மதிப்பெண்களின் உண்மையான மதிப்பு என்ன?| Dinamalar

மதிப்பெண்களின் உண்மையான மதிப்பு என்ன?

Added : ஜூன் 08, 2015 | கருத்துகள் (1)
Advertisement
மதிப்பெண்களின் உண்மையான மதிப்பு என்ன?

மாணவனின் கற்கும், ஆசிரியர்கள் கற்பிக்கும் ஆற்றல்களை அளக்கும் அளவுகோல் தேர்வு. தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கின்றன. நல்ல மதிப்பெண்கள், விரும்பும் கல்வி நிலையத்தில் விரும்பும் பாடப்பிரிவினை குறைந்த செலவில் பெற வழி வகுக்கின்றன.
அத்தகைய தர வரிசை பட்டியலில் மாணவர்களை நிறுத்த பள்ளிகளும், ஆசிரியர்களும், பெற்றோரும் பாடுபடுகின்றனர். பள்ளியின் புகழ், மாணவர்கள் சேர்க்கை, கல்வி கட்டணம், அனைத்தும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் அனைவரும் சேர்ந்து மாணவர்களை மதிப்பெண் நோக்கி பயணிக்க வைக்கின்றனர்.பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு பள்ளியில் படிக்கும் படிப்பு தவிர, வெளியே பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து தருகின்றனர். வசதி வாய்ந்தவர்கள் மதிப்பெண்களுக்கென்றே 24 மணி நேரமும் பயிற்சியளிக்க கூடிய பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். பயிற்சியின் அங்கமாக மதிப்பெண்கள் கணக்கிடப்படாத பாடங்கள் ஒதுக்கப்படுகின்றன. புளூ பிரிண்ட் வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன.விடைபெறும் சுயசிந்தனை பழைய கேள்வி தாள், கேள்விகளுக்கு பதில்கள் திரும்ப திரும்ப எழுத வைக்கப்படுகின்றன. குறுகிய கால ஞாபக சக்தியை உபயோகித்து, புத்தகத்தில் உள்ளவற்றை வார்த்தை மாறாமல் தேர்வில் வெளிப்படுத்தப்படுகிறது. விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் விலகி செல்கின்றன. சுய சிந்தனை விடை பெறுகிறது. புரிந்து கொள்ளும் ஆற்றல், பயன்பாடு சார்ந்த கல்வி பின் தள்ளப்படுகிறது.
அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளில் பெருமை படுத்தப்பட்டு பாராட்டுகள் பெற்று தரம் வாய்ந்த உயர்கல்வி நிலையங்களில் அனுமதி கிடைத்த பலர், அந்த கல்விச் சூழலுக்கு தயார் செய்து கொள்ள முடியாமல் படிப்பில் பின் தங்கி படிப்பினை பாதியிலே விட்டு விடும் மன நிலை கொண்டவர்களாக மாறும் சூழ்நிலை உள்ளது.மேலும் தன் கருத்துக்களை ஆணித்தரமாக சுயமாக வெளிப்படுத்த முடியாதவர்களாக பழகுவதற்கு கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.அறிவாற்றல் இருக்கிறதா? தேர்வில் நாம் பெற்ற உயர் மதிப்பெண்கள் உணர்த்துவது தான் என்ன...தேர்வு என்பது ஒரு மாணவன் பாடத்தின் உட்கருவினை புரிந்திருக்கிறானா, பாடத்தில் தேவையான அறிவாற்றல் பெற்றிருக்கிறானா, குறிப்பிட்ட கால அளவிற்கு பாடங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறன் இருக்கிறதா, படித்தவற்றை புரிந்து கொள்ளும் வேகம் இருக்கிறதா, பாடத்திட்டத்திற்கு அப்பால் படித்தவற்றை பயன்படுத்துவதற்குரிய கூர்மையான அறிவு உள்ளதா, என பலவற்றை அறிந்து கொள்ள உதவுவதாக தேர்வு முறை அமைய வேண்டும். அத்தகைய தேர்வு முறை தான் மாணவர்களை வரிசை படுத்தும் அளவு கோலாகும். அத்தகைய முறையில் தான் ஆசிரியர்களின் திறமையையும், ஆற்றலையும் எடை போட இயலும். அவ்வாறு இல்லாவிட்டால் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பாடப்புத்தகத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலையும், கடின உழைப்பையும் மட்டுமே வெளிப்படுத்துவதாக அமையும். இத்தகைய மதிப்பெண் சார்ந்த கல்வி எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்துவதற்கும், வெற்றி பெறுவதற்கும் உத்திரவாதம் அளிப்பதில்லை.ஒரு காலத்தில் கல்வி என்பது, அரசு இயந்திரத்தை இயக்க ஓரளவு படித்தவர்களை உருவாக்கும் விதமாக இருந்தது. அதன் பின் கல்வி சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தினை கொடுக்கும் என்று கருதப்பட்டது. பின்னர் அறிவை பெருக்க கல்வி தேவை என்று உணரப்பட்டு கல்வியின் தரம் முக்கிய பங்காற்றியது. இன்று கல்வி வேலை வாய்ப்பினை மையப்படுத்தி உருமாறி உள்ளது. வேலை வாயப்புக்கென்றே பல படிப்புகள் உருவாக்கப்படுகின்றன.
இன்றைய வேலை வாய்ப்பில் அனைத்து துறைகளிலும் தேவைப்படுவது திறமையே. -திறமையை வெளிப்படுத்த உதவுவது புரிதல்பால் பெறும் கல்வியே. தெரிந்து கொள்வதும் மட்டும் அறிவாகாது. அறிந்தவற்றை புரிந்து செயல்படுவது தான் திறமை.ஆசிரியர்கள் பங்கு நவீன அறிவியல், தொழில் நுட்ப வசதியால் அறிந்தும், தெரிந்து கொள்ள இன்று பல சாதனங்கள் உள்ளன. விளக்கம் கொடுப்பதில் உள்ள அணுகு முறை, ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் விவாதித்தல், புது புது எடுத்து காட்டுகளை கொடுத்தல், ஒத்த கருத்துகளோடு ஒப்பீடு செய்தல், புதிய பாணியில் கருத்துக்களை வைத்தல், பெற்ற தகவல்களை வாழ்க்கை சூழலில் பயன்படுத்துதல், சுயமாக யோசித்து மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு செயல்படுவது அனைத்தும் புரிதலின் வெளிப்பாடுகளாகும். இத்தகைய அறிவு அனைத்து துறைகளுக்கும் பொதுவானது. புரிதல் மூலம் கல்வி பெறுவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. பள்ளி படிப்பிலே இந்த அணுகு முறை தேவை.
அறிஞர்களான சர்.சி.வி.ராமன், நியூட்டன், பில்கேட்ஸ் உட்பட பலர் சாதனை நிகழ்த்தியது, தாங்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் அல்ல. சாதனைகள், அறிவினால் தான் நிகழ்த்தப்படுகின்றன. கல்வி அதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.பள்ளியிலிருந்து உயர்கல்வி செல்ல மதிப்பெண்கள் அளவு கோலாக வைக்கப்படுகிறது. ஆனால் படித்து முடித்து வேலை வாய்ப்பு சந்தையில் வரும் போதும், வாழ்க்கையிலும் உயர் மதிப்பெண்களோ, பாடங்களில் வாங்கிய பதக்கங்களோ உறுதியாக உதவ போவதில்லை. திறமையும், அதன் பொருட்டு வெளிப்படும் அறிவாற்றலும் தான் உதவும். வாழ்க்கை மலர படிக்கும் போதே மதிப்பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் புரிதலுக்கும் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு கற்றவர்கள் தான் வாழ்நாள் முழுவதும் கற்ற கல்வியை கொண்டு சாதனை நிகழ்த்த முடியும்.-முனைவர்.அ.சண்முக சுந்தரம்பேராசிரியர்( ஓய்வு)விருதுநகர்.93677 66155.வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subbanarasu divakaran - bengaluru,இந்தியா
11-ஜூன்-201502:57:03 IST Report Abuse
subbanarasu divakaran பேராசிரியர் டாக்டர் சண்முகசுந்தரம் மிகவும் நன்றாக மதிப்பெண்களை பற்றி விவரம் கொடுக்கிறார். மதிப்பெண் வரவில்லை என்று சின்னம் சிறு பையனகளும் பெண்களும் தற்கொலை செய்யவே போய் விடுகிறார்ர்கள். இவர் சொலவடை கொஞ்சம் கேட்டு வாழ்கை நடத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X