இருவர் கூடி.... குப்பையில் அள்ளியது பல கோடி!| Dinamalar

இருவர் கூடி.... குப்பையில் அள்ளியது பல கோடி!

Added : ஜூன் 23, 2015
Share
காலை 8.30 மணியாகியும் சூரியக்கதிர்கள், இன்னும் நகரை எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், வழக்கமான பரபரப்புடன், சாலைகளில் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. வாக்கிங், ஜாக்கிங், யோகா, வாட்டர்தெரபி முடித்து, சூடு பறக்கும் 'ஃபில்டர் காஃபி'யுடன் பேப்பரைப் புரட்ட அமர்ந்தாள் சித்ரா.'எனக்கொரு 'காஃபி' கிடைக்குமா?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மித்ரா.''ஹேய்... மித்து...
இருவர் கூடி.... குப்பையில் அள்ளியது பல கோடி!

காலை 8.30 மணியாகியும் சூரியக்கதிர்கள், இன்னும் நகரை எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், வழக்கமான பரபரப்புடன், சாலைகளில் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. வாக்கிங், ஜாக்கிங், யோகா, வாட்டர்தெரபி முடித்து, சூடு பறக்கும் 'ஃபில்டர் காஃபி'யுடன் பேப்பரைப் புரட்ட அமர்ந்தாள் சித்ரா.
'எனக்கொரு 'காஃபி' கிடைக்குமா?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மித்ரா.
''ஹேய்... மித்து... என்னடி காலங்காத்தால இந்தப் பக்கம்?'' என்று வரவேற்ற சித்ரா, ''அம்மா! சூடா இன்னொரு காஃபி...'' என்று ஓட்டல் சர்வர் பாணியில் ஆர்டரிட்டாள்.
''இங்க ஒரு ஸ்கூல்ல, குட்டிப் பசங்களுக்கு, யோகா கிளாஸ் எடுக்கச் சொல்லிக் கூப்பிட்டாங்க. போயிட்டு வர்றேன்'' என்றாள் மித்ரா.
''முதல்ல இந்த டீச்சர்ஸ்க்கெல்லாம் கண்டிப்பா, யோகா கத்துக்கொடுக்கணும். புள்ளைங்ககிட்ட பாரபட்சம் பார்க்காம, எரிஞ்சு விழாம, எப்பிடி கனிவா நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுக்கணும். ஒவ்வொரு ஸ்கூல்லயும் சில டீச்சர்ஸ் பேசுறதையும், நடந்துக்கிறதையும் கேட்டா, அப்பிடியே... நெஞ்சு கொதிக்குது!'' என்றாள் சித்ரா.
''இதுக்கே கொந்தளிச்சா, உக்கடம் குளக்கரை மேட்டரைக் கேட்டா, என்ன பண்ணுவ?''
''மழையில டூவீலர்க்காரங்க வழுக்கி விழுந்ததைச் சொல்றியா? அதான்... இன்னும் அதுக்கு பணம் தரலை. அந்த 'பேவர்ஸ் ப்ளாக்'கை மாத்தப் போறோம்னு கார்ப்பரேஷன் இன்ஜினியர் சொல்லிருக்காரே''
''அண்டப்புளுகு...பணமெல்லாம் 'செட்டில்' பண்ணியாச்சாம். வெளியில தான், 4 கோடியே 95 லட்ச ரூபான்னு சொல்லிட்டு இருக்காங்க. மொத்த 'எஸ்டிமேஷன்' ஆறு கோடிக்குப் பக்கமாப் போயிருச்சாம்'' என்றாள் மித்ரா.
''இந்த கல்லைப் பதிச்சா, வண்டிங்களுக்கு வழுக்கும்கிற விஷயம் கூடவா, இந்த இன்ஜினியர்களுக்குத் தெரியாது. இவுங்கள்ளெல்லாம் படிச்சு பட்டம் வாங்குனாங்களா... பணம் கொடுத்து வாங்குனாங்களா?'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன் இன்ஜினியர்களுக்கு, தொழில் அறிவு வேணும்னா இல்லாம இருக்கலாம். ஊழல் அறிவு நிறையாவே இருக்கு'' என்றாள் மித்ரா.
''கரெக்டா சொன்ன மித்து! சிட்டிக்குள்ள குப்பை அள்ளுற கான்ட்ராக்ட் எடுத்த மும்பை கம்பெனிக்கு 18 கோடி ரூபா 'பில்'லை நிறுத்தி வச்சிருக்காங்க...ஏன் தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''ஆமா...பேப்பர்ல பார்த்தேன். அதுக்கு ஏதோ பேரம் நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்'' என்றாள் மித்ரா.
''அதுவும் ரெண்டு இன்ஜினியர்களோட வேலை தான். இந்த கம்பெனி வந்த புதுசுல நல்லாத்தான் குப்பை அள்ளி, 'லேண்ட் பில்லிங்' எல்லாம் பண்ணிருக்காங்க. அப்பவே, இவுங்க ரெண்டு பேருக்கும், மாசத்துக்கு 7 லட்ச ரூபா 'மாமூல்' கொடுத்திருக்காங்க. அப்புறம்...குப்பை அள்ளுறது, 'ட்ரிப்' அடிக்கிறதெல்லாம் குறைச்சிட்டாங்க''
''வேற யாருமே, இதைப் பத்தி கேள்வி கேக்கலையா?''
''கீழ இருக்கிற இன்ஜினியர்களுக்கு, ஐயாயிரம், பத்தாயிரம்னு கொடுத்துட்டு, மீதியெல்லாம் இந்த இன்ஜினியர் ரெண்டு பேருமே அமுக்கிட்டாங்க. பல வருஷமா, இந்த மாமூல் போயிட்டு இருந்திருக்கு. பழைய கமிஷனர் லதா இருக்கிறப்ப, இதைக் கண்டு பிடிச்சு, அந்த கம்பெனிக்கு 'பில்'லை நிறுத்தி வச்சதோட இல்லாம, ஒரு கோடி ரூபா, 'பைன்' போட்டாங்க. அப்போ இருந்த 'டவுன் டாடி' தான், 'பில்'லை 'செட்டில்' பண்ணுனாரு''
''அவரு, எதுவும் வாங்காம செஞ்சிருக்க மாட்டாரே?''
''அப்பவும், இந்த ரெண்டு இன்ஜினியரும் தான், பேரம் பேசி, 75 லட்ச ரூபாய, அந்த கம்பெனிட்ட வாங்கி, அம்பதை 'டவுன் டாடி'க்கு கொடுத்துட்டு, மீதியை அமுக்கிட்டாங்க. இது தெரிஞ்சு தான், ரெண்டு பேரையும் அவர் 'சஸ்பெண்ட்' பண்ண வச்சாராம்...!'' என்றாள் சித்ரா.
''என்னக்கா... ராம்... லட்சுமணன்னு இழுக்குற. ரெண்டு பேருமே, திரும்ப வந்துட்டாங்களே. இப்போ என்ன ஆச்சு...அதைச் சொல்லு'' என்றாள் மித்ரா.
''நிறுத்தி வச்சிருக்கிற 18 கோடி ரூபா வேணும்னா, ரெண்டு கோடி கேக்குறாங்கன்னு, அதே இன்ஜினியர்க, பேரம் பேசிட்டு இருக்காங்க. இதுலயும் விசேஷம் என்னன்னா...'பில்'லை 'ஓகே' பண்ண வேண்டிய வி.ஐ.பி., கேட்டது ஒரு கோடி ரூபா தானாம்'' என்றாள் சித்ரா.
''என்னக்கா...என்ன கொடுமை சரவணன்'கிற மாதிரி இருக்கு...!''
''உண்மை தான். அதுலயும் ஒரு இன்ஜினியர், கருணை அடிப்படையில, 'போர்மென்' வேலைக்கு வந்துட்டு, எப்பிடி 'ப்ரமோஷன்' வாங்குனாருங்கிறதைப் பத்தி கேட்டா, 'மெர்சல்' ஆயிருவ''
''நம்மூர்ல எந்த டிபார்ட்மென்ட் இன்ஜினியர்க அதிகம் சம்பாதிக்கிறாங்கன்னு ஒரு போட்டியே
வைக்கலாம் போலிருக்கே.
பிடபிள்யூடி இன்ஜினியர்க
சம்பாதிக்கிறது, இதெல்லாம் துாக்கிச் சாப்பிட்டுரும்''
''குளத்துல மண் அள்ளுறதைச் சொல்றியா?''
''அதே தான்...பல குளங்கள்ல மண் அள்ளுறதுக்குக் கொடுத்த காலக்கெடு முடிஞ்ச பிறகும் அள்ள விடுறாங்க. ஒரு லாரிக்கு இவ்வளவுன்னு, 'ட்ரிப்' கணக்குல லஞ்சம் வாங்குறாங்க'' என்றாள் மித்ரா.
''அவுங்க மட்டுமா வாங்குறாங்க...என்.எச்.47 ரோடு வேலைக்கு, மதுக்கரை ஏரியாவுல பட்டா நிலங்கள்ல இருந்து லாரி லாரியா மண் அள்ளுறாங்க. தாசில்தாரு, கலெக்டர் பி.ஏ.,க்குன்னு ஏகப்பட்ட மாமூல் போகுதாம். ஆனா, விவசாயம் பண்றதுக்கு, நிலத்தைச் சரி செய்ய முறைப்படி அனுமதி கேட்டா, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபா லஞ்சம் கேக்குறாராம் அந்த தாசில்தாரு''
என்றாள் சித்ரா.
