கூடலூர்:வசதிபடைத்த சிலர் படிப்பு உள்ளிட்ட நல்ல செயல்களுக்கு பணம் கொடுத்து உதவுகின்றனர். பணம் இல்லாமல் உதவி செய்ய மனம் மட்டும் இருக்கும் சிலர் தங்கள் உடல் உழைப்பின் மூலம் உதவுகின்றனர். ஆனால் பணம் மற்றும் உடல் உழைப்பு ஆகிய இரண்டையும் கொண்டு "கூடலூர் தேசீகம் நண்பர்கள் குழு'வினர் சப்தமின்றி செய்து வரும் உதவி தன்னிகரற்றது.
குழுவில் கூடலூரைச் சேர்ந்த இளங்கோவன், கோபால், பாண்டிக்கண்ணன், சரவணன் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். மன நலம் பாதித்தவர்களுக்கு சேவை செய்வதுதான் இவர்களின் முக்கியமான தொண்டு.
நண்பர்கள் குழுவினர் கூறியதாவது: கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில், நல்ல சமராயன் என்ற ஆசிரமம் உள்ளது. மனநலம் பாதித்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை எங்களது சொந்த செலவில் அங்கு அழைத்து செல்கிறோம். அவர்களுக்கு எத்தனை ஆண்டுகளானாலும் சரியாகும் வரை தொடர் சிகிச்சை அளித்து குணமானவுடன் மீண்டும் அவர்களது வீட்டில் விடுகிறோம். இவர்களை ஆசிரமத்தில் சென்று சேர்ப்பது மட்டுமின்றி, அவ்வப்போது காய்கறிகள், அரிசி, மனநலம் பாதித்தவர்களுக்கு உடை என கொடுத்து வருகிறோம். மனநலம் பாதித்து வீடுகளில் இருந்து காணாமல் போய், இந்த ஆசிரமத்தில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் குணமான சிலரை, அவர்களின் சொந்த ஊரைக் கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளோம். சென்ற வாரம், அறந்தாங்கியில் 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சின்னப்பொண்ணு என்ற மனநலம் பாதித்த பெண்ணை, கண்டுபிடித்து அவருடைய மகனிடம் ஒப்படைத்தோம். மனநலம் பாதித்து காணாமல் போய் ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களை அவர்களின் சொந்த முகவரியைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தனி சந்தோசம் உள்ளது, என்றனர். இவர்களை பாராட்ட 9865374576.