வனஜா...
திருச்சியில் பரபரப்பான சத்திரம் பேருந்து நிலைய நெரிசல்களுக்கு மத்தியில் இருந்து ஒரு குரல்...
சூடான சுவையான உடம்புக்கு தேவையான முடக்கத்தான் சூப், துாதுவளை சூப், உளுந்தங்கூழ்,சுக்கு காபி கிடைக்கும் வாங்க, வந்து சாப்பிட்டு பாருங்க என்று விடாமல் அழைத்தது.
ஏற்கனவே பதிவு செய்து சின்ன ஸ்பீக்கரில் ஒலிபரப்பப்பட்ட அந்த குரல் வந்த திசையை நோக்கி பார்த்த இடத்தில் ஒரு பெண் டிவிஎஸ் 50 வண்டியை சுற்றி நாலைந்து சிறிய அண்டாக்களை கட்டிவைத்து சூப் முதல் சுக்கு காபி வரை விற்றுக்கொண்டிருந்தார்.
பெயர் வனஜா
அரியலுாரில் இருந்த போது முருகன் என்பவருடன் காதல் திருமணம்.திருமணத்திற்கு இரு வீட்டாரிடம் எதிர்ப்பு கிளம்பவே சமயபுரத்தில் ரோட்டோரம் தேங்காய் பழம் விற்றாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர்.
சமயபுரம் வந்தாயிற்று ஆனால் நினைத்தது போல தேங்காய் பழம் விற்கமுடியவில்லை, அவ்வளவு போட்டி பொறாமை. சரி தேங்காய் பழம் விற்பவர்களுக்கு டீ போட்டுக்கொடுக்கும் பிழைப்பை பார்ப்போம் என்று முடிவு செய்தனர். வனஜா வீட்டில் டீ போட்டுக்கொடுக்க முருகன் அதை கேனில் கொண்டுபோய் விற்றுவந்தார்.
சமயபுரத்தில்
மட்டும் டீ விற்றதால் பெரிதாக வருமானம் வரவில்லை, இதன் காரணமாக அங்கு
இருந்து டீ எடுத்துக்கொண்டு திருச்சி சத்திரம் பஸ்நிலையம் மற்றும் காந்தி
மார்க்கெட் போன்ற இடங்களுக்கு டீ கொண்டுவந்து விற்றனர்.
இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்த போதுதான் கணவருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது, ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்தன் முடிவில் கணவருக்கு ஒய்வுதான் உரிய மருந்து என்று சொல்லிவிட்டனர்.
கணவருக்கு கட்டாய ஒய்வு கொடுக்கவேண்டும்,வீட்டிற்கு வாடகை கொடுக்க வேண்டும்,முத்துகுமாரி,லட்சுமிபிரியா என்ற இரண்டு பெண் குழந்தைகளை படிக்கவைக்கவேண்டும்,உதவக்கூடிய நிலையில் சுற்றமும் நட்பும் கிடையாது இதையெல்லாம் தாண்டி அன்றாடம் நான்கு ஜீவன்கள் சாப்பிட்டாக வேண்டும், தீவிரமாக யோசித்த வனஜா தீர்கமாக எடுத்த முடிவுதான் தானே இனி டீ விற்க கிளம்புவது என்று.
இந்த முடிவை எடுக்கும் போது வனஜாவிற்கு வயது இருபது இப்போது முப்பத்தைந்து.அதிகாலை ஒரு மணிக்கு எழுந்து அடுப்பு பற்ற வைத்து டீ,சுக்கு காபி,உளுந்தங்கூழ் தயாரித்து முடித்து தனது டிவிஎஸ் 50 வண்டியில் ஏற்றிக்கொண்டு இருபது கிலோமீட்டர் துாரம் பயணம் செய்து திருச்சி காந்தி மார்கெட் வந்து இறங்கிவிட்டார் என்றால் அப்போது அதிகாலை மணி 3 மணி என்று அர்த்தம்.
நான்கு மணி நேரத்தில் கொண்டு வந்த டீ காபியை விற்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு போய் பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுத்து பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, கணவரது தேவைகளை கவனித்துவிட்டு மீண்டும் அடுப்பை பற்றவைத்து சூப் வகைகளை தயார் செய்து கொண்டு சத்திரம் பஸ் நிலையம் வந்தார் என்றால் மதியம் 3 மணி என்று அர்த்தம்.
