கோவை பீளமேட்டில் உள்ள ஈஷா பசுமைக்கரங்களின் நாற்றுப்பண்ணைக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவ மாற்றங்கள் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் வருகை புரிந்தார், சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாற்றுப்பண்ணையை மத்திய அமைச்சர் சுற்றிப்பார்த்தார். ஈஷா பசுமைக்கரங்கள் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை கண்டு களித்த அவர் குறுகிய காலத்தில் வளரக்கூடிய மற்றும் குறைவான நீர் தேவையுடன் வளரக்கூடிய மரங்களின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் விதைகளைத்தூவி நாற்றுப்பண்ணையின் ஒரு புதிய பகுதியை துவக்கி வைத்தார்.
2015-2016 பசுமை வருடத்திற்காக ஈஷா 50 இலட்சம் மரக்கன்றுகளை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நடவுள்ளது. அதனின் குறியீடாக மத்திய அமைச்சர் முதல் மரக்கன்றை நட்டு விழாவினை துவக்கி வைத்தார். தான் நட்ட இந்த மரத்தை சில வருடங்கள் கழித்து வந்து பார்வையிடுவேன் என்று குறிப்பிட்ட அவரிடம் இருந்து 50 இலட்சம் குறியீடை நிறைவேற்றும் வண்ணம் முதல் மரக்கன்றை கோவை தொழிலதிபர் திரு.சுரேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய மாண்புமிகு மத்திய அமைச்சர், தமிழகத்தை பசுமையாக மாற்றிட உறுதி கொண்டுள்ள ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தையும் அதன் நிறுவனர், வணக்கத்திற்குரிய சத்குரு அவர்களையும் மனதார பாராட்டுகிறேன் என்று கூறினார். வாழ்வியல் தேவைகளை மட்டுமே எங்களை போன்ற அரசியல்வாதிகளால் அளிக்க இயலும். ஆனால் எப்படி வாழ வேண்டும் வாழ்கையில் எப்படி முழுமை அடைய வேண்டும் என்பதை போன்ற விஷயங்களை சத்குரு போன்ற குருநாதர்களால் மட்டுமே வழி காட்ட முடியும்.
ஐ நா சபையானது 10 ஆண்டுகளுக்கள் 100 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் இலக்கு வைத்துள்ளது. 125 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா, ஒருவர் ஒரு மரக்கன்று நட்டால் இதனை அடைவது மிக எளிதாகும். Urban forest programme என்னும் திட்டத்தை தேசிய இயக்கமாக மத்திய சுற்றுச்சூழல் துறை மாற்றவுள்ளது, மேலும் வலிமையாக நடைமுறை படுத்தவும் உள்ளது.
சுற்றுப்புணர்வு சூழலின் அடுத்த சவாலாக பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம். தினசரி 15 ஆயிரம் டன் அளவில் வெளியேற்றப்படும் கழிவுகளில் நம்மால் 5 ஆயிரம் டன் கழிவுகளை மட்டுமே சேகரிக்க இயலுகிறது, மாணவர்கள் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரை ஈடுபடுத்தி ஈஷா இத்தகைய கழிவுகளை மலைப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வருகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தூய்மையான இந்தியா பசுமையான இந்தியா என்னும் திட்டத்தை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தி வரும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தையும் அதனின் ஆன்மீக சக்தியாக விளங்கி வரும் சத்குரு அவர்களையும் வாழ்த்துவதில் பெருமையடைகிறேன் என்று கூறினார். ஈஷா யோக மையம் சார்பாக மா கற்பூரி அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களுக்கு நினைவுப்பரிசை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.