கரூர்: தமிழகத்தில், ஹெல்மெட் கட்டாயம் என்று உயர் நீதிமன்றமும், அரசும் உத்தரவிட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில், 25 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். பெரும்பாலான பெண்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதைக் காணமுடிகிறது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பெரும்பாலும் டூவீலர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களில், 75 சதவீதம் பேர் தான் ஹெல்மெட் அணிந்துள்ளனர். மற்ற, 25 சதவீதம் பேர் ஹெல்மெட் பற்றி கண்டு கொள்ளாமல் ஹாயாக செல்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.
இதன் காரணமாக கரூர் நகரம், குளித்தலை, லாலாபேட்டை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் ஹெல்மெட் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
இதை பயன்படுத்தி, மூன்று மடங்கு அதிக விலைக்கு ஹெல்மெட் விற்பதால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தினால், ஏதாவது ஒரு காரணத்தை கூறி விட்டுச் சென்று விடுகின்றனர்.
குளித்தலை டவுன் பகுதியில் மட்டும், 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
கிராமப்புற பகுதிகளில், 50 சதவீதம் பேர் கூட ஹெல்மெட் அணிவதில்லை. அதேபோல், லாலாபேட்டை பகுதியில், 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். பெண்கள் பலர் ஹெல்மெட் அணிவதில்லை.
க.பரமத்தியில் கோவை செல்லும் மெயின் ரோடு என்பதால், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். பெண்கள் பலர் பேர் ஹெல்மெட் அணிவதில்லை.
வேலாயுதம்பாளையம் பகுதியில், 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். பெண்கள் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்துள்ளனர். கிராமப் பகுதிகளில் ஹெல்மெட் அணிவதில் மக்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், போக்குவரத்து போலீஸார் அவ்வப்போது வாகன சோதனை நடத்தி, ஹெல்மெட் அணியாமல் செல்லும் டூவீலர் ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், பலர் ஹெல்மெட் அணியாமல் கையில் வைத்துக் கொண்டும், மடியில் வைத்துக் கொண்டும், டூவீலர் கண்ணாடியில் மாட்டிக் கொண்டும் செல்கின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஹெல்மெட் பற்றி கண்டு கொள்வதே இல்லை.
கரூர் நகரில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், நேற்று காலை மனோகரா கார்னரில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது, 11 பேருக்கு அபராதம் விதித்ததுடன் இனிமேல் ஹெல்மெட் அணிந்து தான் வரவேண்டும், என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.