மணல் கொள்ளைக்கு ஆதரவு:துரைமுருகன் கடும் எச்சரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

மணல் கொள்ளைக்கு ஆதரவு:துரைமுருகன் கடும் எச்சரிக்கை

Added : ஜூன் 19, 2015

வேலூர்:""மணல் கொள்ளைக்கு, ஆதரவாக செல்லும் தி.மு.க.,வினரை, கட்சியை விட்டு நீக்குவோம்,'' என, மாஜி தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூரில், மணல் குவாரி அமைப்பதை எதிர்த்து, அப்பகுதி மக்கள், மூன்று மாதமாக போராடி வருகின்றனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து அங்குள்ள பெண்கள், கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். முன்னாள் தி.மு.க., அமைச்சர் துரைமுருகன், நேற்று மதியம், 2 மணிக்கு களத்தூர் சென்று, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்குள்ள மக்களை சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:இப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டம் நியாயமானது. இவர்களின் போராட்டத்துக்கு, தி.மு.க.,வின் ஆதரவு உண்டு. மணல் கொள்ளைக்கு, கடத்தலுக்கு ஆதரவாக செல்லும், தி.மு.க.,வினரை கட்சியை விட்டு நீக்குவோம். இங்கு, 50 அடி ஆழத்துக்கு மணல் தோண்டி எடுத்து விட்டனர். இதனால், ஆயிரம் அடி ஆழத்துக்கு போர்வெல் போட்டாலும், தண்ணீர் கிடைக்கவில்லை.
மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய மாவட்ட கலெக்டர்கள், மணல் கொள்ளையர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அதன் பங்குதாரர்களாக உள்ளனர். கேட்டால், நாங்களே பணம் கொடுத்துதான் பதவியை வாங்கியதாக கூறுகின்றனர். பல மாவட்டங்களில், கலெக்டர்கள் மணல் எடுப்பதில் கூட்டு வைத்துக் கொண்டு, கோடி, கோடியாக கொள்ளையடிக்கின்றனர். மணல் அள்ளும் போது டிராக்டர்கள் முன் உட்கார்ந்து போராட்டம் நடத்த வேண்டும். எங்கள் மீது ஏற்றி விட்டு, மணல் எடுத்துக்கிட்டு போங்கள் என்று தைரியமாக கூற வேண்டும்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. அங்கு வீடு, வீடாக பணம் கொடுக்கின்றனர். தி.மு.க.,- காங்கிரஸ்,- தே.மு.தி.க.,- பா.ஜ., என, யாரும் எதிர்க்கவில்லை. இந்தம்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஜெயிக்க போகிறார். பாவம் "டிராபிக்' ராமசாமி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X