அன்று சர்வதேச யோகா தினம்! திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சித்ராவும், மித்ராவும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும், ஸ்கூட்டரை மித்ரா ஓட்ட, சித்ரா பின்னால் அமர்ந்து கொண்டாள். புறப்படுவதற்கு முன், இருவரும், "ஹெல்மெட்' அணிந்து கொண்டனர்.
""ஏதாவது ஒரு சினிமாவுக்கு போகலாமா,'' என, சித்ரா கேட்க, ""காக்கா முட்டை நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ஏற்கனவே ரெண்டு டிக்கெட் "ரிசர்வ்' செஞ்சிருக்கேன்,'' என, மித்ரா சொல்லிக்கொண்டிருக்க, சிக்னலில் போலீசார் மறித்து, ஓரங்கட்டினர்.
அதன்பின், "ஹெல்மெட்' அணியாமல் வந்தவர்களையும் ஓரங்கட்டினர். "ஹெல்மெட்' அணிந்து வந்தவர்கள் மூலமாக, அணியாமல் வந்தவர்களுக்கு புதுவிதமா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். என்னமோ ஏதோன்னு பயந்த மித்ரா, துண்டு பிரசுரம் வினியோகித்துவிட்டு, ஸ்கூட்டரை கிளப்பி, அவிநாசி ரோட்டுக்கு திருப்பினாள்.
""பனியன் சிட்டின்னு பெருமை பேசுறோம்; ஆனா, மரியாதை இல்லாம போச்சு,'' என்றாள் சித்ரா.
""அப்படி என்னக்கா நடந்துச்சு? பனியன் அணியறதை யாராவது மரியாதை குறைவா சொன்னாங்களா,'' என, பரிதாபமாக கேட்டாள் மித்ரா.
""ஏற்றுமதியாளர்கள் உறுப்பினரா இருக்கிற, "கிளப்' நம்மூரில் இருக்கு. அங்க, "நெக்' பனியன் அணிந்து வரும் உறுப்பினர்களுக்கு "தடா' போட்டிருக்காங்க. வேட்டிக்கு அனுமதி மறுத்த ஓட்டல் மீது எதிர்ப்பு தெரிவிச்சாங்க; இதுக்கு யாரும் எதுவும் சொல்லாம, அமைதியா இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""மாநகராட்சி அதிகாரிகள் பதறிப்போயிட்டாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""ஏன்? என்னாச்சு?'' என, சித்ரா கேட்க, ""காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி, சத்யா காலனியை சேர்ந்த ஒரு சிறுவன் இறந்தான். மீண்டும் டெங்கு பரவுதோன்னு பயந்துட்டாங்க. விஷயத்தை கேள்விப்பட்டதும், சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு, கோவைக்கு சென்று, சிகிச்சை அளித்த டாக்டர்களை சந்திச்சு விஷயத்தை கேட்டுருக்காங்க. டெங்கு இல்லைன்னு அவுங்க சொன்ன பிறகே, நிம்மதி அடைஞ்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""அதெல்லாம், சரி... மாநகராட்சி அதிகாரி ஒருத்தர், குடிநீர் கனெக்சன் வழங்குறதுக்கு ஏகத்துக்கும் கலெக்சன் அள்ளுறாராமே,'' என, அடுத்த கேள்வியை வீசினாள் சித்ரா.
""ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். பொறியியல் பிரிவில் உயர்பதவியில் உள்ள அதிகாரி அவர். ஒரு இணைப்புக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்கணுமாம். ஒப்பந்ததாரர் ஒருத்தர், 60 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கார். எண்ணிப்பார்த்த அந்த அதிகாரி, ஏகத்துக்கும் கோபம் ஆகிட்டார். சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்துக்கு போன் செய்து, "எவ்வளவு கனெக்சன் கொடுத்திருக்கு; எவ்வளவு கலெக்சன் ஆயிருக்குன்னு கணக்கு பார்த்து, ஷேரை ஒழுங்கா பிரிச்சு அனுப்பு'ன்னு வாட்டியெடுத்துட்டாராம். குழாயில் ஒழுங்கா தண்ணி வருதோ? இல்லையோ? கலெக்சன்ல கல்லா கட்டுறதுலதான், பலரும் குறியா இருக்காங்க,'' என, அழுத்துக் கொண்டாள் மித்ரா.
""புதுசா கலெக்டர் அலுவலகம் கட்டியிருக்காங்களே; இடம் பிடிக்கிறதுக்கும் சிபாரிசுக்கு போறாங்களாமே,'' என சித்ரா இழுத்தாள்.
""அடுத்த மாசம் திறப்பு விழா நடத்தலாம்னு திட்டமிட்டிருக்காங்க. வேலை படுமும்முரமா நடந்துட்டு இருக்கு. மொத்தம், 47 அரசு துறை அலுவலகங்கள் ஒரே கட்டடத்துக்குள் வந்திடும். இதுல, தரைத்தளத்துல இடம் பிடிக்கிறதுக்கு, அந்தந்த துறையை சேர்ந்தவங்க, அமைச்சர் வரைக்கும் சிபாரிசுக்கு போயிருக்காங்க. கலெக்டர் நெனைச்சாலும் இடம் கெடைக்காது; உதவியாளர் மனசு வைச்சா, காரியம் பலிக்கும்னு வருவாய்த்துறைக்காரங்க பேசிக்கிறாங்க,'' என, மித்ரா சொல்லி முடிப்பதற்குள், ""அந்தளவுக்கு, "பவர் புல்' உதவியாளரா, அவர்?'' என சித்ரா மடக்க, ""கலெக்டர் ஆபீஸ் ஆவின் பூத்ல அப்படித்தான் பேசிக்கிறாங்க. கலெக்டர் வேலையை மட்டும் அவர் செய்றார்; சுத்திலும் என்ன நடக்குதுன்னு கவனிக்கமா விட்டுடுறாருன்னு அரசு ஊழியர்கள் புலம்புறாங்க,'' என, மித்ரா கூறி முடிப்பதற்கும், தியேட்டர் வருவதற்கும் சரியாக இருந்தது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE