சிம்லா:பெண்களுக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் சமூகத்தில் இருந்து போராடி, நாட்டின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியாகி, அஞ்சும் அரா சாதனை புரிந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் லக்னோவின் ஆஜம்கரில் உள்ள, கம்ஹரியா என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சும் அரா. இவரது தந்தை அயூப் ஷேக்; பொறியாளர். சஹாரன்பூரில், தன் பள்ளிப் படிப்பை முடித்த அஞ்சும், லக்னோவில் உள்ள ஒரு பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.
சமூகம் மற்றும் உறவினர்களின் கண்டிப்பை மீறி, தந்தையின் ஆதரவுடன், கடந்த 2011ம் ஆண்டு, ஐ.பி.எஸ்., பயிற்சியை அஞ்சும் முடித்தார். துவக்கத்தில், மணிப்பூர் கேடரில் நியமிக்கப்பட்ட அஞ்சும், பின், சிம்லாவில் ஏ.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
இவரது கணவர் யூனுஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. சிம்லாவில் ஏ.டி.சி.,யாக பணியாற்றும், யூனுஸ், அப்பகுதியில் உள்ள சுரங்க மாபியா கும்பலின் கொலை முயற்சியில் இருந்து தப்பி, அவர்களை ஒழித்துக் கட்டினார்.முஸ்லிம் சமூகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான, மும்பையைச் சேர்ந்த சாரா ரிஸ்வி, 2008ம் ஆண்டு ஐ.பி.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று, குஜராத் போலீசில் பணியாற்றி வருகிறார்.