“உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக” என்ற பிரபல பாடல் வரிகள் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடாக பாடப்பட்டதே! ஆனால், தற்போது சிலர் இதனை தவறாகப் புரிந்துகொண்டு உலகில் உள்ள இயற்கை வளங்களெல்லாம் எனக்காக மட்டும் என நினைத்துக் கொண்டதைப் போலத் தெரிகிறது. இயற்கை அன்னையின் வளங்களை தேவைக்கு அதிகமாக தங்கள் சுயலாபத்திற்காக சுரண்டும் அவலநிலை பல இடங்களிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
சில ஆண்டுகள் வரை பாய்ந்துகொண்டிருந்த பல நதிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. வனங்களும், மண் வளமும், தாது வளமும் சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றன. பல ஆண்டு காலமாக பூமிக்கு அடியில் பல இயற்கை செயல்முறைகளுக்கு உட்பட்டு உருவாகும் கிரானைட் மலைகள் கரையான் அரித்த மண் வீடு போல அரிக்கப்பட்டுக் கிடப்பதை பார்க்க முடிகிறது.
மக்கள் தொகை பெருக்கத்தின் தாக்கம்…
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கும் பாதிப்புக்கு உள்ளாவதற்கும் மக்கள் தொகைப் பெருக்கமும் முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது. மனிதன் ஆற்றோரங்களிலும் இயற்கை சார்ந்த இடங்களிலும் தன் குடியிருப்பை அமைத்தான். மக்கள் தொகைப் பெருக காடுகள் அழிக்கப்பட்டு கான்கிரிட் காடுகள் வளர்ந்தன. இதனால் பல அரிய வன உயிரினங்கள் அடியோடு மறைந்துபோயின.
மக்கள் தொகை பெருகியதன் விளைவாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க ஆழ்துளை கிணறுகள் பெருகியது. ஆற்று மணல் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவே எடுக்கப்பட்டுவிட்டதால், தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொள்ளும் மணல் பரப்புகள் குறைந்து கட்டாந்தரையாக மாறிப்போயுள்ளது. ஓடும் நீர் பிடித்து வைக்கப்படாமல் நேராக கடலை நோக்கி செல்கிறது. இதனால் நிலத்தடி நீர் உயர்வதில்லை.
ஆறுகள், வெறும் ஆறுகளாக மட்டும் இருப்பதல்ல. அவை நம் கலாச்சாரத்தின் சின்னம். தமிழகத்தில் வற்றாமல் ஓடிய சிறு ஆறுகள் பல, இன்று அடியோடு மறைந்து வருகின்றன. செழித்து விளங்கக்கூடிய ஆற்றங்கரையோர விவசாயம் நசிந்து வருகிறது. விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். ஆறுகளைக் காப்பதென்பது தனிமனிதரால் நடவாது என்றாலும், ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்துவிட்டால் நிச்சயம் நடக்கும். எவ்வளவுதான் காவல்களும் சட்டங்களும் போடப்பட்டாலும், மனிதனின் மனம் மாறவில்லையென்றால் இதற்கு தீர்விருக்காது.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்
காடுகள் அழிக்கப்பட்டதால் பூமியின் வெப்பமடைந்து வருவதை விஞ்ஞானம் சுட்டிக்காட்டி வருகிறது. இதற்கு மரங்கள் நடுவதே சரியான தீர்வாக இருக்கும். ஈஷா அறக்கட்டளையானது பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.