விளையாட மறந்த விளையாட்டுக்கள்| Dinamalar

விளையாட மறந்த விளையாட்டுக்கள்

Updated : ஜூன் 30, 2015 | Added : ஜூன் 30, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விளையாட மறந்த விளையாட்டுக்கள்

''ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பாகூடி விளையாடு பாப்பா- ஒரு குழந்தையை வையாதே பாப்பாகாலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா'' என பாரதியார், குழந்தைகள் தங்களை எவ்வாறு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தன் இனிய பாடல் மூலம் கூறுகிறார்.
விளையாட்டின் முக்கியத்துவத்தோடு, ஒற்றுமை, படிப்பு, சுறுசுறுப்பு போன்ற பண்புகளையும் எடுத்துக் கூறி உள்ளார். விளையாட்டுக்கள் ஓர் இனத்தின் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது.இது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறது. குழந்தைகளிடம் சகோதரத்துவத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்க்கிறது. கிராமங்களில் இரவு நேரங்களில் தெருவில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி தங்களின் பெற்றோர்கள் முன்னிலையில் அம்மானை. குலைகுலையா முந்திரிக்காய், பூப்பறிக்க வருகிறோம். திரித்திரிப் பொம்மக்கா போன்ற விளையாட்டுக்களை விளையாடும் போது மகிழ்ந்தவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல அவர்தம் பெற்றோர்களும் தான். அன்றைய விளையாட்டுகள் அன்று நாம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களாகிய பம்பரம், கிட்டிப்புள், பச்சைக்குதிரை, கபடி, கோலிக்குண்டு, செதுக்கு முத்து, திருடன் போலீஸ், கிளித்தட்டு, காற்றாடு, பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் எங்கே போயின? பெண் குழந்தைகள் குதுாகலமாக விளையாடிய நொண்டி, தட்டாங்கல், தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பூப்பறித்தல், கரகரவண்டி, ஊஞ்சல் போன்ற விளையாட்டுக்கள் போன இடம் எங்கே? இன்று கிராமங்களில் கூட இவ்விளையாட்டுகளை காணமுடியவில்லை. வெறுமனே மேம்போக்காக நேரத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடப்பட்டவை அல்ல இவை. உடல் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் குழந்தைகளின் சிந்தனைத் திறனையும், சமயோஜிதப் புத்தியையும் வளர்க்கும் விதத்தில் தான் இருந்தன. எடுத்துக்காட்டாக ஆண்கள் விளையாடும் கபடியை எடுத்துக் கொண்டால் அது கண்களுக்கு பயிற்சி, மூச்சுப் பயிற்சி, கை, கால் தசைகளுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக உள்ளது. பெண் குழந்தைகள் விளையாடும் தட்டாங்கல்லை எடுத்துக் கொண்டால் கைவிரல்களுக்கும், கண்களுக்கும் நாம் கொடுக்கும் பயிற்சியாகவே இருக்கிறது.மண்ணில் விளையாடட்டும் குழந்தைகளை மண்ணில் விளையாடவிடுங்கள், அப்போதுதான் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி கூடும் என அமெரிக்க ஆராய்ச்சி கூறுகிறது. நாம் குழந்தைகளை மண்ணில் இறங்கி விளையாட விடுவதில்லை. குழந்தைகளின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, அலைபேசியில் சேட்டிங் செய்வது என்றாகி விட்டது. இதன் விளைவாக ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகளின் அதிக எடை, மெலிந்த தேகம், கண்பார்வை நோய், சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு முக்கியக் காரணம் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது தான். மன இறுக்கத்திற்கும் இதுவே காரணம் .