நியூசிலாந்து: சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ் படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில்
இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த
குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர்.
ஹர்மன் சிங்கின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் டேபிள், இரண்டு நாற்காலிகளுடன், தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் ஹர்மன் சிங் படுப்பதையும் அறிந்தனர். உடனே, வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடையை தொடர்பு கொண்டு, லாரி நிறைய வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும், கொண்டு வர செய்து, தங்களுடைய அன்பளிப்பாக வழங்கினர்.சில தினங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை காண சென்ற ஹர்மன் சிங்குக்கு, சிறுவனின் பெற்றோர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
ஹர்மன் சிங்கின் செயல் குறித்த செய்தி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், ஆயிரக்கணக்கானோர் பாராட்டிஉள்ளனர்.