ஏட்டில் முடங்கும் தாலாட்டு | Dinamalar

ஏட்டில் முடங்கும் தாலாட்டு

Added : ஜூலை 02, 2015 | கருத்துகள் (2)
ஏட்டில் முடங்கும் தாலாட்டு

'கடன்காரன் வந்தால்கலங்காத நெஞ்சம்கை மீது பிள்ளைஅழுதாலே அஞ்சும்'என்று பாட்டு உண்டு. அழுகிற குழந்தையை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. மூன்று வேளை நல்ல உணவு கொடுத்து, நல்ல சம்பளமும் கொடுத்து, பிள்ளையை மட்டும் பார்த்து கொள்ள ஆள் தேடுவோமானால், இன்றைய சூழலில் இந்த பணிக்கு ஆள் கிடைப்பது அரிது. இந்த மாதிரி ஒரு பணிக்கு ஆள் கேட்டோமானால், அவர்கள் சொல்வது “பிள்ளை எடுத்து சாப்பிடுவதற்கு, பிச்சை எடுத்து சாப்பிடலாம்” என்கிறார்கள். பொழுதுக்கும் குழந்தையை பார்த்து கொள்வது, அதுவும் இந்த காலத்து குழந்தைகளை பார்த்து கொள்வது என்பது சிரமமான பணி.அழும் குழந்தையை சமாதானம் செய்வது என்பது ஒரு கலை. குழந்தை எதற்கு அழுகிறது என்று அதற்கு சொல்ல தெரியாது. இதற்காகத்தான் அழுகிறது என்று நம்மாலும் அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும், ஒரு உத்தேசமாக, இதற்குத்தான் அழுகிறது என்று ஒரு தாயால் ஊகிக்க முடியும். பாலுாட்ட நேரமில்லை அழும் குழந்தையை துாங்க வைக்க ஒரு அருமையான அணுகுமுறை, தாலாட்டு பாடி துாங்க வைப்பது. இந்த காலத்து தாய்மார்களுக்கு “பாலுாட்டவே” நேரமில்லாத போது, “தாலாட்டு” எங்கே பாடப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா. அதிலும் எத்தனை தாய்மார்களுக்கு 'தாலாட்டு' என்று ஒன்று இருப்பதாக தெரியும். 'தாலாட்டு' ஒரு அருமையான சொல்.நல்ல தமிழ் சொற்களால் தாலாட்டை பாடும்போது, குழந்தை அதைக்கேட்டு ஒரு மயக்க நிலைக்கு வந்து துாங்கி விடுகிறது. இனி குறைந்தது இரண்டு மணி நேரத்திற்காவது கவலை இல்லை, என நிம்மதி பெருமூச்சு விடும் தாய்மார்கள் எத்தனை பேர். தாலாட்டின் வாயிலாக ராமர் கதை, சொக்கர் மீனாட்சி கதை, முருகன் வள்ளியை மணந்த கதை, தாய்வீட்டு பெருமை, புகுந்த வீட்டு பெருமை, கணவனின் பெருமை என எவ்வளவோ தகவல்களை, அந்த தாய் சொல்லி, சொல்லி பாடுகிறாள். தாலாட்டை கேட்டதால் பின் காலத்தில் உருவான கவிஞர்கள் எத்தனையோ பேர், தமிழ்பால் பற்று கொண்டவர்கள் பல பேர். கணவன் -மனைவி உறவு தாலாட்டு குழந்தையை துாங்க வைக்க மட்டும் செய்வதில்லை. கணவன், மனைவி பிணக்கை கூட சரி செய்கிற ஆற்றல், தாலாட்டாய் வரும் தமிழுக்கு உண்டு. கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்படுகின்றது. மூன்று நாட்கள் முழுதாய் முடிந்து விட்டது. அவர்கள் இன்னும் சமாதானம் ஆகவில்லை. கணவனும் மனைவியும் எப்படி சமாதானம் ஆவது, என்று சிந்தனை வயப்பட்டு இருந்தனர். பின் இரவு நேரம் குழந்தை அழுகிறது. மனைவி தாலாட்டு பாடுகிறார்.''ஆராரோ ஆரிரரோ - என் கண்ணேஆராரோ ஆரிரரோஆரடித்தார் ஏனழுதாய்கண்ணே என் கண்மணியேஅடித்தாரை சொல்லியழுவிளக்கிலிட்ட வெண்ணையை போல்வெந்துருகி நிற்கையிலேகலத்திலிட்ட சோறது போல்கண் கலக்கந்தீர்த்தாயேகொப்புக் கனியேகோதுபடா மாங்கனியேவம்புக் கழுதா யோவாயெல்லாம் பால்வடியமாமன் அடித்தானோமல்லி கைப்பூச் செண்டாலேஅத்தை அடித்தாளோஅல்லி மலர்ச் செண்டாலேஅடித்தாரை சொல்லியழுஆக்கினைகள் செய்து வைப்போம்தொட்டாரை சொல்லியழுதோள் விலங்கு போட்டு வைப்போம்வெண்ணையால் விலங்கு பண்ணிவெய்யிலிலே போட்டு வைப்போம்மண்ணினால் விலங்கு பண்ணிதண்ணீரிலே போட்டு வைப்போம்''எனப்பாடி தொடரும்போது''ஆரும் அடிக்கவில்லைஐவிரலும் தீண்டவில்லைதானா அழுகின்றான்தம்பி துணை வேணுமென்றுஅவனா அழுகின்றான்தங்கை துணைவேணுமென்று''என்று முடிக்கின்றாள்.இந்த தாலாட்டை கேட்டதும் முற்றத்தில் படுத்து இருந்த கணவன், வீட்டுக்குள் வந்து விடுகின்றான். அங்கே குழந்தையும் துாங்கிவிட்டது. கணவன், மனைவி சமாதானமும் ஆனது. மனதுகள் சங்கமமும் ஆனது. -மாமியார் --மருமகள் மாமியார் ஒருவர் தன் மருமகளை எப்பவும் உன் அப்பன் வீட்டில் இருந்து என்ன பெரிசா கொண்டு வந்து விட்டாய் என்று நிந்தித்து கொண்டே இருப்பாள். மருமகள் கொண்டு வந்து இருந்தாலும், மாமியார் கண்களுக்கு அவை போதவில்லை. அது கண்ணின் குற்றமல்ல பார்வைக்கோளாறு. மருமகள் பாடுகிறார்.'போட்டு விளையாடப் பொன்னாலே அம்மானைவைத்து விளையாட வைர கிலுகிலுப்பைகட்டி விளையாடகாசிச் சிண்டுமணிஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டிநெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடிகாலுக்கு தண்டை கைக்கு கணையாழிகொண்டு வந்து தருவார்கள் -கோதை கிளிக்கு அம்மான்மார்சங்கினால் பால் கொடுத்தால்சந்தணர்வாய் நோகுமென்றுதங்கத்தினால் சங்கு செய்துதருவார்கள் தாய்மாமன் - என்றும்மாடுகட்டி போரடித்தால்மாளாது சென் நெல் என்றுயானை கட்டி போரடிக்கும்அம்மான்மார் சீமையிலே'- என்றும்தான் பிறந்த வீட்டு பெருமையை தாலாட்டாய் பாடுகின்றார்கள். இப்பாடலை கேட்டு குழந்தை அமைதியானதோ இல்லையோ, மாமியார் அமைதியானார்.இன்னொரு தாலாட்டு பாட்டில்...'ஆராரோ ஆரிரரோராமருக்கோ பஞ்சு மெத்தைபஞ்சுமெத்தை மேலிருந்து - ராமர்பஞ்சாங்கம் பார்க்கையிலேவயது நுாறென்று சொல்லிவாசித்தார் பஞ்சாங்கம்எழுத்து நுாறென்று சொல்லிஎழுதினார் பஞ்சாங்கம்'என்று தன் பிள்ளை நுாற்றாண்டு காலம் வாழ வேண்டும் என பாடுகின்றாள். திரும்ப,திரும்ப, தன் பிள்ளையை உயர்த்தியும்,வாழ்த்தியும் பாடுவதால் குழந்தைக்கு தாயின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கின்றது. நேயர் விருப்பம் போல் சில பிள்ளைகள் தான் விரும்பும் தாலாட்டு பாடலை, தாயை பாடச் சொல்லி கேட்கும்.பரம்பரை, பரம்பரையாக செவி வழியாக வாழ்ந்து வந்த தாலாட்டு இன்றைய தலைமுறைகளின், செவிகளில் விழாமலே போய்விட்டது பரிதாபம். பாரம்பரியமிக்க பல தாலாட்டு பாடல்கள் காலப்போக்கில் அழிந்து தாலாட்டு என்று ஒன்று இருந்ததா? என கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தாய்மார்களே பிள்ளைகளுக்கு தாய்ப்பாலும் ஊட்டுங்கள், கூடவே தாலாட்டும் பாடுங்கள்.- பி.சுப்பிரமணியன்,வங்கி மேலாளர் (ஓய்வு)காரைக்குடி. 94431 22045.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X