அமெரிக்கா - சீனா இடையே போர் வெடிக்குமா?

Updated : ஜூன் 03, 2015 | Added : ஜூன் 02, 2015 | கருத்துகள் (24)
Share
Advertisement
கொழும்பு: சீனாவின், தென்கடல் பகுதியில், அமெரிக்க போர் விமானம் பறந்த பிரச்னை, அந்தப் பகுதியில் போர் மேகம் சூழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் வர்த்தகம், ராணுவம், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் சீனாவும், அமெரிக்காவும், அண்மைக் காலமாக அதிக அக்கறை காட்டுகின்றன. சீனாவின் தென் கடற்பகுதி, சர்வதேச வர்த்தகக் கப்பல்
அமெரிக்கா - சீனா இடையே போர் வெடிக்குமா?

கொழும்பு: சீனாவின், தென்கடல் பகுதியில், அமெரிக்க போர் விமானம் பறந்த பிரச்னை, அந்தப் பகுதியில் போர் மேகம் சூழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் வர்த்தகம், ராணுவம், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் சீனாவும், அமெரிக்காவும், அண்மைக் காலமாக அதிக அக்கறை காட்டுகின்றன. சீனாவின் தென் கடற்பகுதி, சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மிகுந்தது. ஆகவே, அன்னிய நாட்டு போர் விமானங்கள் பறப்பதற்கு சீனா தடை விதித்துள்ள, சீனாவின் தென் கடல் பகுதியில், அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பு விமானம் அண்மையில் பறந்து கண்காணித்தது.இதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே, அக்கடல் பகுதி மீது பறந்து கண்காணித்ததாக அமெரிக்கா அளித்த, 'பெரியண்ணன்' தோரணை பதில், சீனாவிற்கு ஆத்திரம் மூட்டியுள்ளது. இதனால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகம் சூழத் துவங்கியுள்ளது. அதற்கான ராணுவ நடவடிக்கைகளை இரு நாடுகளும் மறைமுகமாகத் துவங்கிவிட்டன.

இப்போர் துவங்கினால், இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் பாதிக்கப்படலாம். ஏனென்றால், இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கு அருகே உள்ள, அமெரிக்காவிற்கு சொந்தமான, 'டிக்கோகார்சியா' கடற்படை தளத்தை அமெரிக்கா முழுவீச்சில் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்திற்கு சொந்த மான, டிக்கோகார்சியா தீவு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருப்பதால், அதை குத்தகைக்கு வாங்கிய அமெரிக்கா, அங்கு பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைத்துள்ளது. அங்கு, போர் விமானங்கள் தரையிறங்க விமான ஓடுபாதை, செயற்கைக்கோள் தொலைத்தொடர்பகம், ரேடார் நிலையம் ஆகியவற்றுடன், அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.

அணுசக்தியில் இயங்கும் நவீன போர் கப்பல்களை நிறுத்துவது மற்றும் பராமரிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணிகள், இந்த தீவில் அண்மையில் துவங்கியுள்ளன. இலக்கைக் குறிவைத்து தாக்கும் நவீன போர் விமானங்கள், மின்னல் வேகப்படகுகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை கடந்த சில நாட்களாக இங்கு குவிக்கப்படுவதாகவும், அணுசக்தியில் இயங்கும், இரு பிரம்மாண்ட விமானம் தாங்கிக் கப்பல்கள், டிக்கோகார்சியா துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ தலைமையகத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இலங்கை கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கையுடன் சீனா, ராணுவ ரீதியான நெருக்கம் வைத்திருப்பதால், சீனாவால் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட, அம்பந்தோட்டை துறைமுகம், கொழும்பு போர்ட் சிட்டி உள்ளிட்ட பிரம்மாண்ட அமைவிடங்கள் மீது அமெரிக்காவின் கடற்படையோ, விமானப் படையோ குண்டு வீசித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. டிக்கோகார்சியா தீவு, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து, 1,100 கி.மீ., தொலைவில் இருந்த போதிலும், இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.

ஆகவே, போர் துவங்கினால், இலங்கையின் கடற்பகுதிக்கு அருகே தமிழக கடலோரப்பகுதி யில் உள்ள ராமநாதபுரம், துாத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை மற்றும் கேரளா மீனவர்கள் மீன்பிடித்தொழிலை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உருவாகலாம் என, இந்திய கடலோர காவற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது, சீனா- - அமெரிக்கா இடையே போர் துவங்கினால், சர்சைக்குரிய சீனாவின் தென்பகுதி கடலில் உள்ள வியட்னாம், பிலிப்பைன்ஸ், புருனே, தைவான் ஆகிய நாடுகள் மீதும் போர் மேகங்கள் சூழும் நிலை உள்ளது. சீனாவின் தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்று மதி ஆகியவற்றால் அமெரிக்காவின் சர்வதேச வணிகம் சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்கா விமானப்படை, சீனாவில் உள்ள தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களைத் தாக்கினால், சீனாவின் தயாரிப்புகளை நம்பியுள்ள பல்வேறு நாடுகளின் தொழில்- வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிப்படையக்கூடும்.


இந்தியாவை தாக்க வந்த அமெரிக்க கடற்படை:

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவைத் தாக்க, டிக்கோகார்சியாவிலிருந்து அமெரிக்காவின், ஏழாவது கடற்படை புறப்பட்டது. இதுபற்றிய தகவல் இந்திய ராணுவ உளவுப்படைக்கு முன்கூட்டியே கிடைத்ததால், பெங்களூருவிலிருந்து புறப்பட்டு வந்த இந்திய விமானப்படை விமானங்கள், கன்னியாகுமரி கடற்பகுதி மீது பறந்து வட்டமிட்டு, கண்காணிப்பில் ஈடுபட்டன. இதைக் கண்ட அமெரிக்காவின், ஏழாவது கப்பற்படை தாக்குதல் நடத்தாமலேயே திரும்பிச் சென்றது.


அதிர்ந்த இலங்கை அமைச்சர்:

இலங்கைக்கு அருகே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்காவின், டிக்கோ கார்சியா தீவு கடற்படை தளத்திற்கு அண்மையில் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, அங்குள்ள போர் விமானங்கள், கப்பல்களைப் பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க கடற்படையின், 'சி -2' ரக விமானத்திலிருந்த அதிகாரிகள் அழைத்ததால் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவரத்ன, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா மற்றும் அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறினர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள, மிதக்கும் கப்பலின் விமான ஓடுதளத்தில் இவர்கள் பயணித்த விமானம் இறங்கியது. விமானத்திலிருந்து அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவரத்ன மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் இறங்கிய பின் தான் தெரிந்தது, இவர்கள் வந்த விமானம், அமெரிக்க கடற்படையின், 'யு.எஸ்.எஸ்., கார்ல் வின்சன்' என்ற பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பலில் இறங்கியுள்ளது என்பது. அணுசக்தியால் இயங்கும் அக்கப்பலின் விமான ஓடுதளத்தில், 90 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நின்றிருந்தன. 60 - 62 பணியாளர்கள், மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் இக்கப்பலின் விமான ஓடுதளம், 333 மீட்டர் என, அமெரிக்க கடற்படை அதிகாரி விளக்கிக் கொண்டிருந்தபோதே, அமைச்சர்கள் மங்கள சமரவீர திகைத்து போய் மயங்கி விழுந்து விட்டார்.இலங்கையின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய அமைச்சர்கள் இருவரையும் மற்றும் அதிகாரிகளையும், கொழும்பிலிருந்து, 'சி -2' ரக போர் விமானத்தில் டிக்கோகார்சியா தீவிற்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அழைத்துச் சென்று, தங்களின் கடற்படை பலத்தைக் காட்டினர். அப்போது, அவர்களின் போர் விமானங்கள், போர் கப்பல்கள் ஆகியவற்றை காட்டி விளக்கிய தோடு, அமெரிக்க நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்கியும், ஒத்திகை நடத்திக் காட்டியும் அசத்தினர்.

அமைச்சர் மங்கள சமரவீர, அண்மையில், சக அமைச்சர்களிடம் கூறுகையில், ''இதுவரை ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே பார்த்த காட்சிகளை, டிக்கோகார்சியாவில் நேரில் பார்த்தபோது, அதிர்ச்சியில் மயங்கி விட்டேன். டிக்கோகார்சியா தீவு முழுக்க, ராணுவமயமாக உள்ளது. அங்கு பிரம்மாண்ட விமான தாங்கி கப்பல்கள், போர் விமானங்கள் நிறுத்த வசதிகள் இருக்கின்றன,'' என்றார்.

இலங்கை- - சீனா நட்புறவு அதிகரிப்பதையும், நெருக்கமான போக்கையும், அமெரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் நாடுகள் விரும்பவில்லை. 'சீனாவுடன் இலங்கை நட்புறவாக உள்ளதால், அமெரிக்காவின் டிக்கோகார்சியா ராணுவ தளம் மற்றும் அதன் பலத்தை இலங்கைக்கு உணர்த்தவே, இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை, அமெரிக்கா அழைத்துச் சென்று காட்டியுள்ளது' என, இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M G Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூன்-201517:14:05 IST Report Abuse
M G Rayen இதெல்லாம் சும்மா ஜுஜுப்பீ
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஜூன்-201515:54:01 IST Report Abuse
Endrum Indian இனிமேல் உலகப்போர் வராது. ஏனென்றால் இரண்டு கட்சியுமே பூராவுமாக அணு ஆயுதப்போர் நடத்தி உலகமே அழிந்து போகும். அமெரிக்கா-சீனா வர்த்தகப்போர் எப்பொழுதோ இருந்து நடைபெறுகின்றது. ஒரு cold war நடந்து கொண்டிருக்கின்றது. இது இரு கூண்டாக்களுக்கு/ரௌடிகளுக்கு இடையில் நடக்கும் மறைமுகப்போர். இதில் பாதிக்கப்படப்போவது நிச்சயமாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர், இந்தோனேசியா, தாய்லாந்து, கொரியா தான். ஆனால் இதில் அமெரிக்காவோ சீனாவோ நஷ்டமடையப்போவது இல்லை. ஏனென்றால் அவர்கள் இதை தங்கள் பலத்தை பரிசோதிக்க நடக்கும் போர் என்று பார்க்கின்றார்கள.
Rate this:
Cancel
Siva Kumar G - Bangalore,இந்தியா
02-ஜூன்-201515:53:45 IST Report Abuse
Siva Kumar G இவங்க ஒருபக்கம் சண்ட போடும்போது. பாகிஸ்தான ரெண்டு போட்டு அடக்கி வெக்கணும். அப்பதான் சீனா காரன் கவனம் பாகிஸ்தானுக்கு போகாது :)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X