கோலாலம்பூர்: மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் படும் துயரை விட, அங்குள்ள சிறுபான்மை தமிழர்கள், ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி, சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர்.
அண்டை நாடுகளில் அடைக்கலம் புகும் ரோஹிங்யா மக்களுக்காவது, அகதிகள் என்ற அந்தஸ்து கிடைக்கிறது.ஆனால், தமிழர்களுக்கு, அது கூட கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவலை மலேசியாவின், 'ஸ்டார் பேப்பர்' தெரிவித்துள்ளது.மலேசியாவில் சட்டப்பூர்வமாக குடியேற்றுகிறோம் என, ஆட்கடத்தல் கும்பல் கூறுவதை நம்பி, அவர்களிடம் மியான்மர் தமிழர்கள் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர்.ரோஹிங்யாவினருடன், தமிழர்களையும், வங்கதேசத்தை சேர்ந்தவர்களையும், படகில் கொண்டு செல்லும் அந்த கும்பல், வியட்னாம், தாய்லாந்து கரையோர காடுகளில், இறக்கி விடுகின்றனர்.பின், அங்குள்ள ரகசிய முகாம்களில் அடைத்து வைத்து, மேலும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இருக்கும் சொத்தையெல்லாம் விற்று விட்டு, கையில் உள்ள கொஞ்ச நஞ்ச பணத்தையும், அந்த கும்பலிடம் பறிகொடுக்கும் தமிழர்கள் மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இப்படி சென்றவர்கள், கேதா, பெர்லிஸ் மாகாணங்களில், கட்டுமான பணி செய்கின்றனர்.
பணம் கொடுக்காதவர்களை அடித்து, உதைத்து, மியான்மரில் உள்ள உறவினர்களிடம் மொபைல் போனில் பேசச் செய்து, பணத்தை கறக்கின்றனர்.அப்படியும் பணம் வரவில்லையென்றால், சோறு, தண்ணீர் தராமல், முகாம்களில் அடைத்து வைத்து சாகடிக்கின்றனர்.இறந்தவர்களை, அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். இவர்கள் நிலை இப்படி என்றால், மலேசியாவிற்கு சென்று கட்டுமானப் பணி செய்யும் மியான்மர் தமிழர்களுக்கு, அகதிகள் என்ற அந்தஸ்து கூட தர, அகதிகளுக்கான, ஐ.நா., துாதரகமான - யு.என்.எச்.சி.ஆர்., மறுப்பது தான் கொடுமை.இப்படி, ஒரு குழுவில் சென்ற, 100க்கும் மேற்பட்ட தமிழர்கள், நாடற்றவர்களாக, மலேசியாவில் உள்ளனர்.அவர்கள், அடையாள அட்டையின்றி மியான்மர் திரும்பினால், சுட்டுக் கொல்லப்படலாம் என, அஞ்சுகின்றனர்.அதே நேரத்தில், மலேசியா அதிகாரிகளின் கெடுபிடிகளையும் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, பரிமளா, 21 என்ற தமிழ் பெண் கூறுகையில், ''கடந்த ஆண்டு, மியான்மர் அரசு, அடையாள அட்டை வழங்குவதாக அறிவித்தது. அதற்கு முன்பாகவே, எங்களுடன் வந்த பலர், மியான்மர் திரும்பி விட்டனர்; அடையாள அட்டை இல்லாத நாங்கள் திரும்பினால், சுடப்படும் அபாயம் உள்ளது, என்கிறார்.பல ஆண்டுகளுக்கு முன், மியான்மரில் விவசாய வேலைக்கு சென்று, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிந்தவர்கள் தமிழர்கள். அவர்களின் வழித்தோன்றல்கள், இன்று, குடியுரிமை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வாடுவது, கொடுமையிலும் கொடுமை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE