சேலம்:தபாலை பட்டுவாடா செய்யாமல், அலட்சிய போக்கை கையாண்ட, தி புரபொஷனல் கூரியர் நிறுவனம், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, ரூ. 2.54 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி, தேசிய நுகர்வோர் குறைதீர் மையம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி, 60. இவர், கடந்த 2008ல், சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது மகனின் மருத்துவ அறிக்கை தபாலுக்கான கட்டணத்தை பெற்று கொண்டு, "தி புரபொஷனல்' என்ற தனியார் கூரியர் நிறுவனம், அந்த தபாலை பட்டுவாடா செய்யாமல், சேவை குறைபாடு செய்துவிட்டதாக என குறிப்பிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட கலியமூர்த்திக்கு, சேவைகுறைபாடு செய்த தனியார் கூரியர் நிறுவனம், நஷ்ட ஈடாக ரூ. 1.90 லட்சம் மற்றும் வழக்கு செலவாக 1,000 ரூபாய் வழங்கும்படி, 2008, ஏப்.,29ல், நீதிமன்றம் தீர்ப்பளித்தது.எனினும், நீதிமன்ற தீர்ப்பை, கூரியர் நிறுவனம் ஏற்கவில்லை. கலியமூர்த்தி, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், மேல் முறையீடு செய்தார். இந்நிலையில், மனுதாரர் தரப்பில், சரிவர யாரும் ஆஜராகவில்லையென கூறி, 2011, ஜூன் 29ல், மனுவை தள்ளுபடி செய்து, மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து, டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் குறைதீர் மையத்தில், மேல்முறையீடு செய்தார். விசாரணைக்கு பின், நீதிபதி குப்தா, மைய உறுப்பினர் சுரேஷ்சந்திரா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கீழமை நீதிமன்றம் விதித்த ரூ. 1.90 லட்சம் நஷ்டஈடு தொகையை, 1,260 நாட்களாக வழங்காமல், தாமதப்படுத்தியதால், அத்தொகையை 9 சதவீத வட்டியுடன், வழக்கு செலவாக 5,000 ரூபாய் சேர்த்து, மொத்தமாக ரூ. 2.54 லட்சத்தை, வரும், 24ம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட கலியமூர்த்திக்குவழங்க வேண்டும் என, சேலம், கந்தம்பட்டி பைபாஸில் உள்ள கூரியர் நிறுவன பொதுமேலாளருக்கு உத்திரவிட்டு, தீர்ப்பளித்துள்ளது.