கோவை: வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் மே 28 ஏற்பாடு செய்திருந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியில், தமிழக வேளாண் பொறியியல் துறையிலிருந்து வந்திருந்தவர்கள், விவசாயத்திற்கு பயன்படும் பல்வேறு இயந்திரங்களின் பயன்பாட்டினையும், அதில் விவசாயிகள் எந்தெந்த கருவிகளை அவர்கள் தேவைக்கேற்ப வாங்க உபயோகிக்க முடியும் என்பதையும் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வு மழைநீர் சேகரிப்பைப் பற்றியதாய் அமைந்தது.
2025க்குள் இந்தியாவில்நீர்தட்டுப்பாடு
நம் நாட்டின் நீர்பாசனத்திற்க்காக ஏறத்தாழ 70% நீரும், அத்தியாவசியத் தேவைக்கான 80% நீரும் நிலத்தடி நீரிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. ஆனால் இந்த நிலத்தடி நீரோ குறைந்துகொண்டே வருகிறது. ஆழ்த்துளை கிணறுகள் அதிகமாக தோண்டப்படுகிறது, ஆனால் அவை வறண்டு கொண்டே போகிறது. நாம் அவற்றிலிருந்து நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டே இருக்கிறோமே தவிர மறுபடியும் நீரை பூமிக்கு தருவதில்லை. இதே நிலை தொடர்ந்தால், 2025ம் வருடத்திற்குள் இந்தியா தண்ணீர் தட்டுப்பாடுள்ள நாடாகத்தான் இருக்கும்.
பிரச்சனைக்கான தீர்வு!
இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம் கர்நாடகாவின் நீர் அறிவு அறக்கட்டளையுடன் (Water Literacy Foundation) கைகோர்த்துள்ளது. இந்த அறக்கட்டளை, திரு. ஐயப்பன் மசாகி அவர்களால் தொடங்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாகும். திரு. மசாகி அவர்கள் கடந்த 25 வருடங்களாக மழைநீர் சேகரிப்பிற்காக தீவிரமாக செயலாற்றி வருபவர்.
வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம் மற்றும் நீர் அறிவு அறக்கட்டளை இணைந்து, மழை நீர் சேமிப்பை பெரிய அளவில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கொண்டு செல்லவிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் உக்திகளையும் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப் படுகிறது.
திரு. ஐயப்பன் அவர்கள் 600க்கும் மேற்பட்ட செயற்கை ஏரிகளை உருவாக்கியுள்ளார். இவரின் செயல்பாடுகள் இந்தியாவின் 22 மாநிலங்களில் தடம் பதித்துள்ளது.
தண்ணீர் பிரச்சனைக்கான தீர்வையும் அதற்கான உக்திகளையும் தெரிந்துகொள்வதற்கு நேற்றைய தினக் கூட்டம் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.