பசுமை கொஞ்சும் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு தரிசன நிகழ்ச்சியின்போது விவசாயி ஒருவர் எழுந்து சத்குருவிடம் ஒரு கேள்வி எழுப்பினார். விவசாயமும் விவசாயிகளும் முன்னேற்றமடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதே அந்தக் கேள்வி.
சத்குரு கேள்விக்கு பதில் கூறுகையில், சுதந்திரம் அடைந்தபோது 33கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். 12,000வருடங்களாக விவசாயம் செய்த பாரம்பரியம் நமது தமிழ்ப் பாரம்பரியம் எனக் கூறிய அவர், விவசாயத்தை மேம்படுத்த நவீன தொழிற் கருவிகளைக் கையாள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், "விவசாயத்தை நாம் தொழிலாக அல்லாமல், வாழ்வின் ஒரு அம்சமாகச் செய்து வந்தோம்; தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் இளைஞர்கள் ஈஷாவுடன் கைகோர்க்க வேண்டும். என்னிடம் 5ஏக்கரில் பெறும் விளைச்சலை ஒரு ஏக்கரில் பெறக்கூடிய வழிமுறை உள்ளது. நீங்கள் என்னுடன் கைகோர்த்தால் நான் உங்களுக்குக் கற்றுத்தரக் காத்திருக்கிறேன்" என்றார்.
விதை நமது கையில் இருக்க வேண்டும்!
விவசாயிகள், இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போது, "என் தலையை அடமானம் வைத்து செய்துவிடுவேன்" என்று சொல்வார்களே தவிர, "விதையை அடமானம் வைத்து செய்வேன்" என்று சொல்வதில்லை. எப்படிப்பட இக்கட்டான சூழ்நிலையிலும் விதை நெல்லை விற்கக் கூடாது என்பது ஒரு விவசாயிக்குத் தெரியும்! ஏனென்றால், அது வெறும் விதைகள் மட்டுமல்ல; அவர்களின் வாழ்க்கையே அந்த விதைகள் தான். மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் அந்த மரத்தின் ஒரு துளியாகவே உள்ளது. அந்த ஒரு துளிக்குள் ஒரு முழு மரமும் இருப்பதுதான் இயற்கையின் விந்தை.
சத்குரு அவர்கள் தரிசன நேரத்தில் பேசியபோது, விதைகளை வெளிநாட்டினர் கையிலிருந்து பெறும் நிலைக்கு நாம் சென்று விட்டால், நமக்கு நடக்கவிருக்கும் விபரீதங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பேசினார். மழை பெய்தாலும், நிலம் நம்மிடம் இருந்தாலும், விவசாயம் செய்யும் வழிமுறைகள் தெரிந்திருந்தாலும் விதைகள் நம் கையில் இல்லையென்றால், எதிர்காலத்தில் பசியால் மக்கள் சாகும் அபாயம் உள்ளதைக் கூறி எச்சரித்தார். விதைகள் எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
ஈஷா பசுமைக் கரங்கள்
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1மரக்கன்று - ரூ.5/-) வழங்கி வருகிறது.
ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளின் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.