போலீஸ் காவலில் கைதி மரணம் : உறவினர்கள் வன்முறை; போலீசார் தப்பி ஓட்டம்| Police station attacked : tension in Vellore | Dinamalar

போலீஸ் காவலில் கைதி மரணம் : உறவினர்கள் வன்முறை; போலீசார் தப்பி ஓட்டம்

Added : ஜூன் 28, 2015 | கருத்துகள் (35) | |
வேலூர் : ஆம்பூரில் போலீஸ் காவலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் ஸ்டேஷனை அடித்து நொறுக்கியதுடன், போலீசாரையும் கல்வீசினர். போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டதால், அங்கிருந்த போலீசார் சீருடைகளை களைந்து விட்டு மாறு வேடத்தில் தப்பி ஓடினர். இதனால் ஆம்பூரில் பதற்றம்
police station, attack, vellore, ambur, போலீஸ் ஸ்டேஷன், ஆம்பூர், வேலூர், வன்முறை, தாக்குதல்

வேலூர் : ஆம்பூரில் போலீஸ் காவலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் ஸ்டேஷனை அடித்து நொறுக்கியதுடன், போலீசாரையும் கல்வீசினர். போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டதால், அங்கிருந்த போலீசார் சீருடைகளை களைந்து விட்டு மாறு வேடத்தில் தப்பி ஓடினர். இதனால் ஆம்பூரில் பதற்றம் நிலவுகிறது.


கைதி உயிரிழப்பு :

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. இவர் ஈரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரை ஆம்பூரைச் சேர்ந்த ஜமீல் முகமது என்பவர் கடத்திச் சென்றதாக பழனி, பள்ளிகொண்டான் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜமீல் முகமதுவை கைது செய்து அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ், 5 நாட்கள் காவலில் வைத்து விசாரித்துள்ளார். பின்னர் ஜூன் 19ம் தேதி ஜமீல் முகமது விடுவிக்கப்பட்டுள்ளார். உடலில் காயங்களுடன் இருந்த ஜமீல் முகமது, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


உறவினர்கள் வன்முறை :

போலீசார் அடித்ததாலேயே ஜமீல் முகமது உயிரிழந்ததாக கூறி ஜமீல் முகமதுவின் உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் ஆம்பூர் போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஜமீல் முகமது உயிரிழந்ததற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த எஸ்.பி., செந்தில்குமாரி மீது, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் 2 போலீஸ் ஜீப்கள் உள்ளிட்ட 4 வாகனங்களையும் அவர்கள் தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்ததுடன், கடைக்கு தீ வைத்துள்ளனர்.


போலீசார் தப்பியோட்டம் :

வன்முறையாளர்கள் ஆம்பூர் போலீஸ் ஸ்டேஷனையும் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கிருந்த போலீசார் மாறு வேடத்தில் தப்பி ஓடினர். இந்த கலவரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாந்தகுமாரி உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் காஞ்சிபுரம் அதிரடி படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். படுகாயம் அடைந்த போலீசார் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் காரணமாக ஆம்பூரில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஐ.ஜி., மஞ்சுநாதன் கூறுகையில், தற்போது ஆம்பூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X