இல்லம் என்னும் இனிய பள்ளி| Dinamalar

இல்லம் என்னும் இனிய பள்ளி

Added : ஜூன் 11, 2015 | கருத்துகள் (1)
Advertisement
இல்லம் என்னும் இனிய பள்ளி

தகவல்களை மூளைக்குள் குவிப்பது மட்டுமா கல்வி? குழந்தைகளின் ஆளுமை, அவர்களின் மொழிவளர்ச்சி, சிந்தனைத் திறன், கற்பனையாற்றல், படைப்புத்திறன், தன்னம்பிக்கை, உயரிய மதிப்பீடுகள், நற்பண்புகள், மனிதநேயம், நம்பண்பாடு, கலாசாரம் கற்றல், மற்றவர்களை மதித்தல், நற்செயலைச்செய்தல், விட்டுக்கொடுத்தல் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொள்வதல்லவா கல்வி!வகுப்பறைகள் மாறிவிட்டன.
சாக்பீஸ் துாக்காமல், மவுஸ் பிடிக்கும் நவீன ஆசிரியர்கள், குளிர்சாதன வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், அதிநவீன டேப்களோடு வகுப்பில் அமர்ந்திருக்கும் எல்.கே.ஜி. மாணவ மாணவியர். கரும்பலகைக்கு மாற்றாய் வெண்திரைகள். அந்த வெண்பலகையில் எழுதிய யாவற்றையும் சேமிக்கும் ஆற்றல்மிகு கணினிகள், நினைத்த மாத்திரத்தில் தேடுபொறிகளின் உதவியால் பாடத்தையும் படத்தையும் கண்முன் கொண்டுவரும் அதிவேக இணைய வசதிகள்...காதால் கேட்டும், கண்ணால் கண்டும், கற்க உதவும் மொழி ஆய்வகங்கள் என வகுப்பறைகள் வசதியாக்கப்பட்டுவிட்டன. ஆனால் கற்றல் சுகமான அனுபவமாகி இருக்கிறதா? மகிழ்ச்சியோடு நம் குழந்தைகள் கற்கிறார்களா?இரட்டைக் கோடு, நான்கு கோடு போட்ட அழகான எழுத்துப்பயிற்சி ஏடுகள், வளைந்து நெளிந்து எழுதும் பிஞ்சுவிரல்கள் என்று எத்தனை சுகமாக இதமாகக் கற்றோம்? அன்று எழுத்து எத்தனை சுகமான அனுபவம்! வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது! எழுத்தை மட்டுமா? சிலேட்டையுமல்லவா நாம் இன்று இழந்து நிற்கிறோம். அழித்து அழித்து அகரம் கற்ற அந்த அற்புதப் பொருளைக் காலம் தன் கருங்கைகளால் அழித்துப் போட்டதே..! எப்படி அனுமதித்தோம் இந்தப் பிரபஞ்சப் பிழையை?
விசித்திர செவ்வகம் :சிலேட்டு எனும் விசித்திரச் செவ்வகத்தை மரகதம் டீச்சர்தான் முதன் முதலில் என் பால்ய வகுப்பில் அறிமுகப்படுத்தினார். பாலிதீன் பைக்குள்ளிருந்து அந்தச் செவ்வக அதிசயத்தை டீச்சர் எடுத்ததும், குட்டையாய் இருந்ததால் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்த என்னை அழைத்து மாவுக்குச்சியால் கையைப் பிடித்து வளைத்து ஓட்டுனர் ஸ்டீரிங்கை லாவகமாக வளைக்கிற மாதிரி வளைத்து, 'அ'கரத்தைப் போடவைத்ததும் வாழ்வின் அபூர்வமான நிமிடங்கள்.அன்று மாலையே அப்பாவிடம் அடம்பிடித்து கடையில் கல்சிலேட்டு வாங்கியதும், உருட்டிய பென்சில் போன்ற மாவுக்குச்சியால் ஆசைதீர அன்று முழுக்க ஏதேதோ கிறுக்கியதும் அழகான நிகழ்வுகள். கல்சிலேட்டைத் துாக்கக்கூட அப்போது தெம்பிருக்காது; ஆனாலும் துாக்கிக்கொண்டு வீடுமுழுக்கத் திரிந்திருக்கிறோம்.
சிலேட்டின் நான்கு ஓரங்களிலும் மடக்கப்பட்டு குட்டிஆணி அறையப்பட்ட தகரம் எத்தனையோ முறை என் கைகளைப் பதம் பார்த்திருக்கிறது. ஆனாலும் அதன் மீதான மோகம் மட்டும் குறைந்ததில்லை. அதில் எழுதுவது சுகமானது. அதுவும் மாக்குச்சியால் எழுதுவது பிடிக்கும், அது சிலேட்டில் நன்றாகப் பதியும்.
விளையாட்டு :பாம்பே குச்சியால் எழுதியது, கடல் குச்சியால் எழுதியது என்று குச்சியைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். சில மாணவர்கள் எச்சில் தொட்டும் எழுத்தை அழிப்பார்கள். எழுதியதை அழிக்கக் கஷ்டமாக இருக்கும். புதியதை எழுதவேண்டுமானால் பழையதை அழித்துத்தானேயாக வேண்டும். வாழ்க்கையும் அதைத்தானே கற்றுத்தருகிறது! எண்ணையும் எழுத்தையும் அன்று அப்படித்தான் கற்றோம்.
அப்போது விளையாட்டு எங்களுக்கு உயிர். இன்றுபோல் சிந்தடிக் விளையாட்டுத் தரைகள் அன்று இல்லை. ஆலமரத்தடியில்தான் எங்கள் விளையாட்டு ஆசிரியரின் இருக்கை இருக்கும். ஆனால் அவர் அமர்ந்து பார்த்ததில்லை. தினமும் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க எங்களோடு அவரும் விளையாடிக்கொண்டிருப்பார். இதனால் பள்ளிக்கு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அனுபவம். தாத்தாவின் கையைப் பிடித்து பள்ளிசென்ற அந்த நாட்கள் அபூர்வமானவை. என்ன நடந்தது இந்த முப்பது ஆண்டுகளில்?
ஓடிவிளையாடிய பாப்பாக்கள் ஓட்டத்தை ஏன் நிறுத்திக்கொண்டார்கள்? ஒருகுடம் தண்ணியெடுத்து ஒருபூப் பூக்க வைத்த பிஞ்சுக்குழந்தைகள் ஏன் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள்? பூவரச இலையைச் சுருட்டி பீப்பீ ஊதியகுட்டிக் குழந்தைகளைச் சோட்டாபீமும் ஜுக்கியும் ஜக்குவும் பவர்ரேஞ்ஜெர்சும் எப்படி ஆட்கொண்டன? கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளை வீடியோ கேம்ஸுக்குள் பிடித்துத் திணித்தது யார்?செவ்வாய்க் கிரகத்திலிருந்து யாரும் செய்துவிடவில்லை. நாம்தான் அந்த நற்செயலைச் செய்தோம்.குழந்தைகளின் உலகம்மிக மென்மையானது, உண்மையானது, பாசாங்கற்றது, அன்புக்கு ஏங்குவது, வன்சொல் தாங்காதது, எல்லோரும் தன்னைப் புரிந்துகொண்டு கொண்டாட வேண்டும் என நினைப்பது. எல்லாவற்றையும்விடச் சுதந்திரத்தையும் விளையாட்டையும் விரும்புவது. குழந்தைகளின் உலகத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா? அவர்களைச் சுதந்திரமாய் ஓடியாட நாம் அனுமதித்துள்ளோமா? நம் விருப்பங்களை அவர்கள் மீது திணித்து நம் ஆளுமையை காட்ட முயல்கிறோம். பூக்களின்மீது எப்படி நம்மால் கோடரியை இரக்கமில்லாமல் வீசியெறிய முடிகிறது? காலம் நமக்குத்தந்த கருவூலம் நம் குழந்தைகள். அவர்களின்மீது ஏன் பாரத்தை ஏற்ற வேண்டும்?
