பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு... கார்ப்பரேஷன்!| Dinamalar

பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு... கார்ப்பரேஷன்!

Added : ஜூன் 16, 2015
Share
சுங்கம் ரவுண்டானாவில், வண்டிகளை நிற்கச் சொல்லி விட்டு, சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்த ஒரு பெரியவரை, பரிவோடு சாலையைக் கடக்க உதவிக் கொண்டிருந்தார், இளம் போக்குவரத்துக் காவலர்.சித்ராவும், மித்ராவும் டூவீலரை ஓரம் கட்டி, அந்தக் காட்சியைப் பார்த்தார்கள்.'அய்யா! மயக்கமா இருக்கா? தண்ணி குடிக்கிறீங்களா?' என்று அந்த பெரியவரிடம் கேள்விகள் கேட்டு, அவர் எதுவும்
பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு... கார்ப்பரேஷன்!

சுங்கம் ரவுண்டானாவில், வண்டிகளை நிற்கச் சொல்லி விட்டு, சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்த ஒரு பெரியவரை, பரிவோடு சாலையைக் கடக்க உதவிக் கொண்டிருந்தார், இளம் போக்குவரத்துக் காவலர்.சித்ராவும், மித்ராவும் டூவீலரை ஓரம் கட்டி, அந்தக் காட்சியைப் பார்த்தார்கள்.'அய்யா! மயக்கமா இருக்கா? தண்ணி குடிக்கிறீங்களா?' என்று அந்த பெரியவரிடம் கேள்விகள் கேட்டு, அவர் எதுவும் வேண்டாமென்றதும், நிழலில் அவரை அமர வைத்து விட்டு, மீண்டும் போலீஸ் குடைக்குள் ஏறினார் அந்த காவலர்.''டிராபிக் போலீஸ்ல இப்பிடியும் நல்லவுங்க இருக்காங்களே'' என்றாள் சித்ரா.''ஆனா, நம்மூர்ல டிராபிக்கைக் கவனிக்க வேண்டிய முக்கியமான போலீஸ் ஆபீசருங்க, 'எவன் எக்கேடு கெட்டா என்ன'ன்னு, எல்லா ரூல்சையும் மீறி, ரோடெல்லாம் விளம்பரத்தை வைக்க விட்டு, சம்பாதிக்கிற சம்பாத்தியம் இருக்கே... கேட்டா தலை சுத்திரும்'' என்றாள் மித்ரா.''ஏற்கனவே, டிராபிக் போலீசுங்க அங்க இங்க புடுங்கி, மாசாமாசம் மாமூல் கட்றாங்களே...அது போதாதா?''''சும்மாவா... சொகுசு வாழ்க்கை வாழ்றதுக்கு அதெப்பிடிப் போதும்...அதனால தான், சிக்னலு, சிசிடிவி, மைக் வைக்கிறோம்கிற பேருல, தெருவெல்லாம் அனுமதியில்லாம விளம்பரத்தை வைக்க விட்டு, லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாரு ஒரு ஆபீசர்''''அந்த விளம்பரத்தை எல்லாம் தான், கலெக்டர் ஆர்டர் போட்டு, துாக்க வச்சிட்டாங்களே!'' என்றாள் சித்ரா.''அதுக்குப் பதிலா, 'சிசிடிவி' கேமரா வைக்கிறோம்கிற பேர்ல, பல இடங்கள்ல விளம்பரங்களை வைக்க பெருசு பெருசா 'ஆங்கிள்' வச்சாங்க தெரியுமா...'' என்று மித்ரா சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட சித்ரா, 'அதையும் தான், போலீஸ் கமிஷனர் உடனே எடுக்கச் சொல்லிட்டாரே' என்றாள்.''எடுத்தாச்சு...ஆனா, அந்த விளம்பரங்களை வைக்கிறதுக்கு, ரெண்டு ஏஜன்சிக்காரங்களுக்கு கலெக்டர்ட்ட அனுமதி வாங்கிக் கொடுத்து, காசு பாத்தது யாரு தெரியுமா?''''யாரு...டிராபிக் போலீஸ் ஆபீசருங்களா?''''அதான் இல்லை...கலெக்ட்ரேட்ல பி.ஏ.பி.டி., செக்ஷன்ல இருக்கிற முக்கியமான ரெண்டு பேரு தான், சத்தமில்லாம வேலை பாத்திருக்காங்க. எவ்ளோ காசு கை மாறுச்சுன்னு தெரியலை. ஆனா, காரியம் 'ஜெயம்' ஆகாமப் போனதால, கையைப் பிசைஞ்சிட்டு இருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.''