ஜூன் 14 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் | ஒவ்வொரு துளியும் 3 உயிரைக் காக்கும் : ஜூன் 14 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் | Dinamalar

ஒவ்வொரு துளியும் 3 உயிரைக் காக்கும் : ஜூன் 14 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம்

Updated : ஜூன் 15, 2015 | Added : ஜூன் 15, 2015
 ஒவ்வொரு துளியும் 3  உயிரைக் காக்கும் : ஜூன் 14 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம்

அடுத்தவர்களுக்குத் தானமாக கொடுப்பதற்கு தன்னிடம் எதுவுமே இல்லை என்று யாரும் சொல்லிவிடமுடியாது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் அனைவரிடத்திலும் ரத்தம் இருக்கிறது. இந்த ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கக் கூடிய ஒரு பரிசுப்பொருள். எனவே தான் தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்கிறார்கள். ஒவ்வொரு முறை தானமாக கொடுக்கப்படும் ரத்தம் 3 உயிர்களைக் காப்பாற்றுகிறது.
நாட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்தத்துக்காக காத்திருக்கிறார்கள். வருடத்துக்கு 4 கோடி பாட்டில் ரத்தம் தேவை. கிடைப்பதோ 40 லட்சம் பாட்டில்கள். என்ன தான் பொதுமக்களிடம் ரத்தம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் ரத்தத்தைத் தானமாக கொடுப்பதற்கு பலருக்கும் தயக்கம் இருக்கவே செய்கிறது.
ரத்தம் ஓர் அறிமுகம்
ரத்தம் என்பது ஒரு திரவ உறுப்பு. நம் உடலில் சராசரியாக ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கிறது. அதில் 'பிளாஸ்மா' என்பது 55 சதவீதம். இதுதான் திரவமாக இருக்கிறது. மீதி 45 சதவீதம் ரத்த அணுக்களாக இருக்கிறது. இவை சிவப்பணுக்கள் வெள்ளையணுக்கள் தட்டணுக்கள் என்று மூன்று வகைப்படும். ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. தட்டணுக்கள் ரத்தம் உறைதலுக்கு உதவுகின்றன. ரத்தத்தில் சிவப்பாகக் காணப்படும் 'ஹீமோகுளோபின்'ரத்த ஓட்டத்தின்போது ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் உடல் திசுக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறது. திசுக்களில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு நுரையீரலுக்குக் கொண்டுவந்து வெளிச்சுவாசத்தில் வெளியேற்றுகிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால்தான் திசுக்களுக்குச் சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லாவிட்டால் திசுக்கள் செயல்படுவதற்கு சிரமப்படும். கழிவுப் பொருள்கள் உடலிலிருந்து வெளியேறுவது தடைபடும். இவற்றின் விளைவால் ஆரோக்கியம் கெடும்.
யாருக்கு ரத்தம் தேவை?
நம் நாட்டைப் பொறுத்த வரை சாலை விபத்துகளில் அடிபட்டு ரத்தம் இழப்பவர்கள் அதிகம். அடுத்து முறையற்ற மாதவிலக்கு ரத்த சோகை கருச்சிதைவு கருக்கலைப்பு சிசேரியன் அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் பெண்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. பிரசவத்தின் போது சில பெண்களுக்கு ரத்தம் தேவைப்படும். 'இதய பைபாஸ்' உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற பெரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கும் ரத்த வாந்தி எடுப்பவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுவது உண்டு. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் குறைந்துவிடும். அப்போது இவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டிவரும். ரத்தப் புற்று நோய் தலசீமியா ஹீமோபிளியா நோய் உள்ளவர்களுக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கும் ரத்தம் தேவை.
யார் ரத்ததானம் செய்யலாம்?
18 வயதுமுதல் 55 வயது வரை உள்ள எல்லோரும் ரத்த தானம் செய்யலாம். இந்த வயதுக்கு மேல் ரத்தம் உருவாகின்ற எலும்பு மஜ்ஜையின் தரம் குறைந்து விடும் என்பதால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ரத்ததானம் பெறுவதில்லை. தானம் கொடுப்பவரின் உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அவருடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 100 மிலிக்கு 12.5 கிராமுக்குக் குறையக்கூடாது. ரத்த அழுத்தம் 120-80 லிருந்து 140-90 என்ற அளவுக்குள் இருக்கவேண்டும்.
யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

