மதிய நேரம், நல்லூரில் உள்ள தோழி வீட்டுக்குச் சென்று விட்டு, சித்ராவும், மித்ராவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், அம்மா உணவகத்தை பார்த்ததும், உணவு அருந்தலாம் என ஸ்கூட்டரை ஓரம் கட்டினர்.சாம்பார் சாதம் வாங்க இரண்டு டோக்கன் வாங்கினாள் சித்ரா. டோக்கன் சற்று கசங்கியிருந்தது. சாதம் ருசியாக இருந்தது; அளவு குறைவாக இருந்ததால், வயிறு நிறையவில்லை. மீண்டும் இரண்டு டோக்கன் வாங்கியபோது, இதற்கு முன் வாங்கிய டோக்கனுக்கு முந்தைய எண் இருந்தது. இருவரும் உணவகம் செயல்பாட்டை உண்ணிப்பாக கண்காணித்தனர். அப்போதுதான் தெரிந்தது. ஏற்கனவே கொடுத்த டோக்கன் மீண்டும் கேஷியருக்கு செல்வது தெரிந்தது.""சாதம் பத்தலைன்னு சொன்னியே. இங்கு நடக்கும் முறைகேட்டை பார்த்தியா. அளவை குறைச்சிட்டு; டோக்கன் எண்ணிக்கையை அதிகப்படுத்துறாங்க,'' என்றாள் சித்ரா.""ஒருநாளைக்கு, 300 பேருக்கு சாதம் விற்க உத்தரவு போட்டிருக்காங்க. இவுங்க, நிர்ணயிச்ச அளவுக்கு கணக்கு எழுதிட்டு, பழைய டோக்கனை சுழற்சி முறையில் கொடுத்து, பணத்தை அமுக்கிடுறாங்க போலிருக்கு. எப்படியெல்லாம் நூதனமா திருடுறாங்க, பாருங்க,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.""ஒனக்கு கோபம் வருது; அதிகாரிகளுக்கு வர மாட்டேங்குதே,'' என்றாள் சித்ரா.""அவுங்களுக்கு சேர வேண்டியதை, கரெக்ட்டா கொடுத்துட்டா, அவுங்க ஏன் நடவடிக்கை எடுக்கப் போறாங்க,'' என, மித்ரா பதில் சொல்ல, ""கமிஷன், "கட்டிங்', "கப்பம்' கட்டுறது, அரசு அலுவலகத்துல, வழக்கமா நடக்குறதுதானே, அதைச் சொல்லலை. ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழாவை சொன்னேன்,'' என்றாள் சித்ரா.""அப்படி என்ன நடந்துச்சு,'' என, மித்ரா கேட்க, ""பயணிகளுக்கு காத்திருப்போர் அறை கட்டியிருக்காங்க. கல்வெட்டில் திருப்பூர் எம்.பி., - மேயர் - எம்.எல்.ஏ.,க்கள், ரயில்வே அதிகாரிகள் பெயரை பொறிச்சிருக்காங்க. ஆனா, நம்மூர் கலெக்டர் பெயரை விட்டுட்டாங்க. எம்.எல்.ஏ.,க்கள் பெயரை போட்டிருக்கீங்க; கலெக்டர் பெயரை ஏன் போடலைனு வருவாய்த்துறை அதிகாரிங்க பொங்கி எழுந்துட்டாங்க. எதுவுமே நடக்காத மாதிரி, பின் வரிசையில், ஓரமா நின்னுட்டு கலெக்டர் கிளம்பி போயிட்டார்,'' என்றாள் சித்ரா.திருப்திகரமா சாப்பிட்டு முடித்ததும், வீட்டை நோக்கி, ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.அப்பகுதியில் இருந்த, "டாஸ்மாக்' மதுக்கடையை பார்த்ததும், ""நம்மூர்லதான்டீ, எப்ப பார்த்தாலும், மதுக்கடையில கூட்டம் அலைமோதுது. "சரக்கு' வாங்க சண்டை போடுறாங்க,'' என, வருத்தப்பட்டாள் சித்ரா.""ஆமாக்கா, காலையில, 10:00 மணியில இருந்து, நைட், 10:00 மணி வரைக்கும் கடையை திறந்திருக்கணும். விடியற்காலை, 6:00 மணிக்கே, சில இடங்களில் கடையை தெறந்திடுறாங்க. நைட் நேரத்திலும், 11:00 மணியை தாண்டினாலும், வியாபாரம் நடக்குது. ஆளுங்கட்சி தலையீடு வரும்னு பயந்து, போலீஸ்காரங்க கண்டுக்காம போயிடுறாங்க,'' என, விளக்கினாள் மித்ரா.""எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. மாநகராட்சி அதிகாரிகள் சிலர், "பினாமி' பெயரில், சில வேலைகளை செய்றாங்க. "கமிஷன்' கொடுக்கிற விஷயத்தை ஒப்பந்ததாரர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், அவுங்களை ஓரங்கட்டிட்டு, இவுங்களே, "நம்பிக்கை'யான ஆட்களா தேர்வு செஞ்சு, "பினாமி' பெயரில், வேலை செஞ்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.""அதிகாரிங்க நெனைச்சா, எப்படி வேணும்னாலும், "பைல்' உருவாக்குவாங்க; அழிப்பாங்க,'' என்ற மித்ரா, ""கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ரயில்வே துறை அதிகாரி ஒருத்தர் பணி ஓய்வு பெற்றார். ரயில்வே கோட்ட அலுவலர்கள் ரொம்ப வருத்தப்பட்டாங்க,'' என, சொல்லி முடிப்பதற்குள், ""ஏன்? அவ்ளோ ரொம்ப நல்ல அதிகாரியா?'' என, சித்ரா கேட்க,""ஆய்வுக்கு வந்தாலும், ஏதாவது பிரச்னை வந்தாலும், "ஒங்க மீது நம்பிக்கை இருக்கு; நான் சொல்ற மாதிரி வச்சுக்காதீங்க; நீங்களே பார்த்து பண்ணிக்கீங்க,' என, அறிவுரை சொல்லுவாராம். அவர் மீது எல்லோரும் மரியாதை வச்சிருந்தாங்க,'' என, மித்ரா சொல்லி முடிப்பதற்கும், வீட்டுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE