வேலூர்: செம்மரக் கடத்தல் வழக்கில், கலால் டி.எஸ்.பி., ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆம்பூர் அடுத்த, பாலூரைச் சேர்ந்த, பா.ம.க., பிரமுகர் சின்ன பையன், செம்மரக் கட்டை கடத்தலில், பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திருமலை குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன், தங்கராஜ், பெருமாள், சத்திய மூர்த்தி, வேலூர் சத்துவாச்சாரி அலமேலுரங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன், ஜோதி லட்சுமி ஆகியோரை, ஆம்பூர் போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், வேலூர் கலால் பிரிவு டி.எஸ்.பி., தங்கவேலுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கவேலுவை, காட்பாடி அருகே போலீஸார் கைது செய்தனர். கைதான இவர்கள் அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், தங்களை, ஜாமினில் விடுதலை செய்யும்படி, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. டி.எஸ்.பி., தங்கவேல் உட்பட, ஏழு பேரின் ஜாமின் மனுக்களை, நீதிபதி தீனதயாளன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.