''அவருக்கும் ஏதாவது அரசியல் 'சக்தி' பின்னணி இருக்கும். நீ லாரின்னு சொன்னதும், எனக்கு பழையபடி, கார்ப்பரேஷன் குப்பை லாரி மேட்டர் ஞாபகம் வந்துச்சு. பல வருஷமா வராத 3 லாரிகள் வந்தும், பயனில்லாமப் போச்சு தெரியுமா...மூணு லாரியும் 'கண்டம்' ஆயிருச்சுன்னு, ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ் சொல்லிட்டாங்க.''
''அப்பிடின்னா...இந்த லாரி வந்துருச்சுன்னு, 'உயர்ந்த மனிதன்' இன்ஜினியரோட 'சஸ்பெண்ட்'டை 'ரிவோக்' பண்ணுனாங்களே. அவர் ஒழுங்கா 'ரிட்டயர்டு' ஆயிருவாரா?''
''உனக்கு அதுல என்ன சந்தேகம்? இப்ப தான், என்ன தப்பு பண்ணி மாட்டுனாலும், ஆளும்கட்சியில யாரையாவது பிடிச்சா தப்பிச்சுரலாமே!'' என்றாள் மித்ரா.
''பாலிடிக்ஸ் பவர் மட்டும் போதாதுடி. பணம் வேணும்...பணம்'' என்றாள் சித்ரா.
அம்மா கொண்டு வந்த 'ஃபில்டர் காஃபி'யை ருசித்துக் கொண்டே, பேப்பரை மேய்ந்து கொண்டிருந்த மித்ரா, ஏதோ ஒரு செய்தியைப் பார்த்து விட்டு, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்.
''அக்கா! சிட்டிக்குள்ள கலெக்டர் அனுமதியில்லாம வச்சிருக்கிற விளம்பரங்களை எல்லாம் எடுக்கிறதுக்கு, ஒரு குழு அமைச்சிருக்காங்களே. அதுல, டிராபிக்ல இருக்கிற முக்கியமான போலீஸ் ஆபீசர் இல்லை...கவனிச்சியா?''
''அவர் தான்...விளம்பர போர்டுகளை எப்பிடியெல்லாம் வைக்கலாம்னு, ரூம் போட்டு யோசிச்சு, லட்சம் லட்சமா சம்பாதிச்சவராச்சே. அவரை எப்பிடி அந்த குழுவுல போடுவாங்க?''
''ரூம் போட்டு யோசிச்சதுன்னு, நீ சொன்னதும் தான், நம்ம ஜி.எச்.ல இருக்கிற பிடபிள்யுடி இன்ஜினியர் ரூம்ல நடக்கிற கூத்து ஞாபகத்துக்கு வந்துச்சு'' என்றாள் சித்ரா.
''அந்த டாக்டர்-இன்ஜினியர் கூட்டணியைச் சொல்றியா?
அது பழைய கதையாச்சே. இன்னமும் அது தொடருதா?'' என்றாள் மித்ரா.
''இப்போ அதே ரூம்ல, பார்ட்டி, ஆட்டம், பாட்டம் எல்லாம் நடக்குதாம். விசேஷம் என்னன்னா, ஜி.எச்.,ல இருக்கிற முக்கியமான தலையும் அதுல கலந்துட்டு 'ஜோ...ரா' ஆட்டம் போடுறாராம்'' என்றாள் சித்ரா.
''அதே ஜி.எச்.ல... புதுசா கட்டிக்கிட்டிருக்கிற கட்டடத்துல, ராத்திரியில 'பலான' வேலையெல்லாம் நடக்குதாம். செக்யூரிட்டிங்க, காசை வாங்கிக்கிட்டு, விட்டுர்றாங்களாம்'' என்றாள் மித்ரா.
''ராத்திரி வசூல்னா, போலீஸ் ஞாபகம் வரும்ல. பி 7 ஸ்டேஷன்ல இருக்கிற ரெண்டு டிராபிக் போலீஸ்காரங்க, டாஸ்மாக்ல இருந்து, தனியா வர்றவுங்களை விரட்டிப்போய், ஆளில்லாத இடத்துல மெரட்டி, ஆயிரம், ரெண்டாயிரம்னு வசூலைப் போடுறாங்க. ஸ்டேஷனுக்கு இதுல
பங்கில்லையாம்'' என்றாள் சித்ரா.
''அதே ஏரியாவுல, ஏ.சி.,ஆபீஸ்ல இருக்கிற ரைட்டரு, நாலு ஸ்டேஷன் போலீஸ்காரங்களை மெரட்டி, காசு புடுங்குறாராமே!'' என்றாள் மித்ரா.
''பீளமேடு ஸ்டேஷன்ல இருக்கிற ரைட்டர் ஒருத்தரோட மெரட்டல், அதை விட ஜாஸ்திங்கிறாங்க'' என்ற சித்ரா, 'மித்து! அஞ்சே நிமிஷம். குளிச்சிட்டு வந்துர்றேன். ரெண்டு பேரும் சாப்பிடலாம்' என்று சொல்லி விட்டு, வேகவேகமாக பாத்ரூமுக்குள் புகுந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X