மனதை வென்றவனே மாவீரன்

Added : ஜூன் 29, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 மனதை வென்றவனே மாவீரன்

வாழ்வின் நோக்கம் மனிதர்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அமைகிறது. சில நேரங்களில் நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் மற்றும் பெரும்பாலான மக்கள் எதை நாடிச் செல்கிறார்களோ அதையே நம்முடைய நோக்கமாக கருதி பின் தொடர்கிறோம். கர்ம வினைகள் கூட நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.ஆனால் மனிதன், இவற்றையெல்லாம் கடந்து சுயமாக சிந்தித்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து மேன்மையான பாதையை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் படைத்தவன்.படைப்பின் நாகரிகப் பரிமாணம் மட்டுமே மனிதன் கிடையாது. தனக்குள் புதைந்து கிடக்கும் ஒட்டுமொத்த தெய்வீக ஆற்றல்களையும் வெளிப்படுத்தக் கூடிய அற்புதத் திறனுடையவன். ஆகவே தான் அவ்வாற்றல் உடையவனை மறை நுால்கள் 'தீரன்' என்கிறது. 'தீனன்' என்றால் பலவீனன். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'உண்டு, உறங்கி, பிறர் போல் வாழ்ந்து மடியும் 'வேடிக்கை மனிதன்''.அரிய மனிதப்பிறவி 'மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்கிறோம். காரணம்? வினைத் தளைகளை வேரோடு நீக்கும் மர்மம் மனிதனுக்குள் புதைந்துள்ளது. 'என்னை நடத்துவது என் வினையே' என நொந்து வீழும் நிலை அவனுக்கில்லை. இந்த மாபெரும் பாடத்தை போர்களத்தில் கண்ணபிரானிடம் கற்றான் அர்ஜூனன்.'எல்லாம் என் வினை, இனி செய்வதற்கு ஏதுமில்லை' என தளர்ந்தவனை, பார் வியக்க செய்த பெருமை பரந்தாமனுக்கு உண்டு.மனம் பதைத்து மதியிழந்தோனின் தோள் தொட்டு ''காலத்திற்கு ஒவ்வாத கண்ணியமற்ற, சற்றும் பொருந்தாத மனநிலை உனக்கு எங்கிருந்து வந்தது. கேடானதும், புகழை அழிப்பதுமான இந்த ஆண்மையற்ற தன்மையை அடையாதே! இழிவான மனத்தளர்ச்சியை உதறிவிட்டு எழுந்து நில்! உண்மை உணர்! நீ அழிவற்றவன்! நித்தியமானவன்'' என்றான் கண்ணன்.''உறுதி பூண்டவனாய் செயல்படாவிட்டால் மக்கள் என்றைக்கும் உன்னைப்பற்றி அவதுாறு சொல்வார்கள். நன்மதிப்பை பெற்றவனுக்கு இகழ்ச்சியை காட்டிலும் இறப்பே மேலாகும். இன்பம், துன்பம் லாபம், நஷ்டம் வெற்றி, தோல்வி இவற்றை சமமாக பாவித்து போர் (கடமை) செய். அறியாமையால் நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் சந்தேகங்களை ஞான வாளால் அறுத்துவிடு' என்றார்.எனவே மனதை வென்றவனே மாவீரன். புறப் பொருட்களை நாடிச் செல்லும் புலங்களை மனதால் நிறுத்துவதே யோகம். கட்டுப்படாத மனம் மனிதனுக்கு நிரந்தரப் பகையே! மனம் அலைபாயக்கூடாது. மனதை புத்தியால் தேய்த்து, கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். புலங்களை காட்டிலும் மனம் உயர்வானது. மனதை காட்டிலும் நம் புத்தி உயர்ந்தது.மனித குலத்திற்கு அர்ஜூனனை மையமாக வைத்து கண்ணன் உரைத்த உண்மையிது. ''உன்னை நீயே உயர்த்திக்கொள். உன்னை நீ ஒரு பொழுதும் தாழ்த்திக் கொள்ளாதே. உன்னுடைய மனமே உனக்கு உற்ற நண்பன். உன் மனமே உனக்கு பரம எதிரி''.திருமூலரின் மந்திரம் "மனத்திடை நின்ற மதிவாள் உருவி, இனத்திடை நீக்கி இரண்டற வீரத்து" என்பார் திருமூலர். 'இனத்திடை நீக்கி' என்பது மனதை புலன் வழிப்போகாது காத்தல் என்பதாகும்.செயல்கள் வெறும் உடலால் மட்டும் செய்யப்படுவதில்லை. அதன் பின்னணியில் சக்தி வாய்ந்த மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்த எண்ணங்களை மனதில் விதைக்கின்றோமோ அதை செயல்படுத்தும் ஆற்றல் மனதுக்கு உண்டு. ஆகவே நாம் எண்ணங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒப்பில்லாத தரத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். தனி மனிதனுடைய தரம் சமுதாயத்தில் பிரதிபலித்து நல்ல தாக்கத்தை உண்டாக்கும். மேன்மக்கள் எதை நடத்தையாகக் கொள்கிறார்களோ அதையே மற்ற மனிதர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் உண்மையாகக் கூறுவதை உலகம் பின்பற்றுகிறது. 'நல்ல மனிதர்களே பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குகின்றனர்' என்கிறது கீதை.வாழ்க்கை போர்க்களம் வாழ்க்கை ஒரு போர்க்களமே. வாழ்ந்து காட்டியோரின் வழிகாட்டுதல் இல்லாது வெல்ல முடியாது. மண்ணோடு போவதற்கல்ல மனிதப் பிறவி. மண் மீது நின்று தன்னலமற்று பணி செய்து விண்ணோரையும் வியக்கச் செய்வதற்கே இந்த பிறவி! இதுவே வாழ்வின் நோக்கம். கல்வி, செல்வம், பெயர், புகழ் அனைத்தும் ஓர் எல்லைக்குள் அடங்கிவிடும். அவை குணங்களின் வெளிப்பாட்டுக் கவர்ச்சி மட்டுமே. மரியாதைக்குரியதாக இருக்கலாம். ஆனால் அவை என்றென்றும் மாற்றங்களின் வசப்பட்டே நிற்கிறது. ஆகவே அவற்றில் உண்மையில்லை. "உண்மை என்றும் மாறாதது. பொய்மைக்கோ நிரந்தர இருப்பில்லை. இவ்விரண்டின் தன்மை அறிந்தோரே உண்மை உணர்ந்தோர்".நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறிவு ஆண்மை கடை - வள்ளுவர்.ஆகவே நிலையான ஒன்றை நாடுவதை, தேடுவதை உயர் லட்சியமாக கொண்டு வாழ்ந்தோரும், வாழ்வோரும் உண்டு; அந்த தேடலே ஆன்மிகம். 'வித்தைகளில் நான் ஆன்ம வித்தை' என்கிறான் கண்ணன். தேடல் உள்ளோரும், தெளிய விரும்புவோரும் விரைந்து நாடும் வீர வித்தை. இப்பயணத்திற்கு தன்னை ஒருவன் நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சிந்தை செம்மையாகப் பக்குவப்பட வேண்டும். ஆர்வம் மட்டும் போதாது. அது ஊக்கமாக உயர வேண்டும். ஊக்கம் உயர லட்சியத்தில் ஈடுபாடு வேண்டும். சோம்பேறித்தனத்தையும், பலவீனத்தையும் துறந்து விட வேண்டும்.'Hasten slowly' என்று ஆங்கிலத்தில் மிக அழகாகக் கூறுவார் சுவாமி சின்மயானந்தர். நமது வாழ்க்கை பயணம் துரிதமாக, நிதானமாக, துாய்மையாக, புனிதமாக தொடர வேண்டும். இதனால் வாழ்வின் நோக்கத்தை அடையலாம்.- சுவாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன், மதுரை. 94431 94012. chinmayameenakshi@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thailam Govindarasu - Manama,பஹ்ரைன்
29-ஜூன்-201519:09:20 IST Report Abuse
Thailam Govindarasu மனதுக்கு ஒரு நல்ல மருந்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X