வாங்குன காசுக்கு வேலை செஞ்சு கொடுக்க முடியாம இவுங்க கையைப் பிசையுறாங்க. செஞ்ச வேலைக்கு காசை வாங்க முடியாம, சிலர் கஷ்டப்படுறாங்க'' என்றாள் சித்ரா.''அது எங்கக்கா?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.''காந்திபுரத்துல போலீஸ் குவாட்டர்ஸ் கட்டுற வேலை எடுத்திருக்கிற கான்ட்ராக்டர், அங்க வேலை செஞ்சவுங்களுக்கு முழுசாப் பணத்தைக் கொடுக்காம இழுத்தடிக்கிறாராம். அவர்ட்ட 'என்னங்க...இப்பிடிப் பண்றீங்களே'ன்னு கொஞ்சம் அழுத்திக் கேட்டா, 'போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திருவேன்'ன்னு மெரட்டுறாராம்''''போலீஸ் குவாட்டர்ஸ் பத்தி இன்னொரு மேட்டர். சிட்டிலயிருந்து டிரான்ஸ்பர் ஆன இன்ஸ்பெக்டர்க, நாலஞ்சு பேரு, 'அகாடமிக் இயர்' முடிஞ்ச பிறகும், வீட்டைக் காலி பண்ணாம வச்சிருங்காங்க. அதனால, இங்க வேலை பாக்கிற இன்ஸ்பெக்டர்களோட குடும்பமெல்லாம், வெளியில அதிக வாடகை கொடுத்து குடியிருக்காங்க''பேசிக்கொண்டே வண்டியை, திருச்சி ரோட்டில் வண்டியைப் பறக்க விட்டாள் மித்ரா. இரும்புக் குப்பைகளை ஏற்றிக் கொண்டு, ஒரு லாரி அவர்களைக் கடந்தது.''மித்து...இந்த வண்டியைப் பார்த்ததும் தான் ஞாபகம் வருது. கார்ப்பரேஷன்ல இருந்து 75 டன் பழைய இரும்பை, 'டெண்டர்' விடாமலே கடத்திட்டாங்க தெரியுமா?'' என்றாள் சித்ரா.''என்னக்கா சொல்ற...75 டன்னுன்னா, பத்துப் பதினைஞ்சு லட்ச ரூபா போகுமே!'' என்று அதிர்ந்தாள் மித்ரா.''ஆமாடி...வழக்கமா, ஒரு கமிட்டி 'பார்ம்' பண்ணி, சென்ட்ரல் கவர்மென்ட் ஸ்டீல் மினிஸ்ட்ரிக்குக் கீழ வர்ற எம்.எஸ்.டி.சி.,ய வச்சு மதிப்பீடு பண்ணி, இ.டெண்டர் விடுவாங்க. ஆனா, இங்க எந்த டெண்டருமே விடாம, கம்பத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு, அப்பிடியே அள்ளிக் கொடுத்திருக்காங்க''''கார்ப்பரேஷன்ல எல்லாக் கணக்குமே, அப்பிடித்தான் போய்ட்டிருக்கு. பத்தாயிரம் ரூபா பெறுமான போர்வெல் ஸ்விட்ச் போர்டுக்கு, நாலு மடங்கு பில் போடுறாங்க. பத்து லட்ச ரூபா ரோடு வேலைக்கு, நாப்பது லட்ச ரூபாய்க்கு எஸ்டிமேஷன் போட்டு, நாலு வேலையாப் பிரிச்சு 'டெண்டர்' விடுறாங்க''''இதெல்லாம் 'ஆடிட்'ல பார்க்க மாட்டாங்களா? விஜிலென்ஸ் விசாரிக்க மாட்டாங்களா?'' என்றாள் சித்ரா.''அந்த டிபார்ட்மென்ட்டெல்லாம் இருக்கா என்ன...அப்பிடியே இருந்தாலும், ஆளும்கட்சிக்கு நெருக்கமானவுங்க கிட்ட நெருங்க முடியுமா?'' என்றாள் மித்ரா.''ஓ... அவுங்களச் சொல்றியா...நானும் கேள்விப்பட்டேன் மித்து. இப்போ, அவுங்க தான் பவர்ஃபுல்லா இருக்காங்களாமே. பெரிய ஆபீசரே, இவுங்களுக்கு ரொம்ப பயப்படுறாராம்'' என்றாள் சித்ரா.''அது தான் யாருக்குமே புரியலை. வேலை தெரிஞ்சவுங்களுக்கு பயந்தாலும் பரவாயில்லை. ஒரு வேலையும் தெரியாத இவுங்களுக்கு ஏன் பயப்படுறாருன்னு கார்ப்பரேஷனே கதிகலங்கியிருக்கு'' என்றாள் மித்ரா.''வேலை செய்யாட்டாலும் பரவாயில்லை. சாதாரண ஜனங்க வீடு கட்றதுக்கு 'அப்ரூவல்' கேட்டு வர்ற ஃபைல்களையும் மாசக்கணக்கா 'பெண்டிங்' போடுறாங்களாமே''''இப்பேர்ப்பட்ட ஆபீசர்களை வச்சுட்டு, ஒரு வருஷத்துல கார்ப்பரேஷன்ல என்னத்த வேலை நடக்கப் போகுது. எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை''''கரெக்ட் மித்து! லாரிப்பேட்டை, பஸ் ஸ்டாண்ட் எல்லாத்தையும் வெள்ளலுார் கொண்டு போறதாச் சொன்னாங்க. இப்போ, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மட்டும் தான் அங்க வரப்போகுதாம். ஆனா, குடிசை மாற்று வாரிய வேலையத் தவிர, ஒரு வேலையும் அங்க தொடங்கலை'' என்றாள் சித்ரா.''