விட்டுத் தான் பார்ப்போமே! மே 31-உலக புகையிலை எதிர்ப்பு தினம் | Dinamalar

விட்டுத் தான் பார்ப்போமே! மே 31-உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Added : மே 29, 2015 | கருத்துகள் (3)
விட்டுத் தான் பார்ப்போமே! மே 31-உலக புகையிலை எதிர்ப்பு தினம்

வெள்ளை நிறத்தாளில் சுற்றப்பட்ட சிகரெட் முதல் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குட்கா வரை வெண்தோல் போர்த்திய புலியாக வலம் வரும் சுருட்டு, பீடி, புகையிலை, மூக்குப்பொடி, ஹூக்கா என அனைத்துமே புகையிலை பொருட்கள் தான். கருப்பு புகையாக, கருஞ்சிவப்பு கறையாக நுரையீரல், பல், நகம் என ஒட்டிக் கொண்டு தங்களை அடையாளம் காட்டும் புகையிலைப் பொருட்களால் ஆண்டு தோறும் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கருப்பு திட்டுகளாக நுரையீரல், இதய ரத்த குழாய்களில் படியும் சிகரெட்டின் நிறம் வெள்ளையாக இருந்தாலும், நமக்கு அவை தரும் வரமோ கருப்பு தினங்கள் தான்.
புகையிலையில் காணப்படும் கரோட்டின்களே காயவைக்கும் போது அழிந்து ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துகிறது. உலர்ந்த புகையிலையில் காணப்படும் ஹைட்ரோகார்பன், காட்மியம், நிக்கல், நைட்ரோசைமன், பீனால் போன்ற 600க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் எரியும் போது ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து 7000க்கும் மேற்பட்ட ஆபத்தான வேதிப் பொருட்களாக விபரீத விஸ்வரூபம் எடுக்கின்றன.
இவற்றில் 70க்கும் மேற்பட்டவை புற்றுநோயை உருவாக்குகின்றன. புகையிலை எரிக்கப்படும் போது அல்லது செரிமானம் ஆகும் போது அதில் உள்ள ஸ்டார்ச் ஆக்சிஜனை இழந்து நிக்கோட்டின் என்ற வேதிப் பொருளுடன் இணைந்து கடின உப்புகளாக மாறி ரத்தகுழாய் மற்றும் சுவாசக் குழாயில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. புற்று நோய் காரணிகளை துாண்டி, கல்லீரல், நுரையீரல், கணையம் மற்றும் வாயின் உட்புறம் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நுரையீரலிலிருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் சுவாசக் குழாய்களில் படிந்து இதயம் மற்றும் நுரையீரலை செயலிழக்க செய்கிறது.
சாபம் பெற்ற புகையிலை சித்த மருத்துவத்தில் மருந்துகள் உட்கொள்ளும் போது புகையிலையை தவிர்ப்பது கட்டாயமாக்கப்படுகிறது. புகையிலையை பிரம்மபத்ரி என்ற பெயரால் சித்தர்கள் அழைத்தனர். பிரம்ம முனிவர் மற்றும் கோரக்கர் என்ற சித்தர்கள் தவம் செய்யும் போது அவர்களின் யாகத்தை கலைக்க இந்திரக் கடவுள் வாயு பகவானை, இரண்டு பெண்கள் உருவத்தில் அனுப்பி யாகநெருப்பை அணைத்துப் போகச் செய்தார். இதனால் கோபம் கொண்ட சித்தர்கள் அந்தப் பெண்களை 'மண்ணோடு மண்ணாக போகக்கடவே' என சபித்தனர். பின் மனம் இரங்கிய சித்தர்கள் அந்த பெண்களை புகையிலை மற்றும் கஞ்சா செடிகளாக மாற்றினர். 'மண்ணில் வளர்ந்து தாவரமாக வளரும் உங்களை தீண்டுபவர்களை வாயு பகவானுடன் சேர்ந்து நீங்களும் எரிந்து அவர்களையும் எரித்து மோட்சம் பெறுவீர்களாக' என சாப விமோசனம் அளித்தார். அதனால் தான் பிரம்மபத்ரி என்ற புகையிலை மற்றும் கோரக்கர் மூலி என்ற கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து எரிந்து போகின்றனர். அப்படிப்பட்ட புகையிலையை பயன்படுத்தி சித்தர்களின் சாபத்திற்கு நாமும் ஆளாக வேண்டுமா? சிக்கும் அடிமைகள் மத்திய நரம்பு மண்டலத்தை சில விநாடிகளில் துாண்டுவதால் தான் புகையாகவோ அல்லது வாயில் மென்றோ புகையிலையை பயன்படுத்தும் போது, துரிதமாக செயல்பட்டு உடனே புத்துணர்ச்சி உண்டாகிறது. பின் புகைக்காத நேரங்களில் நரம்புகள் வேலை செய்யாததால் மன அழுத்தம், தலைவலி, துாக்கமின்மை, மலச்சிக்கல், நாக்கின் சுவையுணர்ச்சி குறைதல் ஆகியன உண்டாகி மீண்டும் புகைக்க வேண்டுமென்ற ஆர்வத்தை துாண்டுகிறது. இதனால் தான் புகைக்கு எல்லோரும் அடிமையாகின்றனர்.
