எஸ்.பி.பி.,க்கு ஹரிவராசனம் விருது:சபரிமலையில் வழங்கப்பட்டது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எஸ்.பி.பி.,க்கு 'ஹரிவராசனம் விருது':சபரிமலையில் வழங்கப்பட்டது

Added : ஜூன் 21, 2015

சபரிமலை:திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 'ஹரிவராசனம் விருது' பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சபரிமலையில் வழங்கப்பட்டது.சபரிமலையில் ஐயப்பன் பாடல்களை பாடியவர்களுக்கும், சேவை புரிபவர்களுக்கும் தேவசம்போர்டு, கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டார். விருது வழங்கும் விழா சன்னிதானத்தில் நேற்று நடந்தது.ராஜூஆபிரகாம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஆன்டோ ஆன்டனி எம்.பி., முன்னிலை வகித்தார். தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார் விருது வழங்கினார்.
எஸ்.பி.,பாலசுப்ரமணியம் ஏற்புரையில் பேசியதாவது: எனக்கு எத்தனையோ விருதுகள் கிடைத்தாலும், சபரிமலையில் கிடைத்த விருதை பெரிதாக கருதுகிறேன். இறைவனும், பக்தனும் ஒன்று என்பதுதான் சபரிமலையின் தத்துவம். இப்படி ஒரு தத்துவத்தை கொண்ட கோயில் வேறு எங்கும் இல்லை. கடந்த 49 ஆண்டுகளாக நான் ஐயப்பன் பாடல்களை பாடி வருகிறேன். ஆனால் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை. அப்படி வரும்போது விருது கிடைத்துள்ளது. போலீஸ், பட்டாளம் எதுவும் இல்லாத அமைதியான சூழலில் விருது வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஜேசுதாஸ், விஜயன், ஜெயச்சந்திரனுக்கு அடுத்த படியாக இந்த விருது பெற்றது மகிழ்ச்சி. இவ்வாறு பேசினார்.தொடர்ந்து அவர் இரண்டு பாடல்களை பாடினார். தேவசம்போர்டு செயலாளர் ஜோதிலால், உறுப்பினர் குமாரன், சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.இந்த விருதில் ஒரு லட்சம் ரூபாய், நினைவுப்பரிசு, பாராட்டுப்பத்திரம் ஆகியவை இருக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X