வேலுார் : ஆம்பூரில் கலவரத்தின்போது, கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பெண் போலீஸ் ஒருவர், 2 கி.மீ., துாரம் ஓடி, உயிர் பிழைத்துள்ள தகவல், வெளியாகி உள்ளது.
வேலுார் மாவட்டம், ஆம்பூரில், வாலிபர் ஒருவர், மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கடந்த மாதம், 27ம் தேதி இரவு, பெரிய அளவிற்கு கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.
ஆம்பூர் ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார், 34, கால், தொடை, வயிறு, கழுத்து, தொண்டை, கை மற்றும் தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
கலவரம் குறித்து, விஜயகுமார் கூறியதாவது:
சம்பவம் நடந்த, 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ஆம்பூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, 300க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள், என்னை சூழ்ந்து, கத்தியால்சரமாரியாக குத்தினர்.
சரமாரியாக தாக்கினர்
அப்போது, அங்கு வந்த, இரண்டு பெண் போலீசாரையும் அடித்து உதைத்தனர். அவர்கள், உயிர் பிழைக்க தப்பி ஓடிய போதும், கலவர கும்பல் அவர்களை துரத்திச் சென்று தாக்கியது. இதை பார்த்த நான், படுகாயத்துடன் இருந்தாலும், அந்த பெண் போலீசாரை காப்பாற்ற போராடினேன். இதனால், கலவர கும்பல், என்னை கற்களாலும், தடியாலும் தாக்கினர். அப்போது, ஒரு கும்பல் வந்து, 'இது எங்கள் கோட்டை; நீங்கள் எப்படி, இங்கு வரலாம்' எனக்கூறி தாக்கினர். அதன்பின், பாதுகாப்புக்கு வந்த, போலீசார் எங்களை மீட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
காரை மடக்கி...
காஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த மல்லிகா கூறியதாவது:
ஆம்பூரில் கலவரம் நடக்கும் போது, கற்களால் தாக்கியவர்களை, சக போலீசாருடன் சேர்ந்து விரட்டினேன். இதை பார்த்த ஒரு கும்பல், என்னை தடியால் தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிக்க, 2 கி.மீ., துாரம் ஓடி, வழியில் வந்த காரை மடக்கி, அதில் ஏறி உயிர் தப்பினேன்.
கண்ணில் பட்ட போலீசாரை எல்லாம், கலவர கும்பல் சரமாரியாக தாக்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது:
என் சர்வீசில், நிறைய கலவரங்களை பார்த்திருக்கிறேன். கலவரம் செய்பவர்களை தடியால் அடித்தால், பயந்து ஓடுவர். அதைப் போலத்தான், இந்த கலவரத்தை நினைத்தேன். ஆனால், கலவரம் செய்தவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் எங்களை விரட்டினர். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஓட ஓட விரட்டி...
இதனால், கலவர கும்பல், எங்களை ஓட ஓட விரட்டி தாக்கினர்; நாங்களும் அடி வாங்கிக் கொண்டு, திரும்ப ஓடி வந்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலவரத்தை அடக்குவதற்காக, வேலுார், தி.மலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், ஆம்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி, ஆம்பூர் சென்றவர்களில், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான, 50க்கும் மேற்பட்ட போலீசாரில், இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது.
'ஆம்பூர் கலவரத்தில் தவறு நடந்து விட்டது'
ஆம்பூர் கலவரத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெறும் போலீசாரிடம், மனித நேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா மன்னிப்பு கேட்டார். ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை, மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ஜவாஹிருல்லா, நேற்று பார்வையிட்டார். கலவர கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் பெண் போலீசார், கோபமாக, ஜவாஹிருல்லாவைப் பார்த்து, 'பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர். கத்தியால் வெட்டினர்; தடியால் அடித்தனர்; கற்களால் தாக்கினர். ஒரு பெண் போலீசின் சட்டையை கிழித்துள்ளனர்; இதெல்லாம் நியாயமா' என, ஆவேசமாக கேட்டனர்.
தவறு நடந்துவிட்டது இதை கேட்ட, ஜவாஹிருல்லா, 'தவறு நடந்து விட்டது; நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, சிகிச்சை பெறும் ஒவ்வொரு போலீசாரிடமும் சென்று, மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பின், அவர், நிருபர்களிடம்கூறியதாவது:
ஜமில் அகமது மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் பிரேம்ராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆம்பூரில் நடந்த கலவரத்தை, சில விஷமிகள் முன்னின்று நடத்தியுள்ளனர். கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர்.
அவப்பெயரை ஏற்படுத்த சதி தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படுவதையே விரும்புகிறது. அரசிடம், எங்கள் கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தி தர, சிலர் முயற்சிக்கின்றனர். கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர்; அவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கலவரத்தின் போது, ஆம்பூர் எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தார். அவரை கலவர வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடுப்போம். கலவரத்திற்கு முன், போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தில், பெண் போலீசார் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு, அவர் கூறினார். எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர் சுகூர் உட்பட பலர் உடனிருந்தனர்.
-- நமது நிருபர் குழு -
ஆம்பூரில் நடந்தது கலவரம் என்பதை விட, போர்க்களம் என்றே சொல்ல வேண்டும்.
கலவரக்காரர்கள், கத்தி, கற்கள், தடியால் தாக்கினர். அவர்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால், ஒரு போலீஸ்காரர் கூட, உயிருடன் வீடு திரும்பி இருக்க முடியாது.
இருதயராஜ், போலீஸ்காரர், காஞ்சிபுரம்.
113 பேர் கைது
ஆம்பூர் கலவரம் தொடர்பாக, இதுவரை, 113 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் நடந்தபோது, ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த ஜீப், ஆம்பூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஆகியவற்றை, கலவர கும்பல், தீ வைத்து கொளுத்தியது. இது தொடர்பாக, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்பூர் கே.எம்.நகரைச் சேர்ந்த கயம், 20, அக்பர், 23, சபீர், 26, சலீம், 22, ஆகிய, நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.
பவித்ராவை தேடுகிறது தனிப்படை!
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த,குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா, 23, காணாமல் போனது தொடர்பாக, அவரது கணவர் பழனி கொடுத்த புகாரின்படி, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, ஆம்பூர், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஷமில் அகமது, 26, என்பவரை, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், கடந்த மாதம், 15ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, ஷமில் அகமதுவை, போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த அவர், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த மாதம், 26ம் தேதி இறந்தார். மறுநாள், 27ம் தேதி, ஆம்பூரில் கலவரம் வெடித்தது.
வழக்கில் சம்பந்தப்பட்ட பவித்ரா, எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. இவரை தேடும் பணியில், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், கோவிந்த சாமி தலைமையில், இரு தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், பவித்ராவின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பஸ் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில், பவித்ரா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.