முற்காலங்களில் திருவிழா நேரங்களில் கிராமங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல், கபடி மற்றும் கைப்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி குழந்தைகளிடையே விளையாட்டு மனப்பான்மையை வளர்த்தார்கள். ஆனால் இன்றோ திருவிழாக் காலங்களில் கிராமங்களில் திரைப்பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர். வீரவிளையாட்டுகள் நமது கிராமங்களுக்கே உரிய வீரவிளையாட்டுகளாகிய சிலம்பம், ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல் துாக்குதல், மற்போரிடல், நீரில் மூழ்கி மண் எடுத்தல், ஏறு தழுவுதல் போன்றவை போன இடம் தெரியவில்லை. இவற்றுக்கான காரணங்களை ஆராய்வோமேயானால் நம் முன்னே நிற்பது நாம் மறந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை. பழக்கப்படுத்திக் கொண்ட இயந்திர வாழ்க்கை, கிராமங்களை மறந்து நகரத்துக்கு வந்தது, பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயான உறவில் தொய்வு மற்றும் அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றைக் கூறலாம். இன்றைய தினம் விளையாட விளையாட்டுக்கள் இல்லையா? குழந்தைகள் விளையாடவில்லையா? என கேட்கலாம். அன்று நாம் விளையாடிய கிட்டிப்புள் தான் இன்று கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அன்று நாம் விளையாடிய தாயம், ஆடுபுலியாட்டம் தான் இன்று செஸ் ஆக மாறியுள்ளது. இன்றைய விளையாட்டுக்கள் அனைத்தும் பணம் சார்ந்ததாகவும் (உபகரணங்களுக்கு ஆகும் செலவு), பிறர் உதவி சார்ந்ததாகவும் (பயிற்சியாளர்) இன்னும் சொல்லப்போனால் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டுக்களாகவே உள்ளன. நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இது எட்டாக்கனியாகவே உள்ளது.எனவே பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டியது நமக்குத் தெரிந்த, நம் மூத்தோர்கள் அறிந்த பல அழிந்துபோன விளையாட்டுக்களை நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நாமும் நமது குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும். விழாக்காலங்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளில் உறவினர்களையும், குழந்தைகளையும் சந்திக்கும் போது நாம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களை விளையாடச் சொல்லி மகிழலாம். இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெருகுவதோடு, உள்ளமும் பண்படும். சகோதரத்துவம் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும். குழந்தைகளின் மன இறுக்கம் அகலும். பெற்றோர், குழந்தைகள் மற்றும் அண்டை அயலாருடன் நட்புறவு ஓங்கும். மொத்ததில் நல்ல பண்புள்ள மாண்புமிக்க மனிதனாக ஒவ்வொரு குழந்தைகளும் உருவெடுப்பர். இது நமது வீட்டிற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.-முனைவர் எஸ்.கணேசன்,பொருளியல் துறைத் தலைவர். அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி சிவகாசி. 98650 48554.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAIRAJ - CHENNAI,இந்தியா
30-ஜூன்-201508:20:25 IST Report Abuse
JAIRAJ இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனால்,அதே நேரத்தில் இந்த சாட்டிலைட் வரவுகள் அறவே ஒழிந்து விட்டால், மூடிய கதவு திறக்கும். மந்தை மாடுகள் அங்குதான் சென்று முதலிலிருந்து ஆரம்பிக்கும். சுகம் கண்ட நாம் சுகத்தை இழக்கத் தயாரில்லை. கான்க்ரீட் கனவுகள் அதிகமாக, ஏ சீ குளிரில் இதம் கண்ட நாம், கயிற்றுக் கட்டிலில் படுத்து வேப்பமரக் காற்றை சுத்தமாக சுவாசிக்க விருப்பப் படவில்லை. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு நேரமும் கிடைபதில்லை. தேவையற்ற படிப்புச் சுமைதான். கோடை விடுமுறையிலும், வெயிலில் மண்டை காய்ந்து பள்ளி செல்லும் குழந்தைகளை கண்டால் வேதனைதான் மிஞ்சும். ( ஆனால், அதே நேரத்தில் கடும் வெய்யிலில் அலைந்து விளையாடப் போவார்கள். அதுதான் சிறுவர்களின் விருப்பம். நாமும் அங்கிருந்து மேலே எழும்பியவர்கள் தானே ) இது போன்ற கட்டுரைகள் இடத்தை நிரப்பவும் சன்மானம் பெறவும் தான் உதவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X