பல வேலைங்களுக்கு, கவர்மென்ட்லயிருந்து 'அட்மினிஸ்ட்ரேட்டிவ் சாங்ஷன்' வராம கெடக்குது. நம்மூரு மினிஸ்டர் ரொம்பவே இன்ட்ரஸ்ட்டாத்தான் இருக்காரு. ஆனா, இங்கயிருக்கிற 'அபிஷியல் செட்டப்'பே சரியில்லையே'' என்றாள் மித்ரா.''உண்மை தான்...காந்திபுரம் பாலம், ரத்தினபுரி ரயில்வே மேம்பாலம் ரெண்டு வேலையுமே, இ.பி., போஸ்ட், டிரான்ஸ்பார்மர்களை இடம் மாத்தாமத்தான் தள்ளிப் போயிட்டே இருக்கு. கடைங்க, கோவிலு, எதையுமே மாத்த முடியலை. கலெக்டர் நினைச்சா, சம்மந்தப்பட்ட டிபார்ட்மென்ட்களுக்கு ஒரு 'வார்னிங்' கொடுத்து, வேலையை வேகப்படுத்தலாம். அவுங்க ஒண்ணும் பண்ண மாட்டேங்கிறாங்களே'' என்றாள் சித்ரா.''லேட்டஸ்ட்டா...அவுங்க ஒரு வேலை பண்ணுனாங்க தெரியுமா...ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல, 33 ஓ.ஏ., போஸ்ட்டிங் நிரப்புறதுக்கு 'கால்ஃபார்' பண்ணுனதுக்கு, ஆயிரத்துக்கு மேல அப்ளிகேஷன் வந்திருக்கு. பத்து தாசில்தார்களை வச்சு, இன்டர்வியூ நடத்தி, ஆட்களை தேர்வு பண்ணிட்டாங்க''''அட...பரவாயில்லையே. இந்தக் காலத்துல, காசு வாங்காம, கவர்மென்ட் போஸ்ட்டிங்கா?''''அவசரப்படாதக்கா...அவுங்க 'லிஸ்ட்' தயார் பண்ணுன பிறகு, லோக்கல் ஆளும்கட்சி தரப்புலயிருந்தும், சென்னை செகரட்டரியேட்ல இருந்தும் ரெண்டு லிஸ்ட் வந்திருக்கு. என்ன பண்றதுன்னே தெரியாம, மொத்த 'லிஸ்ட்'களையும் சென்னைக்கு அனுப்பிட்டாங்களாம்'' என்று சிரித்தாள் மித்ரா.''மித்து...நீ லிஸ்ட்ன்னதும் ஞாபகம் வந்துச்சு. டிஎம்கேவுல இருக்கிற 'வாயாடி' மாஜியோட, வெளிநாட்டுக் காருக்கு, சூலுார் அட்ரஸ்ல ரீ ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிக் கொடுத்ததுக்காக 'சஸ்பெண்ட்' ஆனாரே, ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர். இதே மாதிரி வேற ஏதாவது பண்ணிருக்காரான்னு, 'லிஸ்ட்' எடுத்ததுல, மொத்தம் 18 ஃபாரின் கார்களுக்கு ரீ ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிக் கொடுத்திருக்காருன்னு தெரிஞ்சிருக்கு.'' என்றாள் சித்ரா.''அப்போ, எத்தனை கோடி கொடுத்தாலும், இப்போதைக்கு வேலைக்கு வர முடியாதுன்னு சொல்லு'' என்றாள் மித்ரா.''அது தெரியலை...ஆனா, சிட்டி இன்ஸ்பெக்டர்க எல்லாம், இப்போ ஸ்டேஷனுக்கு கரெக்டா வேலைக்கு வர்றாங்க'' என்று கொக்கி போட்டாள் சித்ரா.''நிஜமாவா...?'' என்று சத்தமாய்க் கேட்டாள் மித்ரா.''ஆமா மித்து...காலையில 12 டூ 1.30, சாயங்காலம் ஆறு டூ ஏழு மணிக்கு, எல்லா இன்ஸ்பெக்டர்களும் மக்களை நேரடியாப் பாக்கணும்னு கமிஷனர் சொல்லிட்டாரு. அதுக்கு நல்ல வரவேற்பு. நிறைய்யப் பேரு பாராட்டுறாங்க.'' என்றாள் சித்ரா.''சிட்டி போலீஸ்க்கு ஒரு ரியல் சல்யூட்'' என்று வலது கையைத் துாக்கினாள் மித்ரா.''சல்யூட் அடிக்கிறது அப்புறம் இருக்கட்டும். நீ வண்டிய ஒழுங்கா ஓட்டு'' என்று சித்ரா செல்லமாய்க் கண்டிக்க, ஆக்சிலேட்டரைத் திருகினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X