புகைக்கும் போது சூடான காற்று உள்ளே செல்வதால் ஆரம்ப நாட்களில் சுவாசம் எளிமையாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல புகைக்காவிட்டால் சுவாசிக்க சிரமம் மற்றும் இருமல் உண்டாகிறது. காது நரம்புகள் பாதிக்கப்பட்டு கேட்கும் திறன் குறைகிறது. அதுபோல் பல், ஈறு கரைந்து கருமஞ்சள் நிறமடைந்து சீழ் பிடித்து பற்கள் கொட்டிவிடுகின்றன. வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. ரோமக்கால்களின் கீழே அடைப்புகள் ஏற்பட்டு, தலையில் வழுக்கை உண்டாகிறது.
புகைக்கும் போது நரம்புகளில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் தற்காலிக சுறுசுறுப்பு தோன்றுகிறது. இதனால் சோர்வு ஏற்படும் போதேல்லாம் புகைப்பிடிக்க விரும்புகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாளடைவில் நரம்புப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம், புண்கள் ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவரின் செல்களுக்கு இன்சுலினை கிரகிக்கும் ஆற்றல் குறைவதால் விரைவில் சர்க்கரை நோயும் ஏற்படுகிறது. சர்க்கரையளவு ஏறி, இறங்குவதால் உணவின் மேல் வெறுப்பும், புகை பிடிக்காவிட்டால் வாந்தி அல்லது குமட்டுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டினால் கண் பார்வை நரம்புகள் பெரிதும் பாதிக்கின்றன. சிலருக்கு வலிப்பு நோயும் உண்டாகிறது.உங்கள் அருகில் இருந்து புகைப்பிடிப்பவர்கள் எல்லோரும் உங்களுக்கு ப(பு)கைவர்கள் தான். உங்கள் குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு வீட்டின் அருகில் நின்று புகைப் பிடிப்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம். பெண்களின் ஹார்மோன்களை குறைத்து மாதவிலக்கை சீக்கிரமே நிறுத்தி முதுமையை ஏற்படுத்தும் தன்மை புகையிலைக்கு உண்டு.
டைரியில் குறிச்சு வச்சுக்கோங்க சிகரெட்டை நிறுத்துவதற்கான நாளை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவு செய்து உங்கள் டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் அதற்கான முயற்சியில் இறங்குங்கள். சிகரெட்டை இரண்டு துண்டுகளாக வெட்டி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். பின் அவ்வப்போது புகைத்து துாக்கி எறியுங்கள். சிகரெட் தாளில் ஊசியால் பல இடங்களில் ஓட்டை போடுங்கள். பின் ஓட்டை சிகரெட்டை புகைக்கும் போது சிகரெட் விரைவில் கரைந்துவிடும்.புகைக்க ஆசை ஏற்படும் போதெல்லாம் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள கோயில், தியான மண்டபம், யோகா மையத்திற்கு செல்லுங்கள். பிடித்த உணவுகளை சாப்பிடுங்கள். விரலிடையில் சுருட்டிய தாள் அல்லது பேனாவை எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். கம்ப்யூட்டரில் பிடித்த விளையாட்டை தனியாக விளையாடலாம். தனி அறையில துாங்கப் போகலாம்.
சில்லென்று தண்ணீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். கரலா கட்டை வைத்து உடற்பயிற்சி செய்யலாம். குழந்தைகளுடன் விளையாடலாம். ஆனால், கண்டிப்பாக சாக்லேட், காபி, டீ ஆகியவற்றை உட்கொள்ளாதீர்கள். அவை புகைப்பிடிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்திவிடும்.
ஓய்வெடுங்கள் :ஐந்து முதல் எட்டு வாரம் வரை அடிக்கடி சோர்வு ஏற்படும். இதனை தவிர்க்க நீண்ட நேரம் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி ஏற்படும் பசியைத் தவிர்க்க கடலை மிட்டாய், வறுத்த சீரகம், அரிசிப்பொரி, வெள்ளரி மற்றும் காரட் துண்டுகளை சாப்பிடலாம். மலச்சிக்கலை தவிர்க்க இரவில் வாழைப்பழம், சிவப்பு கொய்யா, நிலவாரைச் சூரணம் அல்லது திரிபாலச்சூரணம் சாப்பிடலாம்.
புகைப்பிடிக்க எண்ணம் தோன்றும் போதெல்லாம் ஏதேனும் மெழுகுவர்த்தி அல்லது விளக்கை தீக்குச்சியால் ஏற்றி சில நிமிடங்கள் நெருப்பை பார்த்து மனதை அமைதிப்படுத்தி பின்பு ஊதி அணைத்துவிடுங்கள்.பன்னிரெண்டு வாரங்கள் புகையிலை சார்ந்த பொருட்களை உபயோகிக்காமல் கட்டுப்பாட்டில் இருந்தாலே போதும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கிய வாழ்க்கை வாழ புகைப் பழக்கத்தை விட்டுத் தான் பார்ப்போமே.-டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவர், மதுரை,98421 67567

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X