சூப் விற்கும் போது கூடுதலாக இரண்டு கேன்கள் மற்றும் அவ்வப்போது சூப்பை சூடாக்க தேவையான அடுப்பு என்று மினி லாரிக்கான லக்கேஜ்களுடன் வனஜாவின் டிவிஎஸ் 50 காணப்படும்.சாதாரணமாக தள்ளவே முடியாது அவ்வளவு வெயிட்டான வண்டி ஆனால் வனஜா சொன்னபடி ஒடுகிறது காரணம் வாழ்க்கை எனும் வண்டியை ஒட்டவேண்டும் என்பதால்.
சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டு வந்த சரக்கை எல்லாம் விற்று முடிக்க இரவு 9 மணியாகிவிடும் சில நேரம் 10 மணியுமாகிவிடும்.சத்தம் போட்டு விற்க முடியாது என்பதால் அவ்வப்போது 'சுவிட்ச்' போட்டதும் சூப் சாப்பிட ஸ்பீக்கர் அழைக்கிறது.
கடந்த பதினைந்து வருடங்களாக மழை வெயில் காற்று பார்க்காமல் வனஜாவின் வண்டி இப்படித்தான் ஒடிக்கொண்டு இருக்கிறது, இவரது ஒட்டத்திற்கு வாரவிடுமுறை மாதவிடுமுறை வருடவிடுமுறை எல்லாம் கிடையாது வருடம் முழுவதும் ஒடிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் இவரது வாடிக்கையாளர்கள் வேறு பக்கம் திரும்பிவிடுவார்கள்.
இடையில் ஒரு முறை நாய் குறுக்கே வந்து வண்டியோடு விழுந்ததில் உடம்பெல்லாம் சிராய்ப்பு ஒரு கையை துாக்கவே முடியவில்லை பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கின்றனர். முதல் உதவி சிகிச்சை கொடுத்துவிட்டு கையை ஒரு வாரத்திற்கு அசைக்காம இருக்கணும் என்று சொல்லி மருத்துவர் வீட்டிற்கு அனுப்ப, வனஜாவோ வண்டியை எடுத்துக்கொண்டு சத்திரம் பேருந்து நிலையத்திற்கு டீ விற்க கிளம்பிவிட்டார்.
இதுவரை
குடும்பத்தோடு எங்கும் போனது இல்லை, வீட்டில் உள்ள டி.வியில் கூட சினிமா
பார்த்தது கிடையாது ஒரு நாளைக்கு நான்கு மணி நேர துாக்கம் மற்ற நேரமெல்லாம்
உழைப்பு உழைப்பு உழைப்புதான்.கணவர் மகள்கள் மற்றும் மகனாக வளர்த்துவரும்
முத்து என்ற நாய்தான் இவரது உலகம் சந்தோஷம் எல்லாம்.
கடுமையான உழைப்பின் பலனாக பெண் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ந்து தற்போது நன்றாக படிக்கின்றனர், கணவர் ஒரளவிற்கு குணமாகி தற்போது குடும்ப சுமையை பகிர்ந்து கொள்ளவதற்காக அவரால் முடிந்த இடத்திற்கு அவரும் டீ கொண்டு போய் வியாபாரம் வருகிறார்.இப்படித்தான் வனஜாவின் வாழ்க்கை எனும் வண்டி ஒடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் அவருக்கே தெரிகிறது இன்னும் ரொம்ப நாளைக்கு நம்ம உடம்பு இப்படி வண்டி ஒட்டி வியாபாரம் செய்ய ஒத்துழைக்காது என்று, அதனால் சமயபுரம் டோல்கேட் அல்லது நால்ரோடு போன்ற இடங்களில் ஆவின் பூத் போல ஒரு பெட்டி கடை போட அரசு அனுமதி கிடைத்தால் மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் யாருக்கும் பாராமில்லாமல் வாழ்ந்து விடலாம் என்று முயற்சி எடுத்தார் எடுக்கிறார் எடுத்துக்கொண்டே இருக்கிறார் ஆனால் லஞ்ச லாவண்யம் நிறைந்த இந்த உலகில் இவரது முயற்சிக்குதான் எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை, யாராவது ஒருவர் எனக்கு கருணை காட்டவருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் வனஜா...
அந்த யாராவது ஒருவர் நீங்களாகவோ அல்லது உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் கொஞ்சம் வனஜாவிற்கு சொல்லி உதவுங்கள் அவரை தொடர்பு கொள்வதற்கான எண்:7402053696.
-எல்.முருகராஜ்.