் முன்னே... கான்ட்ராக்ட் வரும் பின்னே!

மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. தொப்பலாய் நனைந்து விட்டு, சுந்தராபுரத்தில் ஒரு வணிக வளாகத்துக்குள் ஒதுங்கியபடி, நின்று கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.''என்ன மித்து! அக்னி நட்சத்திரத்துல இப்பிடிக் கொட்டுது? நாட்டுல ஏதாவது நல்லது நடந்திருச்சா...ஒண்ணுமே புரியலை!'' என்றாள் சித்ரா.''அதான்க்கா ஆச்சரியமா இருக்கு... இப்போ மழை விட்டாலும், டூவீலர்ல, உக்கடம் வழியாகப் போக முடியாது. ரோட்ல அவ்ளோ தண்ணி ஓடும். எப்ப தான் அங்க பாலம் கட்டுவாங்களோ?'' என்றாள் மித்ரா.''அது இப்போதைக்கு நடக்காது. காந்திபுரம் பாலத்தைக் கட்டுறதுக்கே, எந்த டிபார்ட்மென்ட் ஒத்துழைப்பும் இல்லைன்னு ஹைவேஸ்காரங்க புலம்புறாங்க. கோவிலு, கடைங்க, டிரான்ஸ்பார்மர், இ.பி.,போஸ்ட்ன்னு நிறையா இடம் மாத்த வேண்டியிருக்கு. அதுக்குன்னு கலெக்டர் ஒரு மீட்டிங் போட்டாத்தான் கதையாகும்கிறாங்க. அவுங்க அதைப்பத்தியெல்லாம் கவலையேபடுறதாத் தெரியலை!'' என்றாள் சித்ரா.''எலக்ஷனுக்கு ஒரு வருஷம் கூட இல்லை. அதுக்கு முன்னாடியே கூட வந்துரும்கிறாங்க. ஆனா, 'அம்மா' அறிவிச்ச எந்த திட்டமுமே தொடங்கலையே. மறுபடியும், அவுங்க சி.எம்., ஆனாலாவது வேலை வேகமா நடக்குமா?''என்றாள் மித்ரா.''இப்ப இருக்கிற 'அஃபிஷியல் செட்டப்'பை வச்சு, வேலை பாக்கணும்னு நினைச்சா, அது ஆவுற காரியமில்லை. கார்ப்பரேஷன்ல முக்கியப் பொறுப்புல இருக்கிறவுங்களை 'டம்மி'யா வச்சிக்கிட்டு, இதையெல்லாம் செய்யுறது, கண்டிப்பா நடக்காது. நம்ம மேயரை வேற 'டம்மி'யாக்கி வச்சிருக்காங்க'' என்றாள் சித்ரா.''கரெக்ட்க்கா! தீர்ப்புக்கு அப்புறமா, சென்னை, மதுரை மேயரெல்லாம் 'அம்மா' பாத்திருக்காங்க. நம்மூரு மேயர், அந்த பட்டியல்ல இல்லை. பெரிய ஊர் மேயருங்களை மட்டும் பாக்கிறதா இருந்தாலும், ஸ்டேட்லயே ரெண்டாவது பெரிய சிட்டி, கோயம்புத்துார் தான...?''''அது தான், நம்மூரு சார்புல, அமைச்சர் போயிருக்கார்ல. யாரு பார்த்தா என்ன...ஊருக்கு ஏதாவது நல்லது நடந்தா சரி. போன வருஷம் 'அம்மா' அறிவிச்சதுல, 7 திட்டம், சென்னையில தான் கிடப்புல கிடக்குது. அதுக்கெல்லாம் எப்போ ஜி.ஓ., போட்டு, நிதி ஒதுக்கி, எப்போ வேலை ஆரம்பிக்கிறது...?'' பெருமூச்சு விட்டாள் சித்ரா.''நிதி ஒதுக்குனாலும், வேலை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, 12 பர்சன்டேஜ் கமிஷன் கொடுக்கணுமே. அப்பிடி இருந்தாத்தான், கான்ட்ராக்ட் கிடைக்கும். கார்ப்பரேஷன்ல 60 கோடி ரூபாய்க்கு வேலை நடக்கப் போகுது. பல வேலைகளுக்கு டெண்டரே விடலை. ஆனா, 'இந்த வேலைக்கு இவர் தான் கான்ட்ராக்டர்'ன்னு முடிவு பண்ணி, 12 பர்சன்டேஜ் கமிஷன் வாங்கியாச்சாம்.'' என்றாள் மித்ரா.''இந்த வேலையெல்லாம் என்ன லட்சணத்துல நடக்குமோ?'' என்றாள் சித்ரா.''சரி! அதை விடு...நம்ம கார்ப்பரேஷனை WI--FI சிட்டியா மாத்துறதுக்கு, ரேஸ்கோர்ஸ் ஏரியாவுல 'டிரையல்' நடக்குது தெரியுமா?'' என்றாள் மித்ரா.''என்னடி இது...'கிடந்ததெல்லாம் கிடக்கு; கிழவனைத் துாக்கி மனையில வை'ங்கிற கதையா இருக்கு. ஊரெல்லாம் நாறிக்கெடக்குது. இதுல WI--FI சிட்டியா...ரேஸ்கோர்ஸ்ல ஏற்கனவே, 'லவ்வர்ஸ்' அலும்பு தாங்கலைன்னு, போலீஸ் கமிஷனர்ட்ட இந்து அமைப்புகள் பெட்டிஷனே கொடுத்துட்டாங்க. இதுல, WI--FI ஏரியாவா மாத்துனா, என்னென்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோ?'' என்றாள் சித்ரா.''ஊருக்காக ஒரு நல்ல விஷயம் பண்றப்ப, இந்த மாதிரி சில விஷங்களைத் தவிர்க்க முடியாது. இனிமே, ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தான் வேலை ஜாஸ்தியா இருக்கும்'' என்றாள் மித்ரா.''போலீஸ்ன்னதும் ஒரு விஷயம், ஞாபகத்துக்கு வந்துச்சு மித்து. போலீஸ் ஸ்பெஷல் டீமைக் கரிச்சுக் கொட்டிட்டு இருந்தாரே, ஏ.சி., ஒருத்தரு. அவரை மாத்திட்டாங்க தெரியுமா? என்றாள் சித்ரா.''அது பழைய நியூஸ் ஆச்சே...அவரை மாத்துன பிறகு, அவரோட கோபம் அதிகமாயிருச்சாம். 'எப்படியும், நான் ரிட்டயர்டு ஆவுறதுக்குள்ள அந்த டீமை கலைக்காம விட மாட்டேன்'னு, வெள்ளைக்கார துரை மாதிரி சவால் விட்ருக்காராம். அவருக்கு உதவுறதா, இன்னும் ரெண்டு போலீஸ் ஆபீசர்ஸ் சொல்லிருக்காங்களாம்.''''மித்து! நம்ம சிட்டிக்குள்ள இருக்கிற கிரைம் டிபார்ட்மென்ட்ல இருக்கிற ஒரு போலீசு, 'கம்ப்ளைன்ட்' கொடுக்க வர்றவுங்க, கதறியடிச்சு ஓடுற அளவுக்கு, காசைக் கறக்குறாராம். ஏன்னா, அவரு எழுதுறது தான், கேசுல நிக்குமாம். காசு தராதவுங்களைப் பத்தி, மேல இருக்கிற ஆபீசர்கள்ட்ட தப்புத்தப்பாச் சொல்லி, கதைய திசை திருப்பி விட்ருவாராம். வேற வழியில்லாம, அவரு கேக்குறதை அழுதுட்டு இருக்காங்க''''கிரைம் கதை எழுதுறதுக்கு அவரென்ன ராஜேஷ்குமாரா, ராஜேந்திர குமாரா?,'' என்றாள் மித்ரா.''ஒரு சில டிபார்ட்மென்ட்கள்ல, ஆளு சரியில்லைன்னு தெரிஞ்சாலும், அவுங்களை அதே இடத்துல விட்டு வைக்கிறாங்க. இதனால தான், கவர்மென்ட்டுக்கு அநியாயத்துக்குக் கெட்ட பேரு வருது'' என்றாள் சித்ரா.''ஆபீசர்களால தான், கெட்ட பேரு வருதா? ஆளும்கட்சிக்காரங்களால, மக்கள் மகிழ்ச்சிக் கடல்ல மூழ்கிட்டு இருக்காங்களா? அதுலயும் நம்ம ஊரு கவுன்சிலர்க இருக்காங்களே'' என்று கேட்டாள் மித்ரா.''நீ யாரைத்தான்டி சொல்ல வர்ற...நேரடியாச் சொல்லு!''''ஆளும்கட்சியைச் சேர்ந்த லேடி கவுன்சிலரோட ஹஸ்பெண்ட் ஒருத்தரு தான்...அந்த வார்டுல கல்லு, மண்ணு இறங்குனாலும், எங்கேயாவது குழி தோண்டுனாலும் உடனே வந்து வசூலைப் போடாம நகர மாட்டாரு. போன வாரத்துல, பி.எஸ்.என்.எல்.,காரங்க, குழி தோண்டுறப்ப வந்து, 'யாரைக்கேட்டு குழி தோண்டுறீங்க'ன்னு கேட்டு, ஜே.சி.பி., சாவியை எடுத்து வச்சிக்கிட்டாராம்''''அடக்கொடுமையே...அப்புறம் என்னதான் ஆச்சு?''''அவுங்க சொல்லிப் பாத்திருக்காங்க. அவரு...வேற எதையோ எதிர்பார்த்து, தர மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்காரு. கடைசில, மேயர்ட்ட மேட்டரைக் கொண்டு போய்த்தான், சாவியை வாங்கிருக்காங்க'' என்றாள் மித்ரா.''என்னடி இது அநியாயமா இருக்கு? அப்பிடியே 'பர்மிஷன்' இல்லாமத் தோண்டுனாலும், அதைத் தடுக்க வேண்டியது, ஆபீசர்கள் தான. கவுன்சிலருக்கு என்ன அதிகாரம் இருக்கு? அதுலயும், இவரு கவுன்சிலரே இல்லியே'' என்றாள் சித்ரா.பக்கத்தில் நின்ற ஒரு பெண்ணின் மொபைலில், 'கலைவாணியே...உனைத்தானே அழைத்தேன்' என்று ஜேசுதாஸ் குரல் ஒலிக்க, அந்தப்பெண் எடுத்து, 'ஏனுங்...எங்க இருக்கீங்க?' என்று கதையாடத் துவங்கினார். பேச்சைத் தொடர்ந்தாள் மித்ரா.''அவரு மட்டுமா? எல்லா கவுன்சிலர்களுமே, இப்போ கலெக்ஷன் ராஜா, ராணிகளா மாறிட்டாங்க. இவுங்களை வச்சு, எப்பிடித்தான் எலக்ஷனை சந்திக்கப் போறாங்களோ?,''''கலெக்ஷன் ராஜான்னா, அது ஆர்.டி.ஓ., ஆபீசர்கள் தான். அதுலயும் நம்மூர்ல மிக முக்கியமான பொறுப்புல இருக்கிறவரை, வசூல் சக்கரவர்த்தின்னு சொல்றாங்க. அவரு தான், இப்போ, நாலு மாவட்டங்களைக் கவனிக்கிற பொறுப்புல இருக்காரு. தென் மாவட்டத்துலயும் மூணு மாவட்டங்க, அவரு பொறுப்புல இருக்கு. அப்பிடின்னா, எத்தனை கலெக்ஷன் வரும்னு கணக்குப் போட்டுப்பாரு''''அடேங்கப்பா! ஆனந்தமா சம்பாதிப்பாரே...கரூர்க்காரர்க்கு அவரு, ரொம்ப நெருக்கம்னு கேள்விப்பட்ருக்கேன். அதனால தான், கோயம்புத்துார் ஆபீஸ்ல அவரைப் பாக்கவே முடியுறதில்லையோ?,'' என்றாள் சித்ரா.''ஆமா! ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல, ஏகப்பட்ட 'போஸ்ட்டிங்' காலியா இருக்கு. அங்க எல்லாம் இவுங்க வச்ச வெளியாளுங்க தான், கலெக்ஷன் வேலைய கச்சிதமாப் பண்ணுறாங்க. சவுத் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல 4 பிரேக் இன்ஸ்பெக்டர் வேலைய ஒருத்தரு பாக்குறாரு. ஒரே ஒரு அக்கவுன்டன்ட் தான், ஒட்டு மொத்த கணக்கும் பாக்குறாரு. மூணு டைப்பிஸ்ட்டுக்கு ஒருத்தர் தான் இருக்காங்க. கிளர்க்கும் அப்பிடித்தான்'' என்றாள் மித்ரா.''வேலைக்கேத்த கூலின்னா, இவுங்களுக்கு தான்னு சொல்லு!,'' என்று சிரித்தாள் சித்ரா.''ஆனா, நம்ம ஜி.எச்.,ல இருக்கிற இலவச அமரர் ஊர்திக்கு, துாரத்துக்குத் தகுந்தது மாதிரி துட்டு'' என்றாள் மித்ரா.''அதுக்கு 155377 நம்பர்க்கு, சென்னைக்கு பேசுனாத்தான, 'புக்' பண்ணுவாங்க. இங்க எப்பிடி காசு பண்ணுவாங்க'' என்று சந்தேகம் கேட்டாள் சித்ரா.''அது கரெக்ட் தான். ஆனா, அவிநாசிக்கு ஒரு 'பாடி' கொண்டு போகணும்னு வை. அதுக்குப் போற வழியில, நீலம்பூர்ல ஒரு 'பாடி'யை கொண்டு போக வேண்டியிருக்கும். அந்த 'பார்ட்டி'களை நேர்ல பார்த்துப் பேசி, அதையும் ஏத்திக்குவாங்க. அதை இறக்குறதுக்கு தனியா, ரெண்டாயிரம், மூவாயிரம்னு தனியா வாங்கிக்குறாங்க. ஒரு நாளுக்கு இப்பிடியே பத்தாயிரம் கூட சம்பாதிச்சிர்றாங்க.'' என்றாள் மித்ரா.மழை லேசாகக் குறைந்திருந்ததால், 'வண்டியைக் கிளப்பு. நஞ்சுண்டாபுரம் வழியாப் போகலாம்' என்று சித்ரா அவசரப்படுத்த, வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X