முதுகில் பாரம் :தங்கக்கடைகளிலும் குழந்தைகள் விரும்புவது பலுான்களைத்தானே. அந்தத் தளிர்களின் முதுகில் மூடையாய் பாரங்கள். அவர்களின் முதுகெலும்புகள் உறுதிபெற்றுவிட்டனவா?அவர்கள் மதிப்பெண் முட்டையிடும் வாத்துக்களா? உலக அனுபவம் இல்லாமல், செய்தித்தாள் படிக்காமல், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மதிப்பெண்களைக் குவித்து என்ன பயன்? இன்னும் நம் தாய்மொழியில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவில்லையே. திருக்குறளையும், நாலடியாரையும், கொன்றைவேந்தனையும், ஆத்திச்சூடியையும், மூதுரையும், நல்வழியையும் ஆசாரக்கோவையையும் நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோமா? மனத்தையும் வாழ்வையும் செம்மைப்படுத்தாத கல்வி தரும் மதிப்பெண்ணால் என்ன பயன்?
பொம்மைகளைக் கூட உண்மைகளாய் நம்பிவிடும் அப்பாவிக் குழந்தைகளை நாம் இயற்கையோடு, செடியோடு, பூனைக்குட்டியோடு, பறவைகளோடு, மீன்களோடு பேச மண்ணில் விளையாட நாம் அனுமதித்துள்ளோமா? நம் குழந்தைகளுக்கு நதியும் வயலும் கடலும் அருவியும் தெரியுமா? மகிழ்ச்சியை மனதிற்குத் தந்து மலர்ச்சியை முகத்திற்குத் தருவதுதானே நற்கல்வி! வெளியே இருப்பதை உள்ளே திணிப்பதும் மனப்பாடம் செய்யவைத்து அதை அப்படியே தேர்வில் எழுத வைப்பது மட்டுமா கல்வி செய்யவேண்டும்?
பள்ளிகளில் மட்டுமே இவற்றைக் கற்றுத்தந்துவிட முடியாது. வீடுகள்தான் குழந்தைகளின் முதற் பள்ளிகள். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள். ஆனால் ஆசிரியர்கள் அக்குழந்தைகளைப் பெறாத பெற்றோர்கள். பெற்றோர்களும் தன்வாழ்நாளில் இதையெல்லாம் கற்றோர்கள்தானே! பின் ஏன் குழந்தைகளுக்குக் கற்றுத்தரக்கூடாது? பாடத்திட்டத்திலும் பள்ளியிலும் இல்லை சாதனை மாணவர்களின் உருவாக்கம். இல்லங்களிலும் இருக்கிறது இன்பமான கற்றல். அங்கிருந்து கற்றலைத் தொடங்குவோமா? -முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி . 99521 40275

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
12-ஜூன்-201506:32:43 IST Report Abuse
Manian நீங்க சொலறதெல்லாம் நடுத்தர, பணக்காரங்களுக்குதான் சரிப்படும் . ஆனா அவனகுக டிவி பாக்குறதது, வெளியே சினிமா, டிராம போரது, குழந்தைகளை நடனம், சங்கீதம் கற்க போகச் சொல்லுவது என்று போராங்க. 5% விதம் தான் நீங்க சொல்றதை செய்ய முடியும். அப்பாலே, அம்மா, நீங்க சொன்னதெல்லாம் உண்மயே. பொதுவாக எல்லா, 75-80% கிரமங்களிலே இருக்குற அவங்களுக்கு படிப்பும் ஜாஸ்தி இல்லை. வேலை கிடச்சாலே அரை வயுறு நெறயும். நல்ல உணவு, சத்தான உணவு இல்லாமல் இருக்காணுக. அப்பனுக்கு 4 -5 பசங்க , குடிகாரன்,வெளக்கு கிடையாது. இன்னமும் எப்படியோ உடல் உழப்புத்தான் முக்கியம் எண்டு நினைப்பு. எத்னயோ பிரச்சநைகள். கூட்டுக் குடும்பம் இல்லை, பல நல்ல நண்பர்கள் இல்லை... நீங்க சொலறகாலம் எப்போவோ மலை ஏறிப் போச்சு. ஜனத்தொகை மொதல்லே கொரயணும். அப்பாலே உணவு, இருப்பிடம், அப்புறம் கல்வி.. ஆனா உங்க எண்ணம் எங்க பழ நாளை நல்ல ஞாபகபடுதிச்சு. நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X