""திருப்பூரும் மதுரை போல் மாறிட்டு வருது,'' என, பொடி வைத்து பேச்சை துவக்கினாள் சித்ரா.
""என்ன, பனியன் கம்பெனிகளில், அந்த ஊர்க்காரங்க ஏகப்பட்ட பேர் வேலை பார்க்குறாங்க. அதுக்காக, அந்த ஊர் மாதிரி மாறிடுச்சுன்னு சொல்றதா,'' என்றாள் மித்ரா.""அதைச்சொல்லலப்பா, மதுரையை சுற்றிலும் மலை, குன்றுகளை வெட்டியெடுத்து குவாரிக்காரங்க கொடி கட்டி பறந்தாங்களே. அதேபோல், திருப்பூர் பகுதியிலும் குளம், குட்டைகளை கிணறுபோல் வெட்டியெடுத்து மணல் "மாபியா'க்கள் கொள்ளையடிக்கிறாங்க. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் யாரும் கண்டுக்கறதில்லை. ஐகோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி, தட்டிக் கேட்ட இயற்கை ஆர்வலரை, "மாபியா' கும்பல் அடித்து உதைத்து, போலீஸ்ல ஒப்படைச்சாங்க. ஒருநாள் முழுக்க போலீஸ் "கஸ்டடி'யில் வச்சிருந்தாங்க; ஏன் இன்னும் "ரிமாண்ட்' பண்ணலைன்னு "பிரஷர்' வந்திருக்கு. கோர்ட்டுல ஆஜர்படுத்தியபோது, இவரை தாக்கிய கும்பல் மீது, இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பியிருக்கார்,'' என்றாள் சித்ரா.""அதுக்கப்புறமாவது போலீசார் நடவடிக்கை எடுத்தாங்களா,'' என, திருப்பிக் கேட்டாள் மித்ரா.""சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் போலீஸ் தரப்புக்கு எதிரா, பிரச்னை கௌம்பியதும், பெயரளவுக்கு நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செஞ்சு, ஸ்டேஷன் ஜாமின்ல விட்டுட்டாங்க. போலீஸ்காரங்க, அவங்க பங்குக்கு "நன்றி'யை காண்பிச்சிருக்காங்க. அப்புறம், மண்ணெண்ணெய் குண்டு வீசினார்னு "கேஸ்' எழுதிட்டு, பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வச்சிருந்தாங்க. கடுமையா எதிர்ப்பு கிளம்பியதும், போலீசே, ஜாமின்ல விடுறோம்னு கெஞ்சி அனுப்பினாங்க. இவ்ளோ பிரச்னை நடந்தும், அரசுத்துறை அதிகாரிங்க, அந்த இடத்தை எட்டி கூட பார்க்கலை. மணல் "மாபியா'க்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் துணையா இருக்காங்களோங்கிற சந்தேகம் கௌம்பியிருக்கு,'' என்றாள் சித்ரா.""மண்ணை வெட்டியெடுத்த கும்பல், அதிகாரிகளோட பாக்கெட்டை "மணி'யால் நிரப்பியிருப்பாங்க. அப்பறம் எதுக்கு நடவடிக்கை எடுக்கப் போறாங்க,'' என்றாள் மித்ரா.""திருப்பூரில் தி.மு.க., உட்கட்சி பூசல் உச்சத்துக்கு வர ஆரம்பிச்சுடுச்சு,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""அந்தக்கட்சியில வழக்கமா நடக்குறதுதானே. அதுல என்ன பெரிசா இருக்கப்போகுது,'' என, பேச்சை தட்டிக்கழித்தாள் மித்ரா.""மாநில இளைஞரணி இணை அமைப்பாளரான சாமிநாதன், திருப்பூரில்தான் வசிக்கிறார். சமீபத்தில், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் நடந்துச்சு. அதுக்கு மாநில நிர்வாகிக்கு அழைப்பே இல்லை. அவுங்க மட்டும் கூட்டம் நடத்தி பேசியிருக்காங்க. வரப்போற சட்டசபை தேர்தலை எப்படி சந்திக்கப் போறாங்களோ,'' என, வருத்தப்பட்டாள் சித்ரா.""ஆளுங்கட்சியிலும், உட்கட்சி மோதல் வெடிக்க ஆரம்பிச்சிடுச்சே,'' என, மித்ரா கேட்க, ""ஆமாப்பா, அமைச்சர் பதவி போனதும், வி.ஐ.பி., ரொம்ப அமைதியாகிட்டார். விழாக்களுக்கு வர யோசிக்கிறார். இதை, "சிட்டி மம்மி' தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. திருப்பூர் அரசு மருத்துவமனையில் "அம்மா' உணவகம் திறக்க, கலெக்டர் முதல் அனைவரும் தயார் நிலையில் இருந்தாங்க. சென்னையில் முதல்வர், திறந்து வைத்ததும், "சிட்டி மம்மி' முதல் ஆளா ஓடிப்போயி, கல்வெட்டு திரைச்சீலையை விலக்கி வச்சாங்க. முக்கியமான இடங்கள்ல, அவங்களோட பெயர் மட்டும் அச்சடிச்சு, "மெகா சைஸ்'ல "பிளக்ஸ் பேனர் வச்சிருக்காங்க,'' என்ற சித்ராவுக்கு, சூடா இஞ்சி டீ கொடுத்தாள் மித்ரா.