18 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், மாதவிலக்கு நேரத்தில் உள்ள பெண்கள், நீரிழிவு, எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், காச நோய் உள்ளிட்ட தொற்று நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. பெரிய அறுவைச்சிகிச்சை செய்துகொண்டவர்கள் 6 மாதங்களுக்கு உள்ளாகவும் சிறிய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் 3 மாதங்களுக்கு உள்ளாகவும் ரத்த தானம் செய்யக்கூடாது. மலேரியாகாய்ச்சல் வந்தவர்கள் 6 மாதம் வரையிலும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வருடத்துக்குள்ளும் ரத்த தானம் செய்ய அனுமதியில்லை.
எவ்வளவு ரத்தம்
தானமாகத் தருபவரிடம் 250 மி.லி.,முதல் 350 மி.லி., வரை ரத்தம் பெறப்படும். ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி மஞ்சள்காமாலை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் அதில் இல்லை என்று உறுதி செய்த பிறகே மற்றவர்களுக்குப் பயன்படுத்தப்படும். ரத்த தானம் செய்வதால் அந்த நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இரைக்கிற கிணற்றில் தண்ணீர் ஊறுவதைப் போல் 3 வாரத்தில் இந்த அளவு ரத்தம் ஊறிவிடும். ஒருவரிடமிருந்து பெறப்பட்ட ரத்தத்தை 120 நாட்களுக்குப் பாதுகாக்க முடியும். ஒருவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.
முன்பெல்லாம் மொத்த ரத்தத்தையும் பெற்று அடுத்தவர்களுக்குக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் குறைபாடு எது எனத்துல்லியமாகத் தெரிந்து அதற்கேற்ப ரத்தம் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஹீமோகுளோபின் குறைந்தவர்களுக்கு சிவப்பணுக்களை மட்டுமே பிரித்தெடுத்து வழங்கப்படுகிறது. தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அவற்றை மட்டுமே வழங்குகிறார்கள். பிளாஸ்மா தேவைப்படுபவர்களுக்கு அதுமட்டுமே வழங்கப்படும். இப்படி ரத்த அணுக்களைப் பிரித்துக் கொடுப்பதற்கு 'செல்செப்பரேட்டர்' என்ற கருவி இப்போது வந்திருக்கிறது.
நன்றி பாராட்டுங்கள்!
இந்த ஆண்டு சர்வதேச ரத்தக் கொடையாளர் தினத்தின் கோட்பாடு 'ரத்ததானம் செய்தவர்களுக்குப் பாராட்டு தெரிவியுங்கள்' என்பதே! அடுத்தவர்களின் துன்பத்தை நினைத்து சில துளிகள் கண்ணீர் சிந்துவதைவிட பாதிக்கப்பட்டவர்களுக்காக பல துளிகள் ரத்தத்தைத் தானமாக கொடுப்பது தான் உயிரையே மீட்டுத் தரும் உன்னதமான சேவை! ரத்த தானம் செய்த காரணத்தால் 3 உயிர்களைக் காப்பாற்றிய அந்த நல்ல உள்ளங்களை நேரிலோ தொலைபேசியிலோ அழைத்து நன்றி பாராட்டுங்கள். அந்த சந்தோஷம் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். அவர்களின் சேவை மனப்பான்மையும் தொடரும்.--டாக்டர் கு.கணேசன்
பொது நலமருத்துவர் ராஜபாளையம். gganesan95@gmail.com

