கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்கள் அனைத்தும் துார்வாரப்படாமல் உள்ளன. பறவைகள் சரணாலயம் என்ற பெயரில், கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு நீர்நிலைகள் அனைத்தும் அழிந்து வருகின்றன.
நீர்நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீரின் அளவை மேல்மட்டத்திற்கு கொண்டு வரவும், மழைநீரை சேமித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தவும் முன்னுரிமை வழங்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகம் உள்ளது.தமிழக அரசு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து, பொதுமக்களின் சொந்த தேவைக்காகவோ அல்லது பொது நலத்திற்காகவோ, ஒரு வண்டி மண் கூட எடுக்க முடியாத அளவுக்கு அதிகாரிகளாலும், காவல் துறையினராலும் மற்றும் ஆட்சி யாளர்களாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஏரி, குளங்களும் மண்மேடுகளாக காட்சியளிக்கின்றன. பஞ்சாயத்து கட்டுப்பாடுகளின் கீழ் உள்ள சிறிய குளங்கள் மற்றும் குட்டைகள் துார்வாரப்பட்டாலும், அவற்றிற்கு நீரை கொண்டு வரும் இணைப்பு கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன.
பாசன கால்வாய்களே துார்வாரப்படாமல் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இணைப்பு கால்வாய்களை பற்றி சிந்திப்பதில் எவ்வித பலனும் இல்லை.ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலங்களில் ஏரி, குளங்களை துார் வாருவதற்காக அரசால் செலவிடப்படும் தொகை, விழலுக்கு இறைத்த நீராகவே போகின்றன. ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும், ஜே.சி.பி., இயந்திரங்களால் ஏரி, குளங்களில் இருந்து பெயரளவிற்கு எடுக்கப்படும் மண் கூட, ஏரி, குளங்களில் இருந்து வெளியேற்றப்படாமல், ஏரியின் மையப் பகுதிகளிலும் கரை ஓரங்களிலும் குவிக்கப்படுகின்றன.
அவற்றில் கருவேல மரங்கள் வளர்ந்து நீர்நிலைகளில் உள்ள நீரை உறிஞ்சி பசுமை இலைக் காடுகளாக காட்சி தருகின்றன.
ஏரி, குளங்களின் கரைகளில் சுற்றியிருக்கும் மரங்களிலும், காடுகளிலும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்துவந்த பறவைகள், தற்சமயம் வசதியாக ஏரிக்குள் இருக்கும் கருவேல மரங்களிலேயே கூடுகட்டி வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.பறவைகளின் எச்சங்கள் நேரிடையாக தண்ணீரில் கலப்பதும் தெளிந்த நீராக இருந்த ஏரி, குளங்கள் அனைத்தும் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டு, எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்று ஏங்கி தவிக்கின்றன.
நகரங்களின் புறநகர் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருந்த ஏரி, குளங்கள் அனைத்தும் பயனற்றவைகளாக உருமாற்றம் செய்து குப்பை கொட்டும் பகுதிகளாகவும், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு பகுதிகளாகவும், வணிக வளாகங்களாகவும்,
பேருந்து நிலையங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.
சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி போன்றவை, கோடைக்காலங்களில் வறண்டு போகும்போது துார்வார வேண்டும். இந்த அக்கறை, எந்த அரசுக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. செங்கல்பட்டு ஏரி போன்றவை குடிநீருக்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ பயன்படுத்தப்படாமல், கையில் வெண்ணெயை வைத்து நெய்க்கு அலையும் கதையாக வீணடிக்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் இருந்து, இளஞ்செம்பூர் வரை, 6 கி.மீ., துாரத்தில் விரிந்து பரந்து கிடக்கும் கண்மாய், கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படவில்லை. கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதற்கும், சட்ட விரோதமாக விறகுகளை வெட்டி விற்பனை செய்யும் சமூகவிரோத கும்பல்களுக்கும் பயன்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் இந்த கண்மாயில் தேங்கும் நீரை வைத்து, மிளகாய் உற்பத்தி செய்த விவசாயிகள் தற்போது விவசாயம் செய்வதை கைவிட்டு, கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் புகழ்பெற்ற ஏரியான வடுவூர் ஏரியும் துார்வாரப்படாமலே துார்வாரப்பட்டது போல் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன. 20 அடி ஆழத்திற்கு மேல் இருந்த வடுவூர் ஏரி, இன்று 5 அடி ஆழம் கூட இல்லாமல், பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டு விட்டது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் இருந்தும் முறையாக பராமரிக்கப்படாமலும், முழுமையான ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாக்கப்படுவதுடன் அவை இருப்பதால் எவ்வித பயனும் இல்லை.
நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ குடியிருப்பு பகுதிகளாகவும், வணிக வளாகங்களாகவும், புறநகர் பேருந்து நிலையங்களாகவும் மாறுவதற்கு தயாராகி வருகின்றன. மன்னராட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரி, குளங்கள் மக்களாட்சியில் மறைக்கப்படுவதற்கு யார் காரணம்? தமிழகத்தில் விவசாயம் செழித்து, விவசாயி முன்னுக்கு வர வேண்டுமென்றால், தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் துார்வாரப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி அரசின் மீது பழி போடாமல், ஒவ்வொரு கிராமத்திலும் பாசனக்குழுக்களை அமைத்து, தங்கள் கிராமங்களில் உள்ள ஏரி குளங்களை, தாங்களே துார்வாரிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும்.
அதற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுக்க மறுத்தால், பசுமை தீர்ப்பாயத்திலோ அல்லது நீதிமன்றங்களின் மூலமாகவோ அனுமதி பெற போராட வேண்டும். கிராமங்கள் செழித்தால்தான் நாடு செழிப்படையும்.
இ-மெயில்:prabasathiyamoorthi@gmail.com