விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்க கட்டுப்பாடு: கடுமையாகிறது பயன்பாடு நடைமுறை மாற்றம்| New rules to change agriculture land | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்க கட்டுப்பாடு: கடுமையாகிறது பயன்பாடு நடைமுறை மாற்றம்

Added : ஜூன் 07, 2015 | கருத்துகள் (7)
Share
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்க கட்டுப்பாடு: கடுமையாகிறது பயன்பாடு நடைமுறை மாற்றம்

விவசாய நிலங்களில் புதிய மனைப் பிரிவுகளை (லே - அவுட்) உருவாக்க, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க, தமிழக நகரமைப்பு துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில், சிறப்பு மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள், மனைப் பிரிவுகளுக்கு நகரமைப்புத் துறை அனுமதி அளித்து வருகிறது. இதற்காக, நகரமைப்புத் துறையில், 13 மண்டல அலுவலகங்கள், 26 உள்ளூர் திட்டக் குழுமங்கள், 13 புது நகர் வளர்ச்சிக் குழுமங்கள் செயல்படுகின்றன. சென்னையில் தலைமை அலுவலகம் உள்ளது.தமிழகத்தில், நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்பு தேவைக்காக, கடந்த சில ஆண்டுகளில், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு உள்ளன. விவசாய நிலங்கள் பயன்பாடு மாற்றம் செய்யும் நடைமுறைகள் எளிதாக இருப்பதே இதற்கு காரணம், என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தமிழகத்தில், 1.29 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு, டி.டி.சி.பி., எனப்படும் நகரமைப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது; இதில், 6,950 சதுர கி.மீ., பரப்புக்கு மட்டுமே, 'மாஸ்டர் பிளான்' எனும், முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.மீதமுள்ள பகுதிகளுக்கு, முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகள், பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை, 123 முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.


கவனம்:

இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நிலங்களின் பயன்பாட்டை வரையறை செய்வதில், விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியம். தற்போது, பல இடங்களில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய்த் துறையின் தடையின்மை சான்று இருந்தால் போதும் என்ற வழக்கம் உள்ளது. பெரும்பாலான விவசாய நிலங்கள், மனைகளாக மாற இதுவே வழிவகுத்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு உள்ளன.


தடை:

*இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில், 1974ன் முழுமை திட்டங்கள் தயாரிப்பது தொடர்பான அரசாணையில், விவசாய நிலங்களை, அரசின் நேரடி உத்தரவு இன்றி மாற்றக் கூடாது என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
*நகரமைப்புச் சட்டம் - 1971ல், 2010 திருத்தத்தின்படி, கலெக்டரின் தடையின்மை சான்று இல்லாமல், விவசாய நிலங்களின் பயன்பாட்டை மாற்றக் கூடாது.
*முழுமை திட்ட தயாரிப்பில் இந்த கொள்கைகளை பின்பற்ற, நகரமைப்புத் துறை முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து அனுமதி கோரி, வீட்டுவசதித் துறை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும், இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


வரைபடங்களை பார்க்க புதிய வசதி:

சென்னை பெருநகரில் அனுமதி அளிக்கப்பட்ட கட்டடங்கள், மனைப் பிரிவுகள் குறித்த விவரங்கள் சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. டி.டி.சி.பி., பகுதியில் திட்ட அனுமதி வழங்கப்பட்ட கட்டடங்கள், மனைப் பிரிவுகள் குறித்த விவரங்கள் இதுவரை பொது மக்கள் பார்வைக்கு வராமல் இருந்தன. புதிதாக வீடு, மனை வாங்குவோர் உண்மை விவரங்களை அறிய பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருந்தது.இதை கருத்தில் கொண்டு, திட்ட அனுமதி வரைபடங்கள், மனைப் பிரிவு வரைபடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட நகரமைப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:* முதன்முறையாக, திட்ட அனுமதி அளிக்கப்பட்ட கட்டடங்கள், மனைப்பிரிவு வரைபடங்கள் மற்றும் விவரங்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
*நிலத்தின் பரப்பளவு, கட்டடத்தின் பரப்பளவு, வீடுகள், மனைகளின் எண்ணிக்கை திறந்தவெளி ஒதுக்கீடு போன்ற விவரங்கள் அளிக்கப்படும்.
*தற்போது, இறுதி கட்டத்தில் உள்ள இத்திட்டத்துக்காக, வரைபடங்களை, பி.டி.எப்., வடிவில், பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
*தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், உள்ளூர் திட்டக்குழுமம், புதுநகர் வளர்ச்சிக் குழுமம் வாரியாக திட்ட அனுமதி வரைபடங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன.விண்ணப்பதாரர் பெயர், அனுமதி எண், கோப்பு எண், விண்ணப்பித்த தேதி, அனுமதி வழங்கப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை எளிதில் சரிபார்க்கலாம்.
*தற்போதைய நிலவரப்படி, 1985ம் ஆண்டு முதல் அனைத்து திட்ட அனுமதி விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. நடைமுறை பணிகள் முடிந்தவுடன் பொதுமக்கள் இதை பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X