வாசகர்கள் பார்வை

கறிவேப்பிலை மகத்துவம்
என் பார்வையில் வெளியான 'கசக்கிறதா கறிவேப்பிலை' கட்டுரை படித்தேன். எளிதில் ஒதுக்கி வைத்து விடக்கூடிய கறிவேப்பிலையின் மகத்துவத்தை கட்டுரையாளர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் இயற்கை மருத்துவத்தில் கறிவேப்பிலை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம். ஒரு கட்டுரை முழுவதும் கறிவேப்பிலையின் வரலாற்றை எழுத முடியும் என்பதற்கு இக்கட்டுரை ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.
- ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.

மகான்களின் வாழ்க்கை
என் பார்வையில் வெளியான 'கவிராஜாவும், காவியராஜாவும்' கட்டுரை படித்தேன். மகா கவியையும், மகா யோகியையும் ஒப்பிட்டு ஒப்பற்ற தகவல்களுடன் கட்டுரையை தொகுத்து எழுதியுள்ளார் கட்டுரையாளர். இவர்களை போன்ற மகான்களின் வாழ்க்கை குறித்தும், அவர்களின் கருத்துக்கள் குறித்தும் வாசகர்களுக்கு அறியத் தரும் என் பார்வைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.- அ. முகமது இஸ்மாயில், தேவகோட்டை
.
அற்புதமான இலை
என் பார்வையில் 'கசக்கிறதா கறிவேப்பிலை' படித்து கறிவேப்பிலை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். அடேங்கப்பா கறிவேப்பிலையில் நம் உடலுக்கு பயன் தரும் இத்துனை விஷயங்கள் உள்ளதா என ஆச்சர்யப்பட்டு போனேன்.- ப. அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்.

பாரதியின் கம்பீரம்
என் பார்வையில் வெளியான'கவிராஜாவும் காவியராஜாவும்' கட்டுரை படித்தேன் அருமை. என் பார்வை இது வேறுபட்ட பார்வை. சின்னச்சாமி பெற்றெடுத்த பெரியசாமி பாரதி. லட்சுமி அம்மாள் பெற்றெடுத்த சரஸ்வதி பாரதி, கம்பீரம் என்றால் பாரதி அல்ல பாரதி என்றாலே கம்பீரம் தான். எழுதுகோலும் சொற்களும் இவரது சொத்துக்கள். இவர் வழி நின்று வாழ வேண்டும் என்பதை கட்டுரை எடுத்துக் காட்டியது. மனதை மகிழ்வித்த கட்டுரை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.- சே.மணிகண்டன், பெரியகுளம்.

வீரத்துறவி தேசிய கவி
என் பார்வையில் வெளியான 'கவிராஜாவும் காவிய ராஜாவும்' கட்டுரை படித்தேன். வீரத்துறவி விவேகானந்தருக்கும், தேசிய கவி பாரதிக்கும் உள்ள ஒற்றுமைகளை கட்டுரையாளர் ஒப்பீடு செய்து எழுதியிருப்பது சீரிய சிந்தனையின் வெளிப்பாடாக இருந்தது. தியாகச் செம்மல் காமராஜர் தேசப்பிதா காந்தி பிறந்தநாளில் சாந்தியடைந்தார் என்பதையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.- அன்புச்செல்வன், வீரபாண்டி.

என் பார்வை வளர்ச்சி

என் பார்வையில் வெளியான பட்டுக்கோட்டையின் பாட்டுக் கோட்டை, கவிராஜாவும் காவிய ராஜாவும், கசக்கிறதா கறிவேப்பிலை, இது ஓர் ஐஸ் உலகம் போன்ற கட்டுரைகள் சிந்திக்க வைத்தது. இது போல ஒவ்வொரு நாளும் வரும் கட்டுரைகள் வாசகர்களாகிய எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. தொடர்ந்து வரட்டும் வளரட்டும் என் பார்வை. வாழ்த்துக்கள்.- கே. வினோதினி, ராமநாதபுரம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X